மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி - 9 (ஜீவாத்மாக்களின் ஜீவித உரிமை-2)
ஜீவாத்மாக்களின் ஜீவித உரிமை-2
92 வது படிநிலை என்பது மனிதன் தனது ஸ்தூல தேகத்தை விட்டு பிரிந்த உடன் தான் தனது 91 வது படிநிலையாகிய மனித நிலையில் செய்த செயல்பாடுகளுக்கு ஏற்ப படிநிலை கீழிறங்குவதா அல்லது மேலேறுவதா அல்லது மீண்டும் மனித பிறவிக்கு செல்வதா என்ற அடிப்படையில் காத்திருக்கும் நிலையாகும். இந்த நிலையில் அந்த ஆன்மாவிற்கு மனித நிலையில் இருந்த போது இருந்த அத்தனை குணநலங்களும் இருக்கும். யோனி பேதம் அறிவார்கள். ஆன்மாக்களுக்கு உள்ள யோனி பேதம் இந்த நிலையோடு முற்றுப் பெறுகிறது. ஆனால் அந்தகார இருளில் இந்த ஆன்மாக்கள் இருக்கும்.
மேலும் இயற்கை நியதிப்படி மரணமடையாமல் விபத்துக்களாலோ வன்முறைகளாலோ அவனுடைய உடலை விட்டு ஆன்மாவானது வலுக்கட்டாயமாக பிரிக்கப் பட்டிருந்தாலும் இயற்கை மரணம சம்பவிக்க வேண்டிய நாள் வரும் வரை அந்த மனிதனின் ஆன்மா இந்த காத்திருக்கும் நிலையில்தான் வைக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில் உலவும் ஆன்மாக்கள் வாழும் போது துர்குணங்கள் கொண்டிருந்தால் அவற்றின் நிலை பேய்கள் நிலை என்றும் பேராசை கொண்ட மனிதர்களின் நிலை பைசாச நிலை என்றும் வேதங்கள் கற்றுணர்ந்த மனிதனின் ஆன்ம நிலை பிரம்ம ராக்ஷச நிலையென்றும் கூறப்படும். மேலும் உலகியலில் ஆட்சியதிகாரம் செய்ய பூமியானது மாவட்டங்களாக பிரிக்கப் பட்டிருப்பது போல் ஆன்ம நிலையிலும் முப்பது மைல் ஆரமாக கொண்ட ஒரு பகுதிக்கு ஒவ்வொரு பைரவர் தலைமையேற்று காத்திருக்கும் ஆன்மாக்களை வழிநடத்துவார். இந்த பைரவர் என்பது ஒரு பதவியாகும். முப்பது மைல் ஆரமுள்ள பகுதியில் காத்திருக்கும் நிலையிலுள்ள ஆன்மாக்களில் எந்த ஆன்மா அதிக அருள்சக்தி பெற்ற்ள்ளதோ அதுவே அடுத்த படிநிலை செல்லும் வரை பைரவராக இருக்கும். அதே சமயம் அந்த ஆன்மாவை விட அதிக அருள் சக்தி ஆன்மா ஸ்தூல தேகத்தை விட்டு வந்தாலும் தானாக அந்த பதவி அந்த ஆன்மாவிற்கு சென்றுவிடும்.
எந்த காலகட்டத்திலும் காத்திருக்கும் நிலையிலுள்ள ஆன்மாக்களில் மிக உயர்ந்த சக்தியுள்ள ஆன்மாவே பைரவ நிலையில் இருக்கும். அதனால் பதவி மாற்றம் என்பது சில மணிநேரங்களிலும் நடக்கலாம். சில வருடங்களிலும் நடக்கலாம். பதவிக் காலம் என்று அந்த பகுதியில் வாழும் மனிதர்களின் அருள் சக்தியும் மரணமும்தான் நிர்ணயிக்கும். மேலும் எந்த ஒரு ஆன்மாவும் இந்த காத்திருக்கும் நிலையில் சிறிது காலம் இருந்த பின்னரே அடுத்த நிலை செல்ல இயலும். மேலும் பைரவ நிலையிலுள்ள ஆன்மாக்களுக்கு அந்த பகுதியிலுள்ள மனிதர்களின் மரணம் ஆறு மாதங்களுக்கு முன்பே தெரிய வரும்.
பெரும்பாலான மனித சக்திக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள் இந்த படி நிலையிலுள்ள ஆன்மாக்களால் நடத்தப் படுகின்றன. இந்த படிநிலை ஆன்மாக்களால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகளை விட தீமைகளே அதிகம். மேலும் மாந்திரீக வசப்படும் தன்மையும் இந்த நிலையில் ஏற்படுகின்றது. அத்துடன் ஏற்கனவே மனிதர்களாக வாழ்ந்து பஞ்சகிருத்தியம் வரை சென்ற ஆன்மாக்கள் கூட படிப்படியாக சக்தியழந்து அடுத்த பிறவிக்காக இந்த படிநிலைக்கு வந்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டால் மாந்திரீகர்கள் வசப்பட்டு ஏவல் தெய்வத் தன்மை அடைகிறார்கள். மீண்டும் யோனி வர்க்கத்தில் செல்ல முடியாமல் மந்திர சக்தியால் தடை செய்யப்பட்டு சில காலம் மனிதர்களின் சுய நலத்திற்கு பயன்படுத்த படுகிறார்கள். அது சமயம் மனித நிலையிலுள்ள யாரேனும் அருளாளர்கள் முன்வந்து தான் அவர்களின் மந்திர கட்டுக்களை விலக்கி அந்த ஆன்மாக்களை பிறவிக்கு அனுப்புவதோ தற்சுதந்திரத்தை ஏற்படுத்துவதோ செய்ய வேண்டியுள்ளது.
மேலும் இந்த காத்திருக்கும் நிலையிலிருந்து தக்க நேரம் வந்ததும் தமது சுதந்திரத்தை பாவத்திற்கு பயன்படுத்தியவன் மீண்டும் படியிறங்கி 1 முதல் 90 படிநிலைகளில் தமது ஆன்மாவை இறைவனால் செலுத்தப்படும் நிலைக்கு ஆளாக்கிக் கொள்கிறான் தமது சுதந்திரத்தை புண்ணியத்திற்கு பயன்படுத்தியவன் 93வது முதல் 98வது படி நிலை வரை சில காலங்களுக்கு தெய்வ நிலைக்கு தமது உயர்த்திக் கொண்டு மீண்டும் மனித பிறவிக்கு வருகிறான்
90 வது படிநிலை வரை படிப்படியாக இறைவனால் வழி நடத்தப்பட்ட ஆன்மாவானது 91வது படி நிலையான மனித நிலையில் செய்த செயல்பாட்டின் காரணமாக நேரடியாக 93 முதல் 108 வரையான படிநிலைகளில் அமையப்பெறுகிறது அந்த விவரங்களையும் காண்போம்.
93 வது படிநிலை என்பது மனித நிலையில் வாழும் போதே தனது அகந்தையை அழித்து தனக்கும் இறைவனுக்கும் இடையேயுள்ள கருப்பு திரையை நீக்கி ஓரளவு நீல நிறமுள்ள உலகில் சஞ்சரிப்பவர்கள். இவர்க்ள் சிறிதளவு ஆன்ம சக்தி உள்ளவர்கள்.தெய்வ படிநிலைகளில் ஏழுபடி நிலைகளான மாயா படிநிலையில் முதல் படி நிலையில் இருப்பார்கள்
94 வது படிநிலை என்பது மனித நிலையில் வாழும் போது அகந்தையை அழித்து இறைவனின் படைப்பினை புரிந்து நிலையாமையை கருத்தில் கொண்டு தர்ம நெறிமுறைப்படி வாழ்ந்தவர்கள் அடையும் நிலையாகும். இவர்கள் இறைவனுக்கும் தமக்கும் இடயேயுள்ள கருப்புத் திரை, நீலத்திரை இரண்டையும் நீக்கி ஓரளவு பசுமையான காட்சிகள் தெரியும் உலகில் சஞ்சரிப்பவர்கள். மாயா தெய்வ நிலைப்படிகளில் இரண்டாவது படிநிலையில் இருப்பவர்கள். தமக்கு கீழுள்ள படிநிலை ஆன்மாக்களை விட சிறிது சக்தி அதிகம் படைத்தவர்கள்.
95வது படிநிலை என்பது மனித நிலையில் வாழும் போது அகந்தையை அழித்து நிலையாமையை கருதி தர்ம நெறியில் வாழ்ந்து பிறர் பொருள் மீது ஆசை வைக்காமல் தமது உழைப்பால் கிடைக்கும் வருவாயை கொண்டு தேவையற்ற ஆசைகளை விட்டொழித்து இறைவனுக்கும் தமக்கும் இடையேயுள்ள கருப்பு, நீலம், பச்சை ஆகிய திரைகளை நீக்கி கொண்டு சிவந்த நிற உலக காட்சிகளை ஓரளவு தெளிவுடன் அறியும் நிலை பெற்ற ஆன்மாக்கள் தமக்கு கீழுள்ள படிநிலை ஆன்மாக்களை விட சிறிதளவு ஆன்ம சக்தி அதிகம் பெற்றவர்கள்.
96வது படிநிலையில் மனித வாழ்க்கையில் சரியை வழிபாடுகள் மூலம் ஞான சித்தி பெற்ற ஆன்மாக்கள் அடையும் படிநிலையாகும். இவர்கள் இறைவனுக்கும் தமக்கும் இடையேயுள்ள ஏழு மாயா திரைகளில் கருப்பு,நீலம்,பச்சை சிவப்பு ஆகிய திரைகளை விலக்கிக் கொண்டு ஓரளவு மஞ்சள் நிறமான காட்சிகளை ஓரளவு தெளிவுடன் காணும் உலகில் சஞ்சரிப்பவர்கள். தெய்வ நிலை மாயா படி நிலைகளில் நான்காவது படிநிலையில் இருப்பவர்க்ள்.
97வது படிநிலையில் மனித வாழ்க்கையில் கிரியை வழிபாடுகள் மூலம் ஞானத்தை அடைந்தவர்களின் ஆன்மாக்கள் அடையும் படி நிலையாகும். இவர்கள் இறைவனுக்கும் தமக்கும் இடையேயுள்ள ஏழு மாயா திரைகளில் கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு மஞ்சள் ஆகிய திரைகளை விலக்கிக் கொண்டு வெண்மை ஒளிரும் காட்சிகளை ஓரளவு தெளிவுடன் காணும் உலகில் சஞ்சரிப்பவர்கள். தெய்வநிலை மாய படிகளில் 5வது படிநிலையில் அமர்ந்திருப்பவர்கள்.
98வது படிநிலையில் மனித வாழ்க்கையில் யோகத்தின் மூலம் ஞானம் பெற்ற ஆன்மாக்கள் அமர்ந்திருப்பார்கள். இவர்கள் இறைவனுக்கும் தமக்கும் இடையேயுள்ள ஏழு மாயா திரைகளில் கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள், வெள்ளைஎனும் ஆறு திரைகளை நீக்கி பல வண்ணமயமான உலகில் சஞ்சரிப்பவர்கள். தெய்வநிலை மாயா படிநிலைகளில் ஆறாவது படிநிலையில் அமர்ந்திருப்பார்கள்.
இந்த 98வது படிநிலைக்கான யோக்யதையை மனித நிலையில் பெற்றவன் பிறகு சர்வ ஜாக்ரதையாக செயல்பட வேண்டும்.
(தொடரும்)
ஜோதிமைந்தன் சோ. பழநி
