வாழ்கின்ற வள்ளலார் - 4

வள்ளல் பெருமான் அவர்கள் தமது சன்மார்க்க கருத்துக்களில் முழுமையாக ஈடுபாடு கொண்டு வாழ்க்கையில் கடைபிடிப்போரை எப்போதும் உடனிருந்து காப்பாற்றுவதின் மூலம் சாதாரண மனிதருக்கும் பல அற்புதமான அனுபவங்களை வழங்குகிறார் என்பதற்கு எமது வாழ்க்கையில் பல்வேறு சாட்சியங்கள் இருக்கின்றன. அந்த சாட்சியங்கள் அவர் நம்மிடையே எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கும் சாட்சியமாக அமையும்.

கடந்த 28-04-1996ம் நாள் அன்று இரவு யாமும் எமது துணைவியாரும் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து வள்ளல் பெருமான் அவர்களின் அருள்சக்தியால் ஆகாய காட்சிகளை கண்டு சத்விசாரம் செய்து கொண்டிருந்தோம்.

அது சமயம் எங்கள் சிறிய மகன் கீழறையில் தூங்கிக்கொண்டிருந்தவன் விழித்து அழும் குரல் கேட்டது (அது சமயம் அவன் வயது 14 மாதங்கள் குழந்தை)

என் துணைவியார் குழந்தைக்கு பால் கலந்து புகட்டி விட்டு வருவதாகக் கூறி எழுந்து சென்றுவிட்டார்கள். யாம் தொடர்ந்து வள்ளல் பெருமான் அருளால் அவர் எமக்கு உணர்த்திய வகையில் படுத்துக்கொண்டு மேலும் சில அற்புதக் காட்சிகளை கண்டு வியந்து கொண்டிருந்தோம், சில நிமிடங்கள் சென்றிருக்கும்.

எமது துணைவியார் மாடிப்படியில் ஏறி வருவது போலவும் அடுத்து உள்ள வீட்டின் பெண்மணி காம்பவுண்டு சுவருக்கு வெளியில் நின்று விசாரிப்பது போன்றும் கீழ்கண்ட உரையாடல் கேட்டது

“என்ன கார்த்தியம்மா இந்த நேரத்தில் மாடிக்கு போறிங்க”

“ஒண்ணும் இல்லை! கார்த்தி அப்பா மாடியில் இருக்கார் அவரை பார்க்க போறேன்”

(எங்களது மூத்த மகன் பெயர் கார்த்திகேயன் எனவே எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் கார்த்தி அப்பா, கார்த்தி அம்மா என்று எங்களை சொல்வது வழக்கம்).

இந்த உரையாடல் எமது செவியில் கேட்டவுடன் எமது உடலில் கடினத்தன்மை ஏற்பட்டு சுமார் நான்கு அங்குலம் தரையிருந்து எழும்பி அந்தரத்தில் இருக்கும் தன்மையில் எமது வாய் தானாகவே, “இங்குள்ள தீயசக்திகள் அனைத்தும் ஐந்து காதத்திற்கு அப்பால் செல்லக்கடவது! இங்குள்ள தீயசக்திகள் அனைத்தும் ஐந்து காதத்திற்கு அப்பால் செல்லக்கடவது!! இங்குள்ள தீயசக்திகள் அனைத்தும் ஐந்து காதத்திற்கு அப்பால் செல்லக்கடவது!!! “என்று வார்த்தைகளை மூன்று முறை வெளிப்படுத்தியது. அதன்பின் உடலும் யதார்த்த நிலை வந்தது. இவையனைத்தும் சிலநொடிகளில் நடந்து முடிந்தது.

என் வெளிமனதிற்கு என்ன நடந்தது என்று புரியவில்லை. துணைவியார் வரட்டும் விசாரிக்கலாம் என்று அமைதியாக இருந்தோம். ஆனால் படிக்கட்டில் அவர்பேசிய குரல் கேட்டதேயன்றி அவரும் மேலே வரவில்லை.

ஓரிரு நிமிடங்கள் கழிந்தன, அவர் வராததால் யாமே கிழிறங்கி சென்றோம். சமையலறையில் குழந்தைக்கு பால் தயாரிப்பதில் எம் துணைவியார் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.

அவரிடம் “நீ எதாவது மாடிக்கு புறப்பட்டு வந்தாயா? பக்கத்து வீட்டம்மா வந்து ஏதேனும் பேசினார்களா?” என்று வினாவினோம். அதற்கு அவர் “நானும் வரவில்லை பக்கத்து வீட்டம்மாவும் வந்து பேசவில்லை மேலிருந்து வந்ததிலிருந்து பால் தயாரிக்கவே சரியாக உள்ளது, எங்கும் நகரவில்லை” என்றார்.

யாமும் நடந்த நிகழ்வுகளை கூறி, இருவரும் இதைப் பற்றி வள்ளல் பெருமானிடம் சத்விசாரம் செய்தோம்.

வள்ளல் பெருமான் அவர்கள், “தாங்கள் மேலே தனிமையில் இருக்கும் போது ஆகாய மார்க்கத்தில் பல தேவதைகள் சென்றன. அப்போது அதில் சப்த கன்னியரில் ஒருவராக இருக்கும் மாலினி என்ற தேவதை தமது சகதேவதைகளிடம், “அங்கே பாருங்கள் ஒருவன் இருக்கின்றான், அவனை சிறிது சோதனை செய்வோமோ” என கேட்க, மற்றொரு தேவதையான டாகினி என்ற தேவதை,” வேண்டாம், அவனிடம் பிரச்சினை செய்ய வேண்டாம், நமக்குத் தொல்லைகள் வரும்” என்று எடுத்துக் கூறியது, அப்படியானல் நாம் அவசியம் அவனை நேரில் காணவேண்டும் எனக்கூறி அருகில் வந்து தங்கள் மனைவி போல் தம்மை வெளிப்படுத்த நினைத்து இரண்டும் நெருங்கின. மற்ற தேவதைகள் தூரமாக இருந்து வேடிக்கை பார்த்தன.

அது சமயம் யாம் உம்முள் புகுந்து விடுத்த கட்டளையில் ஐந்து காதத்திற்கு மேல் ஓடிப்போய் விழுந்து விட்டது. அது அருகில் இருந்து இருந்தால் அழிந்து விட்டிருக்கும் சுற்று வட்டாரத்தில் ஐந்து காத தூரத்தில் இந்த நேரத்தில் எந்த தீய சக்திகளும் இல்லை. எல்லாம் ஓடிவிட்டன . மூணே முக்கால் நாழிகை வரை அந்த வார்த்தைகளின் சக்தி இருக்கும், அதுவரை அனைத்தும் பயத்துடன் ஐந்து காத எல்லையில் இருக்கும் அதன்பிறகே இவைகள் அவை அவை இடத்திற்கு வரும் உம்மீது பெரும் சக்தியை செலுத்தி ஆன்ம பலம் நிருபிக்கப்பட்டது” என்றார்.

எம்மை பொறுத்த வரை இது போன்ற சம்பவங்களின் பயனாக யாம் கருத்தில் எடுத்துக் கொள்வது யாதெனில், சப்த கன்னியர்கள் இருக்கிறார்களா? இல்லையா? அவர்கள் பெயர் என்ன? என்பதெல்லாம் எமக்கு தேவையற்றது. அதைப் பற்றி யெல்லாம் ஆய்வு செய்து கொண்டிருந்தால் கால விரயமாகும்.

எமது உடல் தரையிலிருந்து உயர்ந்ததும், கண்ட காட்சிகளும், கேட்ட வார்த்தைகளும் நிதரிசமான உண்மை. அவற்றின் தன்மையும் உண்மையும் பற்றி மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு செயல்பட்டோம்.

இது போலவே ஒவ்வொரு அனுபவத்திலும் ஒரு உண்மையான சன்மார்க்க செயல்பாட்டுக்கு எது தேவையோ அதை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட்டு வந்தோம், இனியும் செயல்படுவோம்.

சன்மார்க்கத்தில் கடக்க வேண்டிய தூரம் மிகுந்து உள்ளது. எமது எழுத்துக்களிலும் செயல்பாட்டிலும் உள்ள் சாராம்சங்களின் அடிப்படையனைத்தும் வள்ளல் பெருமான் மீதும் அவரது கொள்கைகள் மீதும் உள்ள பிடிப்புகளின் வெளிப்பாடுதான் எனக் கொள்க.

ஒவ்வொரு சன்மார்க்கியின் ஈடுபாடும் அவரவர் செயல்பாட்டில் இருக்க வேண்டும். அதுவே சாதக நிலையிலிருந்து சாத்திய நிலைக்கு இட்டுச் செல்லும். புலமையோ, மொழியறிவோ வாத பிரதிவாதங்களோ, விமர்சனங்களோ சன்மார்க்க வளர்ச்சிக்கு தீர்வாகாது. சத்விசாரமும், பரோபகாரமும், ஜீவகருணையும் சுற்றுசூழல் தன்மையும் சரியாக அமைத்துக் கொண்டால் வள்ளல்பெருமான் நம் அனைவரையும் ஏறாத நிலைக்கு ஏற்றி வைப்பார் என்பது உறுதி.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க சுபம்.
-வெளிப்பாடு தொடரும்

என்றென்றும் சன்மார்க்க பணியில்,
ஜோதிமைந்தன் சோ. பழநி