மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி - 13 (தாரக மந்திரம்)

மகாமந்திரமும் தாரகமந்திரமும்
(தொடர்ச்சி)

மாயா திரைகள் மூடிய நிலையில் அதுவே ஜீவாத்மா திரைகள் அனைத்தும் விலகிய நிலையில் அதுவே பரமாத்மா மகா மந்திரத்தை உபயோகிப்பதன் மூலம் மனிதராய் பிறந்த அனைவரும் சாதி சமய பேதமின்றி இந்த அனுபவத்தை உணரலாம். நமக்குள் நாம் பரமாத்மாவை தரிசித்து விட்டோம் எனவே நாம்தான் இறைவன் என்று யாராகிலும் நினைத்தால் அதுவே அவர்களை அழிவின் விளிம்பிற்கு அழைத்து சென்றுவிடும். நமக்குள் பரமாத்மா இருப்பது போல் எல்லா ஜீவ ராசிகளிலும் இறைவன் இருக்கிறார் என்பதை உணர்த்தவே இந்த காட்சியை அளிக்கிறார்.

இதன் மூலம் மேன்மேலும் பக்குவம் அடைந்து பக்குவநிலை படிநிலை உயர பயன்பட வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம் அதற்கு மாறாக எல்லாம் நானே என்ற எண்ணம் உருவானால் முற்றிலும் அழிவை நோக்கிச் சென்றிடுவோம்.இறைவனுக்கும் நமக்கும் தொலைதூரம் ஆகிவிடும். மேலும் நமது ஞானேந்திரியமானது பிண்டத்தினுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தரிசிக்க உள்முகமாக செல்கையில் நமது சூக்கும தேகமானது அண்டத்தினுள் பிரயாணம் செய்து மனிதனின் 91 வது படிநிலைக்கு மேற்பட்ட ஆன்மாக்களை அந்தந்த படிநிலையை கடந்து பிரயாணம் செய்கையில் காண்கிறது. அந்த காட்சிகள் உள்முகமாக வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் நாம் சரியை, கிரியை நிலைகளில் வழிபடும் தெய்வங்கள் நடமாட்ட நிலையில் காணும் வாய்ப்பு கிட்டும்.

அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரமானது நினைத்து பார்க்க இயலாத அளவு சக்தியுடையது என்பது எமது அனுபவத்தால் கண்ட உண்மை. வள்ளல் பெருமான் இந்த மந்திரத்தை இரண்டு வகையாக உச்சரித்து பயன் பெறலாமென அருளியதுடன் அதற்கான சாட்சியங்களையும் எங்களுக்கு பல்வேறு சன்மார்க்கிகள் மூலம் அளவறிந்த அனுபவங்களையும் அளித்துள்ளார். மகாமந்திரத்தையே

அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி

என உச்சரித்தால் அது தாரக மந்திரமாக அமைகிறது. தாரக மந்திரமாக தனிப்பெருங்கருணை எனும் வார்த்தையை இரண்டாவது நிலையில் வைத்து உச்சரித்தால் மனிதனுக்கு இந்த லெளகீக உலகில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் விலகுகிறது. மாந்தீரிக பாதிப்புகளும், அருவநிலை ஆன்மாக்களின் அத்து மீறிய செயல்பாடுகளும், மனநிலை பாதிப்புகளும் வாழ்க்கையில் நியாயமாக கிடைக்க வேண்டிய வரவுகளும் நிறைவேற்றி, வாழ்க்கை பிரச்சனைகளை தீர்த்து வைத்து மனிதனின் மனதில் அமைதியை ஏற்படுத்தி பொருள் சக்தி பெருக்க உதவுகிறது. மகாமந்திரமாக தனிப்பெருங்கருணை எனும் வார்த்தையை மூன்றாவது நிலையில் வைத்து உச்சரித்தால் அமைதியான மனநிலையில் மாயா திரைகளை விலக்கி மனிதனுக்கு அருள் சக்தியை பெருக்க செய்து தெய்வநிலைக்கு உயர்த்துகிறது. இந்த அடிப்படையில் அருட்பெருஞ்ஜோதி மந்திரத்தை இரண்டு விதமாகவும் உச்சரித்து அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஏற்ப செயல்பட்டு பொருள் சக்தியும், அருள் சக்தியும் பெற்று சன்மார்க்க சக்தியை உலகிற்கு நிரூபித்த சாட்சியங்கள் பல உண்டு. மேலும் இந்த மந்திரமானது முழு அலைவரிசையை பூர்த்தி செய்து, அன்பினால் செயல்படுபவர்களுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் நேரடித்தொடர்பை ஏற்படுத்துகிறது. இந்த மந்திரத்திற்கு கர்த்தாக்களின் உதவி தேவையில்லை என்பதுடன் மந்திரத்தின் அலையானது பஞ்சகிருத்தி கர்த்தாக்களையும் கடந்து ஞானத்தையும் கடந்து நேரடியாக ஆண்டவரை அடைந்து அவரிடமிருந்து அருளை நேரடியாக பெற்று தருகிறது. மனிதனையும் 108 வது படிநிலைக்கு அழைத்து சென்று அருட்பெருஞ்ஜோதியுடன் கலக்கும்படி செய்யவல்லது. மகாமந்திரத்தில் ஆரோகணம், அவரோகணம் இரண்டும் இருந்து அலைவரிசை பூர்த்தியவதால் ஓங்காரம் இணைந்து சொல்ல அவசியமில்லை.

நாம் மகாமந்திரம் என்றும் தாரக மந்திரம் என்றும் இரண்டு வகையாக அருட்பெருஞ்ஜொதி மந்திரத்தை கூறுவது பற்றி வள்ளல்பெருமான் வெளிப்பட உரைக்கவில்லையே என அன்பர்களுக்கு ஐயப்பாடு எழுவது இயற்கை. மற்ற மந்திரங்களுக்கு எல்லாம் வெறுமனே மூச்சுக்காற்றை உள்ளிழுத்து மந்திர சொற்களை மூச்சுக்காற்றின் பயனால் வெளிப்படுத்துவதே நடைமுறையாக உள்ளது. வள்ளல் பெருமான் அவர்கள் வழிபாட்டில் பதினைந்தாவது நிலையான ஞானத்தில் யோகத்தை ஞானதேக செயல்பாடாக உணர்த்திய போது யோக மகாமந்திரம் என்றும் யோக தாரக மந்திரம் என்றும் அருளினார். அருட்பெருஞ்ஜோதி மந்திரம் மட்டுமே மூச்சை உள்வாங்கும் போது தாரக மந்திரமாகவும் வெளியிடும்போது மகாமந்திரமாகவும் இரண்டு நிலையிலும் மந்திர உச்சாடனம் நடைபெறுவதன் மூலம் ஞானத்தில் யோகம் கை கூடுகின்றது. மூச்சை உள்வாங்குவது ஆரோகணம் வெளியிடுவது அவரோகணம் எனக்கொள்க. யோக தாரக மந்திரத்திற்கு யோக மகாமந்திரம் ஆரோகணமாகவும் யோக மகாமந்திரத்திற்கு யோகதாரக மந்திரம் ஆரோகணமாகவும் செயல்படும் இதன் விவரம் அடுத்து வரும் அத்தியாயங்களில் வெளியிடுவோம். ஓங்காரத்தின் செயல்பாட்டை இந்த மந்திரத்தில் அன்பு எனும் உணர்வு செயல்படுத்துகிறது. மேலும் ஓங்காரமானது அருள் சக்தியை கர்த்தாக்களிடம் கொண்டு வந்து சேர்த்து பிறகு நாம் அதிலிருந்து சக்தி பெற இயலும். ஆன்மாவை சதாசிவ நிலைவரைக்கும் மட்டும் அழைத்து செல்லும். மகாமந்திரமானது நேரிடையாக சக்தி தருவதுடன் ஞானத்தையும் கடக்க செய்ய வல்லது. இந்த மந்திரத்தின் பெருமையை சொற்களால் கூறுவதைவிட அனுபவித்து தெரிந்து கொள்வதே நல்லதொரு செயலாகும். ஓங்காரம் எதை அடிப்படையாக கொண்டு அமைகிறது என்பதையும், அதன் நிலையையும் ஓங்காரமும் உருவ வழிபாடும் என்ற தலைப்பில் அடுத்த அத்தியாயத்தில் ஆய்வு செய்வோம்.

திருவளர் திருஅம்பலத்திலே அந்நாள் செப்பிய மெய்ம்மொழிப்பொருளும்
உருவளர் திருமந்திர திருமுறையால் உணர்த்திய மெய்மொழிப்பொருளும்
கருவளர் அடியேன் உளத்திலே நின்று காட்டிய மெய்மொழிபொருளும்
மருவி என்உளத்தே நம்பிநான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.

(தொடரும்)

ஜோதிமைந்தன் சோ. பழநி