வாழ்கின்ற வள்ளலார் - 2

சன்மார்க்கம் என்பது மனிதர்களுக்கான வாழ்க்கை நியதி. அது ஒரு சமயமோ,மதமோ அல்ல சன்மார்க்க கருத்துக்களை வாழ்க்கை இயல்பாக கொள்பவர்களின் வாழ்க்கையின் தரத்தை உயர்த்துவது தமது அரளரசாட்சியின் செயலாக வள்ளல்பெருமான் நடைமுறைபடுத்தி வருகிறார். தன்னை வணங்க வேண்டும் தமது கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று கருதுவதை விட சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் பக்குவமடைய வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு முறை மகாமந்திர பீடத்தில் சன்மார்க்கத்தை அறிந்து கொண்டு அதை பின்பற்ற முயற்சித்து வரும் ஒரு அன்பர் ஒருவர் எம்மிடம் வந்தார் .

நீண்ட நேரம் சன்மார்க்கத்தை பற்றி பேசியவர் மிகவும் சோகத்துடன் காணப்பட்டார்.

எம்மிடம் பழகும் அன்பர்கள் எம்மை விளிக்கும்போது சிலர் “ஐயா” என்பார்கள், சிலர் “ஜீ” என்பார்கள், சிலர் “சார்” என்பார்கள். இந்த அன்பர் எம்மை “ஜீ” என்று கூறுபவர். சிறிய அளவில் ஆட்டோமொபைல் எண்ணை வியாபாரம் செய்பவர். எம்மை பார்த்து,”ஜீ வள்ளலாரை வணங்கினால் அருள்சக்தியை வழங்குவார், பொருள்சக்தியை வழங்கமாட்டார் என்று கூறுகிறார்களே அது உண்மையா” என்று வினவினார்.

நாம், “உங்களுக்கு என்ன பிரச்சினை ஏன் இப்படி கூறுகிறீர்கள் தொழில் சரியில்லையா” என்றோம்.

“ஆமாம் ஜீ ஒரு நாளைக்கு நூறு,நூற்றைம்பது ரூபாய்க்கு தான் விற்பனையாகிறது எப்படி ஜீ தொழில் செய்யறது அதுதான் கவலையாக இருக்கிறது” என்றார்.

நாம்,” அப்படியா நாளைக்கு எவ்வளவு கிடைத்தால் நலமாக இருக்கும் என நினைக்கிறீர்கள்” என்றோம்.

“நாளைக்கு ஒருத்தருக்கு ஆயிரம் ரூபாய் தரவேண்டும் அதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை ஆயிரம் ரூபாய் வியாபாரமானால் நலமாக இருக்கும்”என்றார்.

அவரிடமிருந்து கடையின் பணப்பையை வாங்கி கையில் வைத்துக்கொண்டு,வள்ளல்பெருமானிடம் ” இவர் பிரச்சினையை தீர யாம் என்ன செய்யவேண்டும் என்று கேட்டோம்.

வள்ளல்பெருமான் அவர்கள்,”நாளைய தினம் இந்த அன்பரின் கடை கல்லாவில் மூவாயிரம் ரூபாய் வரவேண்டும் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நோக்கி விண்ணப்பம் வைக்கவும். அதன் விவரத்தையும் அவரிடம் கூறிவிடுங்கள்” என்றார்.

யாமும் அந்த பையை கையில் வைத்துக்கொண்டு மூன்று முறை மகாமந்திரம் கூறி நாளையதினம் மூவாயிரம் ரூபாய் கிடைக்க விண்ணப்பம் வைத்து, அந்த அன்பரிடமும் நீங்கள் ஆயிரம் ரூபாய் வியாபாரம் ஆக வேண்டும் என்றீர்கள் நாம் தங்கள் கல்லாப்பெட்டியில் மூவாயிரம் ரூபாய் விழ வேண்டும் என்று விண்ணப்பம் வைத்துள்ளோம். நாளை மாலை வரை இந்த பணப்பையை தங்களைத்தவிர யாரும் தொடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பினோம் அவரும் சந்தோஷமாக புறப்பட்டுச் சென்றார்.

மறுநாள் மாலை அந்த அன்பர் எம்மை வழக்கமான நேரத்தை விட முன்னதாகவே பார்க்கவந்தார். அவர்முகத்தில் சோகமும் இல்லை, சந்தோஷமும் இல்லை சிந்தனை மட்டுமே வெளிப்பட்டது. இன்றும் நீண்டநேரம் பேசினார் ஆனால் பணப்பிரச்சனைப்பற்றி எதுவும் கூறவில்லை ஏறக்குறைய மூன்று மணிநேரம் பேசியும் அதைப்பற்றி கூறவில்லை புறப்படும் நேரம் நெருங்கியது. நாமாகவே அதைப்பற்றி விசாரித்தோம்.

அதற்கு அவர், “ஜீ நீங்கள் மூவாயிரம் ருபாய் கிடைக்கும் என்றீர்கள், ஒரு கஸ்டமர் கடன் வாங்கி நீண்ட நாட்களாக தராமல் இழுத்தடித்து வந்தார் அவர் வந்து ஆயிரத்து ஐநூறு ருபாய் கொடுத்தார். நான் தரவேண்டிய ஆயிரம் ருபாய் கடனை அடைத்து விட்டேன். ஆனால் தங்கள் விண்ணப்பம் வைத்தபடி ஏன் மூவாயிரம் கிடைக்கவில்லை” என்றார்.

இதற்கு பதில் நாமாக தருவது சிறப்பாக இருக்காது எனக்கருதி இந்த கேள்வியை வள்ளல் பெருமானின் வசம் கேட்டோம்.அதற்கு வள்ளல் பெருமான் அவர்கள் “தங்களின் பக்குவத்திற்கு மூவாயிரம் ரூபாய்க்கு விண்ணப்பம் வைத்தீர்கள் அந்த பணம் போய் சேர வேண்டிய மனிதர் தங்களில் பாதி பக்குவம் மட்டுமே இருந்ததால் பாதி பணமட்டுமே கிடைத்தது அது உங்கள் தவறல்ல. இந்த அன்பர் இன்னும் பக்குவம் அடைய வேண்டும். மேலும் தாங்கள் வைத்த விண்ணப்ப விவரத்தை இவருக்கு தெரிவிக்காமல் இருந்திருந்தால் ஆயிரம் ரூபாய் கேட்டு ஆயிரத்து ஐநூறு கிடைத்ததே என்றும் வராத பாக்கி வசூல் ஆனதே என்றும் இங்கு வந்தவுடன் தங்கள் காலில் விழுந்து, இன்னும் பணம் கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும் என்று பவ்யமாக கேட்டிருப்பார். நம் நோக்கம் அதுவல்லவே. ஒவ்வொரு மனிதரும் பக்குவம் அடைய வேண்டும். அருட்பெருஞ்ஜோதியரின் அருளரசாட்சியில் அருள்சக்தியும், பொருள்சக்தியும் பெற வேண்டும் என்பதே நோக்கமானதால் அவருக்கு முன்னதாகவே விவரம் தெரிவிக்க கூறினோம். பக்குவப்பட்ட மனிதர்களுக்கு எல்லா வகையான தேவைகளும் பூர்த்தி செய்து கொண்டுதான் இருக்கிறோம்” என்றார்.

நாமும் பொருள் சக்தியை பெறும் பக்குவம் புரிந்துகொண்டோம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க சுபம்.

(இந்த அனுபவ வெளிப்பாட்டு கட்டுரை சென்னையிலிருந்து வெளியாகும் “தீபச்சுடர்” மாத இதழில் (செப்டம்பர் 2009) வெளியிடப்பட்டது)
-வெளிப்பாடு தொடரும்

என்றென்றும் சன்மார்க்க பணியில்
ஜோதிமைந்தன் சோ. பழநி