மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி - 18 (ஸ்தூல தேகம் ரத்த சுத்த)
சன்மார்க்கத்தில் சமுசாரிகளின் நிலை
(தொடர்ச்சி)
அருளறியார் தமையறியார் எமையும்
பொருளறியார் என புகன்ற மெய்ச்சிவமே
என வள்ளல் பெருமான் கூறுகிறார்.
உலகினில் உயிர்களுக்குறு மிடையூறெலாம்
விலக நீயடைந்து விலக்குக மகிழ்க
சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக
உத்தமனாகுக வோங்குக என்றனை
என்பது அருட்பெருஞ்ஜோதி அகவலின் முடிவின் விடிவு. உலகிலுள்ள உயிர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை களைந்து கடந்து அதன் வழியாக எப்படி சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுவது என்பதே ஒவ்வொரு சன்மார்க்கிகளின் உள்ளத்து வினாவாக அமைகிறது. அந்த வினாவுக்கு விடை காண முற்படும்போது விடையாக அமைவது அருள் பெற்றால் சுகனிலையமையும் என்பது. அருளுக்கு சாதனமாக கருணை அமைகிறது. கருணையாக இருக்க வேண்டுமெனில் சன்மார்க்க குணங்களை கடைப்பிடிக்கலாம். ஆனால் இதுநாள்வரை யாம் அசைவ உணவு உண்டு வந்தோமே அந்த உணவால் ஏற்பட்ட உடலினை எப்படி சன்மார்க்க உடலாக மாற்றுவது, என மாமிச உணவை இது நாள்வரை உண்டுவந்து தற்போது சன்மார்க்க சாதகராக விரும்பும் மனிதர்களுக்கு ஐயப்பாடு ஏற்படுவது இயற்கை. அவர்கள் இதுநாள்வரை உண்மை தெரியாமல் சாப்பிட்டு வ்ந்துள்ளதால், “இது முதற்கொண்டு இந்த இப்பிறவியில் புலால் உண்ண மாட்டேன்” என்று ஜோதியின் முன் தக்கதொரு சன்மார்க்க அன்பரின் முன்னிலையில், பசும்பாலில் சத்திய பிரமாணம் செய்து, அன்று முதல் புலால் உணவை தவிர்த்து, தினசரி ஒருகுவளை நீருக்கு மூன்று சிறுகரண்டி வீதம் மூன்று வேளைக்கு 9 சிறுகரண்டி தேன் (சுமார் 50 கிராம் தினசரி) பருகி வந்து 9 கிலோ தேன் குடித்து முடித்தால் அவர்கள் உடலிலுள்ள மாமிச உணவின் தாக்கம் மறைந்து போகும். இதற்கு ஆறு மாதங்கள் ஆகும். அதன்பின் அவர்கள் செய்யும் செயல்பாடுகள் பலனளிக்க ஆரம்பிக்கும். கருணையை சாதனமாக பயன்படுத்தலாம்.
கருணையை எவ்வாறாக அருளுக்கு சாதனமாக பயன் படுத்துவது, அருளுக்கு என்ன அளவுகோல் என்பது போன்ற ஐயப்பாடு ஏற்படுவது இயற்கை. மேலும் சன்மார்க்கத்தை பலரும் பலவாறாக விளக்கம் அளிக்கும்படி நிலை ஏற்படும்போது உண்மை விளக்கம் என்பது யாது ? அனுபவ உண்மை என்பது யாது ? அதன் தன்மை என்ன? என்று ஆய்வு செய்து அதன் அனுபவத்திலும் செயல் படுத்தியதும் மற்றவர்களுக்கும் அதை தெரிவித்து, அவர்களின் அனுபவத்தையும் சாட்சியமாகக் கொண்டு ஏற்பட்ட விளக்கப்படி வள்ளல் பெருமானின் வழிகாட்டல்படி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அருளைப் பெறுவதை கீழ்கண்ட நான்கு நிலைகளாக சன்மார்க்கிகள் அடையலாம் என்பது தெளிவான உண்மை அவை:
1) திருமுறை நிலை.
2) அகவல் நிலை.
3) மந்திர நிலை.
4) மந்திரங்கடந்த நிலை.
என அறியப்படுகிறது.
1) திருமுறை நிலை: வள்ளல் பெருமானின் அன்பர்களாக இருந்துக்கொண்டு பல்வேறு சமய தேவர்களையும் வணங்கிக் கொண்டு வள்ளல் பெருமானை சைவ நெறியாளர்களுள் ஒருவராக எண்ணி பூசைகள் செய்துக் கொண்டு ஜீவகாருண்யத்தை கடைப்பிடித்துக் கொண்டு வள்ளல் பெருமானின் ஆறு திருமுறைகளையும் ஒருமுறை மனமுருகி படித்து முடித்தால் அதன் வழியாக ஒரு குறிப்பிட்ட அருள் சக்தி ஆண்டவரிடம் இருந்து நமக்கு கிடைக்கும். அந்த குறிப்பிட்ட அருள் சக்தியை பெற இந்த நிலையிலுள்ளவர்கள் (மேலே குறிப்பிட்ட நடைமுறைகளை கடைபிடிப்பவர்கள்) நான்கு நாட்கள் உள்ளம் உருகி செயல் படவேண்டும். அவர்களுக்கு கருணையும் திருமுறைகளும் சாதனமாக அமைகின்றன.
இந்த திருமுறை நிலையை கடக்க 112 நாட்கள் சன்மார்க்க விரதமிருந்து தினசரி தாரக மந்திரம் 48 நிமிடமும் மகாமந்திரம் 12 நிமிடமும் ஜோதியின் முன் அமர்ந்து பூஜை செய்து ஏழுமுறை கிரியை அடிப்படையிலான அருட்பெருவெளிப்பிரவேச பூஜையில் கலந்து கொண்டால் அகவல் நிலையில் பிரவேசிக்கலாம். ஆன்ம பெருக்கமும் ஆன்ம வேகமும் கைகூடும். சன்மார்க்க விரதமென்பது பட்டினியாக இருப்பதல்ல.
காலையில் தாமச குணங்களை தருகின்ற எண்ணை பண்டங்களை (பூரி, வடை, தோசை, பொங்கல், உப்புமா போன்றவை) தவிர்த்து இட்லி,சேமியா,நொய்க்கஞ்சி போன்ற இலகு உணவுகளை உட் கொள்ள வேண்டும். காப்பி,தேநீர் இவைகளுக்கு பதிலாக சுடுநீரில் தேன்,சிறிது எலுமிச்சை சாறு கலந்து பருக வேண்டும்.
மதியம் வழக்கமான உணவில் கண்டிப்பாக ஏதேனும் ஒரு கீரையும், சிறிதளவு தயிரும் சேர்க்க வேண்டும்.
மாலையில் சுடுநீரில் தேன் கலந்து பருக வேண்டும்.
இரவில் உப்பு, புளி, காரம் இல்லாத பாலுணவு கொள்ளலாம், இனிப்பு சேர்ப்பது தவறில்லை. படுக்கை செல்லும்போது பாலும் தேனும் கலந்து பருக வேண்டும்.
விரத பூஜையை மதியம் 12 மணிக்குள் தினசரி முடிக்க வேண்டும்.
112 நாட்கள் விரதத்தை ஒரு சனிக்கிழமையில் ஆரம்பிக்க வேண்டும்.
22ம் நாள் சனிக்கிழமை கருப்புத் திரை
37ம் நாள் ஞாயிற்றுக் கிழமை நீலத்திரை
52ம் நாள் திங்கள் கிழமை பச்சைத் திரை
67ம் நாள் செவ்வாய் கிழமை சிவப்புத் திரை
82ம் நாள் புதன் கிழமை மஞ்சள்த் திரை
97ம் நாள் வியாழக் கிழமை வெண்மைத் திரை
112ம் நாள் வெள்ளிக் கிழமை கலப்புத் திரை
ஆகிய தினங்களில் அருட்பெருவெளிப் பிரவேச பூஜை செய்ய வெண்டும். அந்தந்த தினங்களில் அந்தந்த திரைகள் கிரியை நிலையில் விலகி,112ம் நாள் கலப்பு திரையும் விலகி ஜோதியை உள்முகமாக தரிசிக்கலாம்.
2)அகவல் நிலை: அருள் பெற்றால் சிறு துரும்புக் கூட ஐந்தொழில் புரியக்கூடும் என்பதை கருத்தில்கொண்டு சமயங்கள், மதங்கள், மார்க்கங்களை கடந்து பெருமான் பேருபதேசத்தில் கூறிய கருத்துக்களை மனதில் கொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் வியாபகத்தை மனதில் கொண்டு அருட்பெருஞ்ஜோதி அகவலை மனமுருக ஒருமுறை முழுமையாகப் படித்தால் திருமுறையை நான்கு நாட்கள் படித்து பெற்ற அளவு அருள்சக்தியை இரண்டு மணிநேரத்தில் பெற்று கொள்ளலாம். இந்த நிலையயைடைந்து அகவல் நிலையை கடந்து மந்திர நிலையில் பிரவேசிக்க எந்த வகையிலும் தவறுகள் இன்றி ஆயிரம் முறை அகவல் பாராயணம் செய்து முடிக்கவேண்டும். அவ்வாறு செய்யும் காலங்களில் ஒரே நாளில் அதிகபட்சமாக 3 முறை 6 முறை, 9 முறை ,12 முறை , 15 முறை , 18 முறை 21 முறை , 24 முறை என்று படிப்படியாக படித்து முடித்து அகவலை ஆழ்மனதில் பதிய வைக்க வேண்டும். இந்த முயற்சியில் தினசரி ஒரு முறையாகிலும் அகவல் பாராயணம் செய்ய வேண்டும். இதன் மூலம் அகவலை ஆழ்மனதில் ஆட்படுத்தினால் மந்திர நிலையடையலாம்.
3)மந்திர நிலை: பேருபதேசத்தில் பெருமான் முடிவின் விடிவாகக் கூறிய மகாமந்திரத்தை ஜோதியின் முன் அமர்ந்து எட்டு நொடிப் பொழுது கூறினால் இந்த நிலையில் உள்ளவர்கள். அகவல் நிலையில் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்தில் பெற்ற அருள்சக்தியை எட்டு நொடியில் பெறலாம். இந்த நிலையை படிக்கத் தெரிந்தவர்களின் பலமுறை அகவலைப் படித்து ஆண்டவரின் செயல்பாடுகளையும் அதன் வழியில் மனிதர்கள் பெறக் கூடிய அனுபவங்களையும் பெற்று உணர்ந்து அனுபவிப்பதின் மூலமும் படிக்கத் தெரியாதவர்கள் இறைவன் ஒருவனே என்ற கருத்தையும் கருணையையும் ஜீவ காருண்யத்தையும் ஒருங்கே அமையப்பெற்று இந்த நிலையை அடையலாம். மந்திர நிலை என்பது அகநிலை புறநிலை என்று இரண்டு பகுதியாக உள்ளது அகவலை பலமுறை படித்துணர்ந்து மகாமந்திரத்தை எப்போதும் உச்சரிக்கும் பழக்கமுள்ளவர்கள் புறநிலையில் சாதகர்களாகவும் அகநிலை அடையும் போது சாத்தியர்களாகவும் மாறுவர். அகநிலையடைந்தவர்கள் பஞ்ச கிருத்தியங்களை அடையவும் கடக்கவும் இயலும். ஆயிரம் முறை அகவல் படித்தவர்கள் மந்திர நிலையடைவர் அதன்பின் 108 நாள் யோகதாரக மந்திரம் கூறி மந்திர புறநிலையையும் 108 நாள் யோக மகாமந்திரம் கூறி மந்திர அகநிலையையும் அடைந்து கடந்து மந்திரம் கடந்த நிலைக்கு ஆளாகலாம். யோக தாரகமந்திரம் என்பது அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி என்று கூறி நான்கு நொடி மூச்சை இழுத்து தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என கூறுவதாக கற்பனை செய்து அது சமயம் மூச்சை உள்ளே நிலை நிருத்தி
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
என்று கூறி எட்டு நொடிகளில் மூச்சை வெளியேற்ற வேண்டும் அதாவது மகாமந்திரத்தின் முதல் இரண்டு வாக்கியங்களால் மூச்சை இழுத்து அடுத்த இரண்டு வாக்கியங்களால் மூச்சை நிலை நிறுத்தி தாரகமந்திரத்தின் நான்கு வாக்கியங்களால் மூச்சை வெளியேற்ற வேண்டும். இவ்வாறு செய்வது யோக தாரகமந்திரமாகும். தாரகமந்திரத்தின் முதல் இரண்டு வாக்கியங்களால் மூச்சை இழுத்து அடுத்த இரண்டு வாக்கியங்களால் மூச்சை நிலை நிறுத்தி மகாமந்திரத்தின் நான்கு வாக்கியங்களால் மூச்சை வெளியேற்ற வேண்டும். இவ்வாறு செய்வது யோக மகாமந்திரமாகும். மந்திர நிலையில் மிக சிரத்தையுடன் தக்கதொரு சன்மார்க்கியிடம் அனுபவ ரீதியாக இந்த பயிற்சியை உபதேசம் பெற்று செய்தால். திரியம்பல வாயில் காட்சி,மணி மாடக்காட்சி,செஞ்சுடர் பூ அடைதல்,சலங்கை ஒலி கேட்டல், அருளரசாட்சி ஆகிய ஆன்ம அனுபவங்களும் பெற்று ஆன்ம வேகம் அதிகப்படும் என அறிக. ஆயிரம் முறை அகவல் படித்து முடித்தப்பின் மந்திர நிலைக்கான ஞானத்தில் யோகம் செய்வது முழுப்பலன் வழங்கும் என அறிக.
4)மந்திரங்கடந்த நிலை: மந்திர அகநிலையில் பஞ்சகிருத்திய படி நிலைகளை கடந்தவர்கள் ஞானத்தில் ஞானமாய் லயிப்பார்கள். அது மந்திரங் கடந்த நிலையாய் அமைகிறது ஞானத்தில் ஞானியாய் இருப்பவர்களின் ஆழ் மனதில் செயல்பட்டுக்கொண்டே இருக்கும். கனவில்கூட அவர்களுக்கு பிரச்சினைகள் வரும்போது மகாமந்திரத்தை உச்சரிப்பர்கள்.அந்த அளவு மந்திரமானது மூளையில் பதிந்துவிடும். இதன் மூலம் சுத்த,பிரணவ,ஞான தேகங்களை பெற்று ஆன்ம பயணத்தை பூர்த்தி செய்து ஆண்டவரிடம் ஐக்கியமாகி காலத்திற்கு அப்பாற்பட்டு விளங்குவர்.
(தொடரும்)
ஜோதிமைந்தன் சோ. பழநி
