மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி - 15 (சத்திய யுகத்தில் சன்மார்க்க பணி)
சமயங்கடந்த தனிப்பொருள் வெளியாய்
அமையுந்திருச்சபையருட்பெருஞ்ஜோதி
(அகவல்-61-62)
எச்சபை பொதுவென இயம்பினரறிஞர்கள்
அச்சபையிடங்கொளும் அருட்பெருஞ்ஜோதி
(அகவல்-99-100)
ஏழு முறை தொடர்ந்தாற்போல் ஆன்மாவிற்கு மனிதபிறவியளித்து தமது சுதந்திரத்தைசரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள இறைவன் வாய்ப்பளிக்கிறார். அதாவது தொண்ணூறு படிநிலைகளை கடந்து மனித பிறவிக்கு வந்திருந்தாலும் அல்லது தெய்வ படிநிலைகளிலிருந்து இறங்கி வந்து மனிதனாக பிறவி எடுத்திருந்தாலும் அந்த ஆன்மாவிற்கு தொடர்ந்தார்போல் ஏழு பிறவிகளை மனிதனாக உருவாக்கி அவன் தனது சுதந்திரத்தை பயன்படுத்தியதை அடிப்படையாகக்கொண்டு அடுத்த நிலையடைகின்றான். சில ஆன்மாக்கள் ஏழுபிறவி எடுக்காமலேயே அதற்கு முன்னதாகவெ கொடிய பாவங்களால் கீழ்நிலைக்கோ அல்லது ந்ல்ல செயல்களால் மேல்நிலைக்கோ சென்று விடுகின்றன. இந்த பயணஓட்டத்தில் மனிதனாய் பிறந்தவனுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பல ஆன்ம சோதனைகளை நடத்தி உயர்வும் அளிக்கின்றார். மேலும் இறைவனின் பெயரால் மனிதசமுதாயம் வஞ்சிக்கப்படும் பொழுது சில தீர்க்கதரிசிகளை ஆங்காங்கே உருவாக்கி அவர்கள் வாழ்கின்ற இடம், சூழ்நிலை, காலம் இவைகளை அடிப்படையாகக்கொண்டு அவர்கள் மீது காரியப்படுகின்றார். ஆன்மீகத்தில் மறுமலர்ச்சி அல்லது புரட்சி ஏற்பட அவர்களை கருவியாக பயன்படுத்துகின்றார். இவ்வாறாக தீர்க்கத்தரிசிகளை உருவாக்கி அவர்கள் மீது அருட்பெருஞ்ஜோதியர் காரியப்படும்போது அவர்களுக்கு அருளகங்காரத்தையும் அளிக்கின்றார். அதே சமயம் அவர்களது பதினான்கு துர்க்குணங்களும் முழுமையாக விலகாமல் சில பாதிப்புகளை உருவாக்குகின்றன.
தீர்க்கதரிசிகளுக்கு ஆண்டவர் தத்துவங்களையும் கருத்துக்களையும் எடுத்துரைக்கும்போது எல்லோருக்கும் ஒரேமாதிரியாகத்தான் எடுத்துரைக்கிறார். ஆனால் அந்த கருத்துக்கள் அவ்வப்போது அந்தந்த தீர்க்கதரிசிகளின் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளுக்கு ஏற்ப உருப்பெறுகின்றன.சில சமயங்களில் தீர்க்கதரிசிகளின் மனோபலவீனமும் அறிவு வியாபகமும் சேர்ந்து கருத்துக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. வெளிப்படுத்துகின்ற கருத்துக்கள் அனைத்தும் இறைவன் காரியப்பட்டதால் வெளிப்படுவதாலும் அதனுடன் அருளகங்காரமும் வெளிப்படுவதாலும் அந்த தீர்க்கதரிசியையே அவரை பின்பற்றும் மனிதர்கள் இறைவனாக எண்ணுகின்றார்கள், கிணற்று தவளைகளாக மாறிபோகின்றார்கள். காலத்திற்கு அப்பாற்பட்ட கடவுளின் தன்மையை காலத்தால் அழியக்கூடிய மனிதனின் புகழுக்கு கற்பிக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு தீர்க்கதரிசியின் வழி வந்தவர்களும் தங்களுக்கென்று என்று ஒரு தனி வழியை உருவாக்கி சமயம்,மதம் எனும் குறுகிய வட்டத்திற்குள் இருந்துகொண்டு அந்த வட்டத்திற்குள் மற்றவர்களை இழுக்கமுற்படுவதுடன் வராதவர்களை வெறுக்கவும் முற்படுகின்றனர். இதுவே ஒரு காலகட்டத்தில் வெறியாக மாறி தமது வழியை ஏற்றுக்கொள்ளாதவர்களை அழிக்கவும் முற்படுகின்றனர்.
இறைவன் எதற்காக அந்த தீர்க்கதரிசியை உருவாக்கினாரோ அந்த தத்துவம் பின்னால் வருபவர்களால் சிதைக்கப்படுகின்றது. தமக்கென்று வழிமுறையை தனியாக் உருவாக்கி தமது பெயரால் மக்களை வழிநடத்திய தீர்க்கதரிசிகளால் மனித சமுதாயம் அடைந்த நற்பலனை விட தீமைகளே அதிகம். எனவே இறைவன் தன்னையே முன்னிலைப் படுத்திக்கொண்டு செயல்படும் எந்த தீர்க்கதரிசியையும் கடும்தண்டனைக்கு ஆளாக்குகிறார். எனவேதான் பெரும்பாலான ஞானிகள் தானே உயர்ந்தவன் தான் சொல்வதே சரியானது என்ற கருத்தை வலியுறுத்துவதில்லை. தன் கருத்தின் சிறப்பை மட்டும் எடுத்துக் கூறுவார்கள்.சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு முறைகளில் அவரவர் பக்குவ நிலைக்கு ஏற்ப வழிபாடு செய்யுங்கள் என்று கூறினார்கள். எதையும் யார் மீதும் திணிக்கவில்லை. அதே சமயம் திணித்தவர்களும் பாதிக்கப்பட்டு, அவர்கள் வழிமுறைகள் வழக்கொழிந்து போயின.
இந்த சூழ்நிலையில் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த உலகில் வழிபாடுகள் தோன்றி மறைந்து, தோன்றி மறைந்து ஒரு இடைவிடாத செயலாக்கம் நடந்து வருகிறது. தற்போதைய காலகட்டம் அடுத்து வரக்கூடிய பல்லாயிரம் ஆண்டுகளை வழிநடத்தும் கருத்துக்களை உருவாக்கும் ,ஞானசித்தர்களை உருவாக்கும் சத்யயுகத்தின் ஆரம்பமாக அமைந்து விட்டது. யுகபுருஷனாக வள்ளல் பெருமானும் தோன்றி சாதி,மத, சமய,கலாச்சார பேதமின்றி இறைவனின் தத்துவங்களை மட்டும் உள்ளடக்கிய அருட்பெருஞ்ஜோதி அகவலையும் தந்து ஞான தேகத்திலிருந்து வழி நடத்தி வருகின்றார். வள்ளல் பெருமானை வழிபடுபவர்களோ சமய சன்மார்க்கிகள் என்றும் சுத்த சன்மார்க்கிகள் என்றும் இரண்டு பெரும் பிரிவு நிலையாக இருந்துக் கொண்டு பரஸ்பரம் குறை கூறிக்கொண்டு இருக்கின்றார்கள். இன்னும் சிலரோ ஜீவகாருண்ய ஒழுக்கத்தையெ கடைப் பிடிக்காமல் வள்ளல் பெருமானை சிறு தெய்வம் போல் வணங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.வெரு சிலரோ வள்ளல் பெருமானை மேடைப் பேச்சின் கருப்பொருளாக மட்டும் வைத்துக் கொள்கிறார்கள். மற்றும் பலர் பொருளீட்ட அவரது கொள்கைகளை சாதனமாக பயன்ப்படுத்துகின்றார்கள். இவ்வளவு சூழ்நிலைகளுக்கு இடையில் சன்மார்க்கத்தின் பணி என்ன என்பதை ஆய்வு செய்துஅது மக்களிடையே சென்று பயனளிக்க தக்க வகையில் செயல்படுபவர்கள் அங்கங்கே அத்தி பூத்தார்ப்போல்தான் காணப்படுகிறார்கள்.
இந்த சூழலில் சன்மார்க்கத்தின் பணி என்ன என்பதை ஆண்டவரின் அருட்கட்டளைப்படி வள்ளல் பெருமான் எமக்கு உரைத்த விஷயங்களை எடுத்துரைப்போம். வள்ளல் பெருமானை குருவாகவும் இறைவனாகவும் எப்படி வணங்குபவர்களாக இருந்தாலும் இவர்கள் வள்ளல் பெருமான் மீது உண்மையில் நம்பிக்கை வைத்திருந்தால் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தனிப்பட்ட முறையில் குறை சொல்வதை நிறுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும். மேலும் வள்ளல் பெருமான் இனி ஞான சித்தர் காலம் என கூறிவிட்டபிறகு சமயங்கடந்த நிலையில் ஒவ்வொருவரும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் முழு நம்பிக்கை வைத்து வள்ளல்பெருமானை போன்று ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடை பிடித்து தயா நிலையை கைகொள்ள வேண்டும். பொதுமக்கள் சமய ரீதியாகத்தான் இறைவனை வழிபட இயலும் என்ற எண்ணத்தை போக்கி சமயங் கடந்த நிலையில் எவ்வாறு இறைவனை வணங்குவது என்ற வழியை மக்கள் முன் வைக்க வேண்டும்.
வள்ளல்பெருமான் போல் அனைவரும் 108 வது படிநிலையை அடைய முயற்ச்சிக்க வேண்டும். இவ்வாறு முயற்சிப்பவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். இதில் போட்டி பொறாமை கூடாது. ஏனெனில், 108 வது படிநிலையை அடைய முற்படுகையில் 93 முதல் 107 வரை உள்ள படிநிலைகளில் பல்வேறு நிலைகளில் 512 கோடி ஆன்மாக்கள் அமர இடமிருக்கிறது. இந்த இடங்கள் அனைத்தும் நிரம்பினால் தான் முழுமையான ஞான சித்தர்காலம் உருவாகும். எனவே யாருடைய உயர்வும் யாரையும் பாதிக்காது. இந்த அடிப்படையில் நாம் செய்யும் விமரிசனமானது உள்நோக்கமின்றி அடுத்த மனிதரை படிநிலை உயர்த்துவதற்கு உதவ வேண்டுமே தவிர அவரின் ஊக்கத்தை குறைப்பதாக இருக்கக் கூடாது. அதே சமயம் பிறமனிதர்கள் தன்மீது சுட்டிக் காட்டும் பலவீனங்களை பெருமான் சொன்னதாகக் கருதி திருத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அல்லது பரஸ்பரம் இருவரும் சத்விசாரம் செய்து அடுத்த உண்மை நிலையை அறிய முயற்சிக்க வேண்டும். அதை விடுத்து தம்மை குறை கூறி விட்டதாகக் கோபம் கொள்ளலாகாது. கோபமானது படிநிலையை கெடுக்கும். சன்மார்க்கத்தின் பணியே தேவசபையை நிரப்புவதாக இருக்க வேண்டும் யாம் இவ்வாறு கூறுவதிலிருந்து சிறுதெய்வங்களை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டுமா என்ற கேள்வி எழும்.
தேவ சபை என்பது சமயத்திற்கு உட்பட்டதல்ல அவரவர் ஆத்ம சக்திக்கு உட்பட்ட பதவியை அளிக்க கூடியது. எவ்வளவு பெரிய சமயத்தை சார்ந்தவராயினும் எவ்வளவு புகழை மனித நிலையில் ஈட்டி இருந்தாலும் ஆத்ம சக்தி இருந்தால் மட்டுமே தேவ சபையில் இடம் பெற முடியும். தேவ சபை என்பன சமயங்களிலும், புராணங்களிலும் கூறியவாறு கற்பனை செய்ய வேண்டாம். வள்ளல்பெருமான் கூறிய தேவ சபையை ஏற்கனவே ஜீவாத்மாக்களின் ஜீவித உரிமை என்ற தலைப்பில் கூறியுள்ளோம். அதை உருவகப்படுத்திக் கொள்ளவும். அதில் இடம் பெருவதற்கான இலக்கணத்தையும் வகுத்துள்ளோம். அதை அடிப்படையாகக் கொண்டு மேலும் தான் உயர என்ன செய்ய வேண்டும் என்று சத்விசாரம் செய்யவும்.
(தொடரும்)
அடுத்த தொகுப்பு வெளியீடு அடுத்த வாரம்
ஜோதிமைந்தன் சோ. பழநி
