வாழ்கின்ற வள்ளலார் - 5

நாங்கள் சமய வழிபாட்டிலிருந்து முற்றிலுமாக சன்மார்க்க வழிபாட்டை பின்பற்ற ஆரம்பித்த கால கட்டங்களில் பிரதி வியாழக்கிழமை தோறும் வள்ளலாரின் படம் வைத்து ஜோதி ஏற்றி தேங்காய் துருவல், கற்கண்டு, நாட்டுசர்க்கரை கலந்த கலவையை படையலாக வைத்து அகவல் பாராயணம் செய்து பூஜையின் முடிவில் வந்துள்ள அனைவருக்கும் பிரசாதமாக வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தோம்.

இந்த சூழ்நிலையில் கடந்த 27-06-1996 அன்று பூஜைக்காக கடைத்தெருவில் தேங்காய் வாங்கும் பொருட்டு சென்றிருந்தோம். கடைத்தெருவில் தெருவுக்கும், கடைகளுக்கும் இடையில் 20 அடிக்குமேல் இடைவெளியிருக்கும். யாம் போயிருந்தபோது அந்த இடைவெளியில் ஒரு கடையின் வாசலில் சில மரப் பெட்டிகளை வைத்து அதன் மேல் தேங்காய்களை வைத்து, ஒரு மரப்பலகையில் சாக் பீஸால் “வள்ளலார் தேங்காய்க்கடை” என்று எழுதியிருந்தது அங்கு ஒரு கிராமத்து மனிதர் கடையை பார்த்துக் கொண்டிருந்தார். எமக்கு வள்ளலார் பெயரால் தேங்காய்க்கடை என்பதை பார்த்ததும், மிகவும் மகிழ்ச்சியாகி விட்டது. வழக்கமாக ஒரு தேங்காய் வாங்குவோம், இரண்டு தேங்காயாக வாங்கி கொண்டோம். அவரைப்பற்றி விசாரித்தால் தேங்காய்க்கு விலைசொல்லி பணம் பெற்றுக்கொண்டவர் நமது விசாரணைக்கு பாராமுகமாக இருந்து விட்டார். பிறகு விசாரித்துக் கொள்ளலாம் என்று வந்து விட்டோம்.

மாலையில் வழக்கம்போல் பூஜைக்கு தயார் செய்தோம். பிரசாதம் தயார் செய்ய தேங்காய் உடைத்தால் இரண்டு தேங்காயும் அழுகி விட்டிருந்தது.

அனைவருக்கும் மிகவும் விசனமாகிவிட்டது!

வள்ளல் பெருமானிடம் இதைப்பற்றி விண்ணப்பித்தோம். வள்ளல் பெருமான் அவர்கள் , ” இராமலிங்கம் ஆசிவழங்கினேன் என் அன்பரே, ‘தேங்காய் எல்லாம் தேவையில்லை’ என்பதற்காகவே யாம் எமது பெயரால் உள்ள கடையை காண்பித்து, அதிலிருந்து வந்த தேங்காய் சரியில்லாமல் போகச்செய்தோம். மற்ற கடைகளில் வாங்கி இவ்வாறு ஆகியிருந்தால் நீங்கள் மிகவும் மன வருத்தப்படுவீர்கள், எனவே நானே அந்த சரியில்லாத தேங்காய் கொடுத்ததாக கருதி அந்த காயின் உள் சிறிது தேங்காயெண்ணை ஊற்றி, அதில் அந்த பழைய திரியை ஏற்றிவைத்து அதை வீட்டை சுற்றி வெளியில் வாசலுக்கு நேராக வைத்து விடவும். பிறகு மற்ற பூஜை ஆரம்பிக்கவும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க சுபம்.” என்று கூறிவிட்டார்.

மனம் சிறிது சாந்தி பெற்றாலும் லேசான நெருடல் இருந்தது. மறுநாள் அந்த கடைத்தெரு பகுதிக்கு சென்றோம். முந்தின நாள் கடை இருந்த இடத்தில் அந்த தேங்காய்க்கடை காணவில்லை. எந்த கடைக்கு நேராக நடை பாதையில் தேங்காய்க்கடை இருந்ததோ அந்த கடைக்காரரிடம்” இங்கு நேற்று ஒரு தேங்காய்க்கடை இருந்ததே அது எங்கே” என்று வினாவினோம்.

அந்த கடைக்காரர் “நேற்று காலைதான் அந்த மனிதர் வந்து எம்மை கேட்டுக்கொண்டு இங்கே கடைப்போட்டார். ஆனால் இன்று கடைப்போட வரக் காணோம் அவர் யார் என்றும் தெரியவில்லை” என்று கூறினார். அருகிலிருந்த மற்றக்கடைக்காரரிடமும் விசாரித்தோம். ஆனால் யாருக்கும் அவரைப்பற்றி தெரியவில்லை.

அதற்கு பிறகும் அங்கு “வள்ளலார் தேங்காய்க்கடை” என்று கடை போடப்பட வில்லை. எம்மை பொறுத்த வரை இந்த நிகழ்வு மிகவும் அதிசயிக்கதக்கதாகவே அமைந்தது.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க சுபம்.
-வெளிப்பாடு தொடரும்

என்றென்றும் சன்மார்க்க பணியில்,
ஜோதிமைந்தன் சோ. பழநி