மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி - 21 (விஞ்ஞானத்தின் மூலம் மெய்ஞான விளக்கம் )
துறவறமும் உறவறமும (தொடர்ச்சி)
ஒரு மனிதனின் தெய்வீக நிலையை செயல்படுத்த மூளையிலுள்ள பீனியல் சுரப்பி எனும் நாளமில்லா சுரப்பியின் தூண்டுதல் தேவை. அந்த சுரப்பியின் தூண்டுதலால் மனிதனின் வலது பக்க மூளையானது தெய்வீக தன்மைக்கு ஏற்புடைய செயல்பாடுகளை செய்ய ஆரம்பிக்கிறது. அதற்கு இடது பக்க மூளையானது துணை நிற்கிறது. இதை ஞானிகள் சிவம், சக்தி என்று உருவகப் படுத்தினார்கள். இந்த தெய்வீக செயல்பாடுகள் நடைபெற வேண்டுமானால் மனித மூளையானது நொடிக்கு 9 முதல் 14 க்குட்பட்ட அலைவரிசையை கொண்டிருக்க வேண்டும். இந்த அலைவரிசையை 14க்குள் கட்டுப் படுத்தவே பண்டைய ஞானிகள் முதல் இன்றைய அருளாளர்கள் வரை தியானத்தையும் யோகத்தையும் வலியுறுத்துகிறார்கள். வள்ளல் பெருமான் அவர்களும் அதை வலியுறுத்துவதின் பொருட்டே சைவ உணவை வலியுறுத்தி சொல்கிறார்.
அசைவ உணவு மேற்கொண்டால் மூளையானது உணர்வு அலைகளை செயல்படுத்தி இராஜச நிலையிலேயே நிலைநிறுத்தும், சைவ உணவே சத்துவ நிலையில் சுலபமாக மனிதமூளையையும், உணர்வுகளையும், அறிவையும்,எண்ணங்களையும் நிலைநிறுத்தும் என்று உணர்த்துகிறார். மேலும் இன்றைய காலகட்டத்தில் மக்கள் ஆன்மீக நாட்டம் அதிகம் பெற்று வருகிறார்கள். இந்த போக்கை தவறாக பயன் படுத்தி நிறைய மனிதர்கள் தம்மை இறைவன் என்று விளம்பரபடுத்தி மக்களை மூட நம்பிக்கைகளை கடைபிடிக்கச் செய்து ஆன்மீகத்தை போலியாக்குகிறார்கள். வருங்காலத்தில் இதுபோன்ற போலிகளை உருவாகாமல் தடுக்கவேண்டுமெனில் இதுபோன்ற சுயவிளம்பரக்காரர்களை உண்மையானவர்கள்தானா எனக் கண்டறியும் பொருட்டு சோதனை செய்யும் நிலை உருவாகலாம். இன்றைய கால கட்டம் மட்டுமல்ல என்றைய காலகட்டத்திலும் உண்மையான சிறந்த ஞானிகள் வெளிப்படாமல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை மக்கள்தான் தேடி கண்டடைந்து பலன் பெற வேண்டும். இறைவனின் அற்புத ஆற்றல்களை மக்களின் நம்பிக்கைக்காக வெளிப்படுத்தலாம். ஆனால் இந்த செயல்களை தான் மட்டுமே செய்ய முடியும் என்பது போலித்தனமானது.
வள்ளல் பெருமானைப் போல இறைவன் எல்லோருக்கும் அருளை வாரி வழங்குவார் எனக்கூறும் அருளாளர்களின் அனுபவங்களை ஏற்றுக் கொண்டு அவர்கள் வழிமுறையை பின்பற்றி பலனடையலாம். அதைவிடுத்து என்னிடம் ஆசிபெறுங்கள் உங்கள் பிரச்னைகள் தீரும் என்று கூறும் சுயவிளம்பரக்காரர்களை நம்ப வேண்டிய அவசியமில்லை. மருத்துவ உலகில் இ.இ.ஜி என்ற கருவி மூளையின் செயலை அளக்கப் பயன்படுகின்றது. இது போன்ற போலி ஆன்மீக விளம்பரக்காரர்களை அந்த கருவியின் சோதனைக்கு ஆட்படுத்தி அவர்களால் தங்களின் மூளையின் அலையை அதிகபட்சமாக 14க்குள் கட்டுப்படுத்த இயல்கிறதா?(ஒரு நல்ல சத்துவ குணமுள்ள மனிதனின் அலையானது 10 ஆக இருக்கும் என அறிக). அவர்களால் எவ்வளவு நேரம் கட்டுபடுத்த முடிகிறது. சோதனைக்கு ஆட்பட்ட நேரத்தில் அவரிடம் தங்கம், பணம் ஆகியவற்றை கொடுத்தால் என்ன நிகழ்வு மூளையில் நடக்கிறது. ஒரு அழகிய பெண் நெருங்கினால் என்ன நிகழ்வு ஆகிறது என்று ஆய்வு செய்யும் காலம் வெகுதூரம் இல்லை.
இதுபோன்ற விஷயங்கள் உருவாக வேண்டிய அவசியம் யாதெனில் ஒரு மனிதன் சத்வ நிலையாகிய ஆல்பா நிலையில் சொல்லும் வார்த்தைகள் பலிக்க ஆண்டவர் அருளுவார். வருங்காலத்தில் ஒவ்வொரு மனிதனும் தன்னை சோதனைக்கருவியில் ஆட்படுத்தி தனக்கு ஏதேனும் வேண்டுதல் இருந்தால் மூளையின் அலையானது ஆல்பாநிலையில் வரும்போது விண்ணப்பமாக இறைவன் முன் வைத்தால் அது கண்டிப்பாக நடக்கும் எனும் நம்பிக்கையும் செயல்பாடும் நடக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. இது போன்ற ஆய்வுகளும் சோதனைகளும் வெகுவிரைவில் விஞ்ஞானத்தையும், மெய்ஞ்ஞானத்தையும் ஒன்றிணைக்கும். அது சமயம் யாம் இதுவரை கூறிய கருத்துக்களுக்கும், இனி கூற இருக்கும் கருத்துக்களுக்கும் சாட்சியம் கிடைக்கும்.
இந்த அளவில் ஆன்மாவிற்கு மூளையின் துணையை ஆய்வு செய்த நாம் மீண்டும் ஆன்மாவைப் பற்றிய ஆய்வுக்கு வருவோம். வள்ளல் பெருமான் அண்டங்களை கடக்கும் ஆற்றலை பெற்றவர் என்பதை சன்மார்க்கிகள் அறிவர். எந்த ஒரு ஆற்ற்லையும் ஆண்டவரிடம் பெற்றால், அந்த ஆற்றலை மற்ற ஆன்மாக்களுக்கு பயன்படும்வகையில் செயல்படுத்தி இன்பம் காண்பதே வள்ளல் பெருமானின் கோட்பாடு. அந்த அடிப்படையில் வள்ளல் பெருமான் 1874ல் தான் பெற்ற ஞானதேக ஆற்றலை அடுத்த அண்டமான “அண்டிராய்டு” அண்டத்தை நோக்கி செலுத்தி இங்கிருந்து இருபது லட்சம் ஒளி ஆண்டு தூரமுள்ள அந்த அண்டத்திற்கு ஒரு நொடிக்கு ஆயிரம் கோடி கிலோமீட்டர் வேகத்தில் சென்று அறுபது ஆண்டுகளில் அடைந்தார். அங்கிருந்து மீண்டும் திரும்பி வர அறுபது ஆண்டுகள் மொத்தம் நூற்றிருபது ஆண்டுகளில், அதாவது 1994ல் தமது கேந்திரத்தில் மையம் கொண்டு அருளரசாட்சியை செய்து கொண்டு தமது உணர்வலைகளை ஏற்று செயல் படுபவர்களுக்கு தாமே நேரடியாக வழிகாட்டியாக இருந்து செயல் பட்டு வருகிறார். மந்திரங்கடந்த நிலையில் இருப்பவர்கள் அவரின் ஆன்மாவில் உணர்வுபூர்வமாக ஐக்கியமானால் 192 நொடிகளில் அவரது உணர்வு அலைகளை சந்திக்கலாம். அவரது ஒளியுடல் காண வேண்டுமாயின் முழுமையாக முயற்சி செய்து உணர்வலைகளை ஐக்கியபடுத்தும் அந்த நிமிடம் முதல் 18மணி நேரத்தில் ஒளியுடலை தரிசிக்கலாம். வருங்காலத்தில் இந்த உண்மைகள் விஞ்ஞானிகளாலும் ஏற்றுக்கொள்ளப் பட்டு நிருபணமாகும்.
மேலும் 91வது படிநிலையில் இருக்கும் ஆன்மாவின் பருமன் ஒரு மைக்ரான் அளவாகும். ஒரு மைக்ரான் என்பது ஒரு மில்லி மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பாகமாகும். வள்ளல் பெருமான் அவர்கள் ஆன்ம பருமனைப் பற்றி கூறும்போது “ஒரு பசுவின் வாலிலுள்ள ரோமத்தின் பருமனில் நூற்றில் ஒரு பாகம்” எனக் கூறியுள்ளார். ஒரு பசுவின் வாலிலுள்ள ரோமத்தின் கனப்பருமன் ஒரு மில்லி மீட்டரில் பத்தில் ஒரு பாகமாகும்.(அதாவது 0.1 எம்.எம் ஆகும்.மனித ரோமத்தின் கனப்பருமன் 0.05முதல் 0.06 எம்.எம்) அதனடிப்படையில் கணக்கிட்டால் ஆன்மாவானது ஒரு மைக்ரான் கனப்பரிமாணம் உடையதாய் இருக்கிறது. ஒரு நொடிக்கு 11மீட்டர் ஆன்மவேகமுள்ள ஆன்மாவின் கனப்பரிமாணம் 1 மைக்ரான் ஆக உள்ளது. ஆன்மவேகம் அதிகரிக்க,அதிகரிக்க ஆன்மபருமனும் அதிகரிக்கும். ஒருநிலையில் 107 படிநிலையிலுள்ள பிரணவ தேகியின் ஆன்மாவின் கனப்பரிமாணம் அந்த மனிதனின் பிண்டத்தில் அண்டமாகிய தலையைவிட சற்று பெரிதாகி தலையை ஒளியுள் மறைக்கும் தன்மையுடையதாக மாறும். 108வது படிநிலையிலுள்ள ஞானதேகியின் ஆன்ம பரிமாணம் அவரது ஸ்தூல உடலைவிட பெரிதாகி அந்த ஒளியுடலாகிய ஆன்மபரிமாணத்தில் பெருக்கத்தில் ஸ்தூல உடல் ஒடுங்கி மறைந்து ஆன்மாவானது எங்கு வேண்டுமானாலும் சென்று ஸ்தூல உடலை வெளிப்படுத்தும் தன்மையுடையதாகிறது. இதுவே வள்ளல் பெருமானின் தன்மை. இதுவே பெருமான் அனுபவத்தால் கண்ட உண்மை.
இந்த அடிப்படையில் தன் சுதந்திரத்தை ஆண்டவரிடம் ஒப்படைத்த சன்மார்க்கிகளிடம் ஆண்டவர் தனது அனைத்து செயல்களையும் ஒப்படைக்கிறார். இந்த அடிப்படையில் தாம் பெற்றவைகளை வள்ளல் பெருமான் அருட்பெருஞ்ஜோதி அகவலில் 1121வது வரியிலிருந்து 1150 வது வரி வரை விளக்குகின்றார்.மேலும் இந்த வரிகளுக்கு இடையே இந்த அத்தியாயத்தின் முகப்பில் எழுதப்பட்ட
தன் உறவனைத்தையும் தன் அரசாட்சியில்
என் உறவாக்கிய என் தனித் தந்தையே
என்ற வரிகள் விடுப்பட்டு போனதாகக் கருதிக்கொண்டு அந்த வரிகளை இந்த அத்தியாய முகப்பில் எழுதும்படி எம்மை பணித்ததின் அடிப்படையில் நாம் அந்த வரிகளை முகப்பில் எழுதினோம். இந்த வரிகள் வள்ளல் பெருமானால் எமக்கு அளிக்கப்பட்ட வரிகள் என்பதுடன், அந்த வரிகளும் அத்துடன் அருட்பெருஞ்ஜோதி அகவலில் உள்ள வரிகளும் சேர்ந்து எமக்கு வள்ளல் பெருமானிடமிருந்து கிடைத்த அனுபவங்களை விளக்குவதாக நம்புகிறோம். வள்ளல் பெருமான் ஆண்டவரிடம் பெற்ற அனுபவங்களை எமக்கு கிடைக்கச் செய்து எம்மையும் சுத்த சன்மார்க்க சுக நிலைக்கு ஆட்படுத்தினார் என்பதும் மேலும் தொடர்ந்து ஆட்படுத்துவார் என்பதும் எமது அனுபவ உண்மையின் நம்பிக்கை.
ஒளிவளர் உயிரே,உயிர்வளர் ஒளியே, ஒளியுயிர் வளர்தரும் உணர்வே
வெளிவளர் நிறைவே, நிறைவளர்வெளியே,வெளிநிறை வளர்தரு விளைவே
வளிவளர் அசைவே, அசைவளர் வளியே, வளியசை வளர்தரு செயலே
அளிவளர் அனலே, அனல்வளர் அளியே, அளியனல் வளர்சிவ பதியே.
– திருவருட்பா
(தொடரும்)
ஜோதிமைந்தன் சோ. பழநி
