மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி - 17 (சன்மார்க்கத்தில் சமுசாரிகளின் நிலை)
சன்மார்க்கத்தில் சமுசாரிகளின் நிலை
தாழ்வெலாந் தவிர்த்து சகமிசையழியா
வாழ்வெனக் களித்த வளரொளி மணியே
(அகவல்-1307-1308)
ஐந்தொழிலதிபர்கள் என்று கூறப்படுகின்ற பஞ்ச கிருதி கர்த்தாக்கள் கூட தங்களுடைய கிருத்தியங்களை சமுசாரிகளை அடிப்படையாகக் கொண்டுதான் செய்ய இயலும் ஒரு கற்பனைக்காக எடுத்துக் கொள்வோம், மனிதர்கள் ஆண், பெண் அனைவரும் துறவு நிலை மேற்கொண்டால் எப்படி உலகை வழி நடத்த இயலும் . படைத்தல் நடக்காவிடில் மற்ற கிருத்தியங்களுக்கு அங்கு வேலை இல்லாமல் போய்விடும். மக்களை வழி நடத்த முன் வந்த யோகியர், ஞானியர்களில் பெரும்பாலானவர்கள் துறவு நிலைதான் மனிதனுக்கு உகந்தது என்ற கருத்தை வலியுறுத்தியே தமது கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார்கள். இதன் தாக்கமாக பக்தியானது ஒருநிலைக்கு மேல் ஏற்படும்போது ஆணாக இருப்பினும் பெண்ணாக இருப்பினும் குடும்பத்தை பிரிந்து வாழும் சூழலே நடைமுறையில் இருந்து வருகிறது.
மேலும் சிறு தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் பக்தி அதிகரிக்கும்போது குடும்ப கடமைகளையும் துறந்து செல்கிறார்கள். இதனால் பொதுவாக பக்தி என்பது லௌகீக வாழ்க்கைக்கு எதிரானது என்ற கருத்து நிலவுவதுடன் இளமையில் ஏற்படும் பக்தியை கண்டு குடும்பத்தினர் அச்சப்படுகின்றார்கள். அவர்களின் அச்சத்தை உண்மைபடுத்துவதுபோல் ஆங்காங்கே சில இளைஞர்களும் சரியான வழிகாட்டுதலின்றி பக்தியில் ஆழ்ந்து செயலிழந்து போகிறார்கள். முக்கியமாக நாம் ஒன்றை கவனத்தில் கொள்ளவேண்டும். புராணங்களை அடிப்படையாக கொண்டு பார்த்தால் ஒரு துறவு நிலை பூண்டவர் அதிகபட்சமாக பிரம்ம ரிஷியாகத்தான் உயர முடியும் என அறிகிறோம். ஆனால் இல்லறத்தில் இருப்பவர்கள் முயற்சி செய்தால் சதாசிவ நிலைக்கும் உயர முடியும் என அறிகிறோம். மேலும் பண்டைய காலத்தில் உயர்நிலையடைந்த அத்தனை முனிவர்களும் குடும்ப சகிதராகவே இருந்து மனைவி மக்களுடன் வாழ்ந்தே உயர்ந்திருக்கிறார்கள்.
குடும்பம் ஆன்மாவின் உயர்வுக்கு தடைக்கல் என்பது மனிதனை முட்டாளாக்கும் முயற்சி என்பதே உண்மை. உண்மையான முயற்சியுடையவனுக்கு குடும்பம் உதவிகரமாக இருக்கும்படியாகவே இறைவன் உருவாக்குவார். இந்த சூழ்நிலையில் நமது ஞான குரு வள்ளல் பெருமான் இரண்டில் எதையும் உயர்ந்தது, தாழ்ந்தது என்று வலியுறுத்தாமல் துறவிகளுக்கும் இல்லறத்தார்க்கும் தனித்தனியே கைக்கொள்ளவேண்டிய வழிமுறைகளை வகுத்துள்ளார். இதுவரை சன்மார்க்க பெரியோர்கள் வெளியிட்டுள்ள நூல்கள் அனைத்தும் துறவு நிலைக்கு ஏற்ற நூல்களாகவே வெளியிட்டுள்ளார்கள்.
இல்லறத்தார்கள் சுத்த சன்மாக்கத்தை எவ்வாறு கடை பிடிப்பது என்பதை கூறும் நூல்கள் அவ்வளவாக வெளி வரவில்லை. இந்த சூழலில் சன்மார்க்கம் என்பது துறவிகளுக்கானது என்பது போல் ஒரு கருத்தானது உருவாகி வருகின்றது. இது காலப்போக்கில் சமுதாய தாக்கத்திலிருந்து சன்மார்க்கத்தை ஒரு உன்னத லட்சியம் என்ற உணர்வோடு நிறுத்திவிடும். இல்லறத்தாரும் சுத்த சன்மார்க்கத்தை கடைபிடித்து மேனிலையடைய இயலும் என்பதுடன் அவர்களே வருங்கால உலகின் வழிகாட்டிகளாகவும் ஆகும் நிலை ஏற்படும் என்பது வள்ளல் பெருமானின் அருளுரை. எனவே, இல்லறத்தார் கொள்ள வேண்டிய இயல்பு நிலைகளை பட்டியலிடுவோம். இந்த பட்டியலில் கண்டுள்ள விஷயங்களை சுமையாக எண்ணாமல் ,வாழ்க்கை இயல்பாகக் கொண்டாலெ போதுமானது.
சமயநிலையிலிருந்து அடுத்த சமயங்கடந்த சுத்த சன்மார்க்க நிலைக்கு உயரும்போது மனிதன் பலவகை சூழல்களை அடிப்படையாகக் கொண்டு செயல் பட வேண்டியுள்ளது. ஒரு குடும்பம் சூழ்ந்த மனிதன் கைகொள்ள வேண்டிய சுத்த சன்மார்க்க நெறிமுறைகளை பார்ப்போம்.
1. இறைவன் ஒருவரே அவர் உருவமற்ற ஜோதி வடிவினர் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
2. சாதி,சமய,மத,மார்க்க,ஆசிரம,வருண அடிப்படையில் பேதங்களை பாராட்டாமல் மற்றவர்களிடம் சமமாக பழக வேண்டும்.
3. சமயசின்னங்களோ, வேறு எந்த உபகரணங்களோ வழிபாட்டு சாதனமாகக் கொள்ளாமல் கைவிட்டு சமயங்கடந்த நிலையில் அன்பு ஒன்றையே சாதனமாகக் கருதி எல்லா உயிர்களும் சமம் என்ற ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
4. எந்த செயலையும் பொதுநோக்கத்துடன் செயல்படுத்தவேண்டும்.
5. எல்லா உயிர்களும் இன்புற்று வாழும்பொருட்டு இறைவனை பிரார்த்தனை செய்து சத்விசாரம் செய்ய வேண்டும்.
6. எல்ல உயிர்களையும் கடவுளின் குழந்தைகளாகக் கருத வெண்டும். உணவிற்காகவோ இறை வழிபாட்டிற்காகவோ கண்டிப்பாக பிற உயிர்களை கொல்லக் கூடாது. சுத்த சன்மார்க்கத்தின் அடிப்படையே இந்த கொள்கையிலிருந்துதான் உருவாகின்றது. இந்த கொள்கையை கடைபிடிக்காமல் எவ்வளவு உயர்ந்த கொள்கைகளை கடைபிடித்தாலும் அவைகள் ஜீவனற்ற உடலைப்போன்ற வெறும் சடலத்திற்கு ஒப்பானவை என்றால் மிகையல்ல.
7. தனக்கு மனைவியாக அல்லது கணவராக வாய்த்தவரை தவிர மற்றவர்களிடம் கண்டிப்பாக சகோதர, ச்கோதரி பாவத்துடன் பழக வேண்டும். கற்பு நெறியானது ஆண் பெண் இருவருமே கடைபிடிக்க வேண்டிய இலட்சியமாகும்.
8. பணம்,பொருள்,நிலம் போன்ற சொத்துக்களை அநியாயமாகவோ பிறரை வஞ்சித்தோ சேர்க்க கூடாது. தனக்கு தேவையானவைகளை இறைவன் நேர்மையாக செயல் பட்டாலேயே கிடைக்கும்படிசெய்வார் என்ற நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். அதேசமயம் தர்ம நெறிமுறைப்படி உழைப்பதை முழு ஈடுபாட்டுடன் காலந்தவறாமல் உழைக்க வேண்டும்.
9. தம்மை விட கல்வி, பொருளாதாரம்,மதிப்பு,அந்தஸ்து ஆகியவற்றில் குறைவானவர்களைக் கண்டு வெறுப்படையாமல் அவர்களிடம் அனுதாபத்துடன் சமமாகக் கருதி நடத்த வேண்டும்.
10. தம்மை விட கல்வி, பொருளாதாரம்,மதிப்பு,அந்தஸ்து ஆகியவற்றில் உயர்ந்தவர்களிடம் பொறாமை கொள்ளாமல் தக்க மதிப்பு அளித்து அவர்கள் நம்மை சமமாக நடத்தும் அளவிற்கு பண்புடன் பழக வேண்டும்.
11. தான் என்ற அகந்தையை சிறிதும் மனதில் கொள்ளக் கூடாது. தனக்கு கிடைத்த அனைத்தும் இறைவனால் அளிக்கபட்டவைகள் என்பதை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.
12. முடிந்தவரை அனைவருக்கும் தம்மை பாதிக்காதவகையில் உதவி செய்துக் கொண்டே இருக்க வேண்டும். பிறரின் துன்பகாலங்களில் உதவுவதற்காகவே இறைவன் தம்மை படைத்துள்ளார் என்ற கருத்தை மனதில் பதிந்து கொள்ள வேண்டும்.
13. தினமும் ஒரு முறையாகிலும் அருட்பெருஞ்ஜோதி அகவலை பாராயணம் செய்ய வெண்டும் அல்லது குறைந்த பட்சம் ஒருநாழிகை நேரம்(24 நிமிடம்) மகாமந்திரம் அல்லது தாரக மந்திரத்தை ஜோதி முன் அமர்ந்து உச்சரிக்க வேண்டியது சன்மார்க்கிகளின் கடமையாகும்.
14. இறந்து போனவர்களை எரிப்பது என்பதும் ஒரு உயிர்கொலைக்கு சமமாகும் எனவே அவர்களை புதைத்தல் வேண்டும்.
15. மது, புகையிலை, சிகரெட் போன்ற லாகிரி வஸ்துக்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
16. தமது வருமானத்தில் குறைந்த பட்சம் 3சதவீதத்திலிருந்து அதிக பட்சம் 12 சதவீதம் வரை அவரவர் விருப்பப்படி சன்மார்க்க நெறிமுறையிலான தரும காரியங்களுக்கு செலவிட வேண்டும்.
17. பசி தவிர்த்தலையும் இன்சொல் பேசுவதையும் கடமையாக கருத வேண்டும்.
18. சுத்த சன்மார்க்க நெறிமுறையை பின்பற்றுபவர்களுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் வள்ளல் பெருமானும் அளவு கடந்த அருள் சக்தியை வழங்குவார்கள். அதை எந்த விதத்திலும் தவறாக பயன் படுத்தாமல் சுத்த சன்மார்க்க சக்தியை அன்பு வழியில் உலகிற்கு நிரூபிக்க தம்மை கருவியாக பயன்படுத்த வேண்டும்.
இவையனைத்தும் சுத்த சன்மார்க்க நெறிமுறைகளை கடைபிடிக்க எண்ணுபவர்கள் வாழ்க்கை இயல்பாக கொள்ள வேண்டிய விஷயங்கள். இவ்வாறாக வாழ்க்கை இயல்பைக் கொண்டு செயல்பட அன்பர்கள் முன்வரும்போது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மனிதர்களுக்கு அளவற்ற அருளை வழங்குகிறார்கள்.
(தொடரும்)
ஜோதிமைந்தன் சோ. பழநி
