மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி - 22 (வழிபாட்டு முறைகள் தோற்றம்)

சன்மார்க்க வழிபாட்டு முறைகள்

சன்மார்க்கம் என்பது யாது அதை எவ்வாறு அடையாளம் காணலாம் அதன் சக்தி என்ன அதனால் விளையக்கூடிய நிகழ்வுகள் யாது சன்மார்க்க கடமைகள் என்ன என்பதைபற்றி இதுகாறும் வெளியிட்டோம் தற்போது சன்மார்க்க சக்தியை அடைய செய்யப்படும் பூஜை முறைகளை இனி தெரிந்து கொள்வோம். சன்மார்க்க வழிபாடு என்பது வழிபாட்டில் 13 வது நிலையான ஞானத்தில் சரியையிலிருந்து 16 வது நிலையான ஞானத்தின் ஞானம் வரை உள்ள இறைவழிபாட்டு தன்மையாகும். இந்த வழிபாடுகள் செய்யும்போது இறை தன்மையையே மனதில் கொள்ள வேண்டும். பூஜையின் மீது பற்று வைக்க கூடாது. அவ்வாறு செய்தால்தான் பூஜையின் பலன் நமக்கு கிடைக்கும். வள்ளல் பெருமான் இன்னும் ஒருபடி மேலே சென்று முக்தி மீது கூட பற்று வைக்கக்கூடாது என்று கீழ்கண்ட பாடலால் வெளிபடுத்துகிறார்.

சரியை ஓர் நான்கும் கிரியை ஓர்நான்கும் சாற்றிடும் யோகமோர் நான்கும்
புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசை சற்றியேன்
பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் முத்தி பெற்றிடவும்
உரியதோர் இச்சை எனக்கிலை என்றன் உள்ளம் நீ அறிந்ததே எந்தாய்

திருவருட்பா – பிள்ளை சிறுவிண்ணப்பம்

இவ்வாறாக பூஜையிலும் முக்தியிலும் கூட பற்றில்லாமல் ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமயை வள்ளல் பெருமான் கடைபிடிக்கவே அனைத்து வழிபாடுகளையும் அறிந்து கொண்டதுடன் இறவாநிலை பெற்றதாகவும் கீழ்கண்ட பாடலால் தெளிவு படுத்துகிறார்.

சரியைநிலை நான்கும்ஒரு கிரியைநிலை நான்கும்
தனியோக நிலைநான்கும் தனித்தனி கண்டறிந்தேன்
உரியசிவ ஞானநிலை நான்கும் அருள் ஒளியால்
ஒன்றொன்றா அறிந்தேன் மேல் உண்மைநிலை பெற்றேன்
அரிய சிவ சித்தாந்த வேதாந்த முதலாம்
ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால் நின்றோங்கும்
பெரிய சிவ அனுபவத்தால் சமரச சன்மார்க்கம்
பெற்றேன் இங்கிறவாமை உற்றேன் காண் தோழி.

திருவருட்பா-அனுபவமாலை

எனவே சமரசசன்மார்க்கம் பெற விழைவோர் இதில் கூறப்படும் பூஜை முறைகளை விருப்பு வெறுப்பில்லாமல் செயல் படுத்த வேண்டும்.

அதாவது ஞானத்தில் சரியை வழிபாட்டு முறையானது அருட்பெருஞ்ஜோதியரை வழிபாடு செய்வோரின் வெளிமனதில் அமர்த்தும், ஞானத்தில் கிரியையானது உள்மனதில் ஆண்டவரை அமர்த்தும், ஞானத்தில் யோகமானது ஆழ்மனதில் ஆண்டவரை அமர்த்தும். அதன்பின் ஆழ்மனதில் உள்ள ஆண்டவரால் அருளொளி வெளிப்பட்டு ஞானத்தில் ஞானம் தானாக உருவாகி மரணமிலா பெருவாழ்வில் லயிக்கலாம்.

அதாவது ஞானத்தில் சரியை என்பது நினைந்து நினைந்து அருட்பெருஞ்ஜோதியரை வணங்குவதுஆகும், ஞானத்தில் கிரியை என்பது உணர்ந்து உணர்ந்து இறைவனை வணங்குவது ஆகும், ஞானத்தில் யோகம் என்பது நெகிழ்ந்து நெகிழ்ந்துஇறைவன் பால் ஈடுபாடு கொள்வதாகும். ஞானத்தில்ஞானம் என்பது ஆழ்மனதிலிருந்து அன்பே நிறைந்து நிறைந்து வெளிப்படுவதாகும்.ஆழ்மனதில் ஆண்டவரை அமர்த்தியதால் ஆன்மநெகிழ்ச்சி ஏற்பட்டு ஊற்று எழும்கண்ணீரால் உடம்பு நனைந்து நனைந்து இறைவனை துதிக்க முற்படுவதாகும். அதன்காரணமாக மரணமிலா பெரு வாழ்வு பெறலாம். அதற்கு அடிப்படையான சாகா கலையானது இறைவனால் வழங்கப்படும் என்பதை வள்ளல் பெருமான் கீழ்கண்டப் பாடலால் விளக்குகிறார் .

நினைந்துநினைந் துணர்ந்துதுணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந்து ஊற்றெழுங்ககண் ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்தும்நாம் வம்மினுல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்திய்ஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.

திருவருட்பா-ஞானசரியை.

வழிபாடு என்று ஆரம்பிக்கும் போது அனைவரும் எண்ணுவது, பண்பாட்டு ரீதியான, சமய ரீதியான சரியை வழிபாடே மனதில் தோன்றும். சரியை அடிப்படையிலான வழிபாடான உருவ வழிபாடு, முதல் நான்கு வழிபாட்டு நிலையிலேயெ முற்று பெற்று விடுகிறது. பெரும்பாலான மக்களால் உயர்ந்த சரியை வழிபாடாக கருதப்படும் லிங்க வழிபாடு என்பது மனிதன் நாகரீக ஆரம்பத்தில் உருவான நடுகல் வழிபாட்டிலிருந்து வந்ததாகும். நடுகல் வழிபாடு என்பது பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த பல்வேறு சமுதாய வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் ஏற்படுத்தப் பட்ட நினைவு சின்னங்களே வழிபாட்டு குரியதாக கருதி ஆலயங்களாக உரு பெற்றவைகளாகும். பண்டைய காலத்தில் அரசர்கள் போர்க்கோலம் பூண்டு படையெடுத்து செல்லும் போது அவர்களுக்கு தலை கொய்தல் எனும் வழியனுப்பு விழா நடத்தி வெற்றி பெற வாழ்த்துக்கள் இளைஞர்களால் நடத்தப்படும். தலை கொய்தல் வழியனுப்பு விழா என்றால் அரசர்கள் படைகள் திரட்டிக்கொண்டு தேர் மீது ஏறி இராஜ வீதி வழியாக புறப்படுவார்கள். அப்போது இராஜ வீதியின் இருபுறத்திலும் சில நீண்ட மூங்கில் கழிகள் நன்கு திடமாக நடப்பட்டிருக்கும். அந்த மூங்கில் கழியின் நுனியில் ஒரு கயிறு கட்டப்பட்டு, மூங்கில் வளைத்து கயிறின் மறு நுனி மூங்கிலின் அடிப்பாகத்தில் கட்டப்பட்டிருக்கும் அரசர் அந்த பகுதிக்கு வரும்போது விருப்பமுள்ள இளைஞர்கள் அடியில் கட்டப்பட்டுள்ள கயிறின் நுனியை அவிழ்த்து தங்கள் தலை முடியுடன் பிணைத்துக்கொள்வார்கள். மூங்கில் வளைந்த நிலையில் அவர்களை வில் போல் இழுத்து பிடித்துக்கொண்டிருக்கும். அரசர் அருகில் வந்ததும் அந்த இளைஞர்கள் தங்கள் வாளால் தாங்களே தலையை துண்டிப்பார்கள். தலையானது மூங்கிலின் வேகத்தால் ஆகாயத்தை நோக்கி வீசப்படும். அப்போது அதிலிருந்து சிந்தும் இரத்தமானது அரசரின் உடலெங்கும் சிதறலாக வந்து விழும். இவ்வாறு விழா எடுத்து செல்லும் அரசர் போரில் ஜெயிப்பார் என்ற நம்பிக்கை பரவலாக இருந்தது. தன்னுயிரை மாய்த்துக்கொண்ட இளைஞனுக்காக அவன் உயிர் விட்ட இடத்தில் ஒருகல் நடப்பட்டு அவனுக்கு காவல் தெய்வ வழிபாடு நடக்கும். இதேபோல் போரில் சாகஸம் செய்து உயிர் விட்டாலும்,அந்த வீரன் உயிர் விட்ட இடமானது நடுகல் நடப்பட்டு வழிபாடு செய்யப்படும்.

இது போன்ற மூலதிராவிடர்களின் வழிபாட்டுக் கலாச்சாரமானது இந்தோ- ஆரியர்களின் வழிபாட்டு கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்து தற்போதுள்ள லிங்க வழிபாடு புராணநாயகர்களுக்காக உருவானது. அதே சமயம் சித்தர்களின் சமாதிகளும் சிவ வழிபாடாக மாறி தற்போதுள்ள பல சிவன் கோவில்களும் உருவாக காரணமாய் அமைந்தது.உபாயக்காரர்களால் பல இடங்களில் கற்பனையான வகையிலும் லிங்க வழிபாடுகளை அடிப்படையாகக் கொண்ட சிவஸ்தலங்களும் உருவாகின. பிற்காலத்தில் நாயன்மார்களின் பாடல் பெற்றதால் இன்னும் சிறப்பாக அந்த கோவில் களுக்கு வழிபாடு செய்ய மக்கள் முன் வந்தனர். கடந்த 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த துறவி ஒருவர் தற்போது மக்களால் அருளாளர் எனப்போற்றப்படுகிறார். அவர் தனது தாயார் இறந்தபோது தமது தாயாரை புதைத்து அந்த சமாதி மீது ஆகம விதிப்படி சிவன் கோவில் அமைத்தார். அந்த கோயிலிலுள்ள லிங்கத்திற்கு ‘”மாத்ரு பூதேஸ்வரர்” என பெயரிட்டார். மாத்ரு என்றால் தாயார், பூதம் என்றால “ஸ்தூல உடல்” அதனுடன் ஈஸ்வரர் என்ற வார்த்தையை சேர்த்து என்ன ஒரு அழகான பெயரை உருவாக்கியுள்ளார் பாருங்கள். இதைத்தான் சன்மார்க்க உலகமும் வள்ளல்பெருமானும்.

கண்டதெல்லாம் அநித்தியமே கேட்டதெல்லாம் பழுதே
கற்றதெல்லாம் பொய்யே, நீர்களித்ததெல்லாம் வீணே
உண்டதெல்லாம் மலமே உட்கொண்டதெல்லாம் குறையே
உலகியலீர் இதுவரை உண்மை அறிந்திலரே

என்று கூறி சாடுகின்றார்

இப்படியாக பல்வேறு கற்பனா சக்திகள் ஈஸ்வரர் பெயர் சேர்த்து உலா வருகின்றன சில காலம் கழித்து மாத்ரு பூதேஸ்வரர் என்ற அந்த சிவனுக்கும் ஒரு ஸ்தலபுராணம் எழுதப்பட்டு விடும்.

ஸ்தல புராணங்களை எடுத்துக்கொண்டாலும் இன்னும் வேடிக்கையாக இருக்கும். உதாரணமாக பண்டைய தமிழ் மண்ணில் “நலங்கிள்ளி” என்ற சிற்றரசன் தமிழ் நாட்டில் சில பகுதிகளை ஆண்டு வந்தான். அவனுடைய அந்தபுரத்தில் சிறப்பு வாய்ந்த மாமரம் ஒன்று இருந்தது. அதிலுள்ள மாம்பழத்தை அரசகுடுமபத்தை சேர்ந்தவர் தவிரயாரும் உண்ணக்கூடாது என்று சட்டமியற்றி பலத்த காவல் போட்டிருந்தான். அந்த மாமரத்துக்கு பக்கத்தில் ஒரு சிற்றாறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. ஒரு மாம்பழமானது அந்த ஆற்றில் விழுந்து நீரில் அடித்து சென்றது. அதை பிடிக்க வீரர்கள் ஓடினார்கள் அந்த பழமானது ஆற்றில் நீர் எடுக்க வந்த ஒரு பெண்ணின் கைகளில் கிடைத்து அவள் அதை கடித்து விட்டாள். அந்தப் பெண்ணை அரசன் மரண தண்டனைக்கு ஆட்படுத்தினான். அந்த பெண்ணுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பகுதியில் மக்கள் கோயில் அமைத்து வழிபாடு செய்து வருகின்றனர். காலப்போக்கில் அந்தகோவிலின் ஸ்தலபுராணத்தில் இந்த வரலாறையும் எழுதி இந்த கோயிலில் இராமர் வழிப்பட்டு அதன்பின் இலங்கையை வெற்றிக்கண்டார் என்று கூறி விட்டார்கள். இராமரின்காலத்தையும் நலங்கிள்ளியின் காலத்தையும் ஒப்பாய்வு செய்யாமல் கற்பனை குதிரையை ஓடவிட்டார்கள். தமிழ்நாட்டின் பெரும்பாலான கோவில்களின் ஸ்தல புராணங்களில் மகாபாரத கதாபாத்திரங்களோ,அல்லது இராமாயண கதாபாத்திரங்களோ வழிபட்டதாக இருக்கும்.

எனவே சன்மாக்க அன்பர்கள் லிங்க வழிபாட்டையும் பஞ்சகிருதிகர்த்தாக்களையும் போட்டு குழம்பிபோகவேண்டாம்.ஒரு சில இடங்களில் உள்ள சைவ வைணவ ஆலயங்கள் பஞ்சகிருதிகர்த்தாக்களின் ஆன்ம சக்தியால் உருவாகி இருக்கலாம். ஆனால் பெரும்பாலானவைகள் இது போன்ற கற்பனா தெய்வங்களே என்பதை உண்ர்ந்து யாம் கூறுகின்ற வழிபாடுகளை முறையாக கடை பிடித்து அருட்பெருஞ்ஜோதியரின் அரியாசனத்தை அவரவர் ஆழ்மனதில் அமைத்து வள்ளல் பெருமானின்அன்புக்கு பாத்திரமாக வேண்டியது.

(தொடரும்)

ஜோதிமைந்தன் சோ. பழநி