மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி - 25 (ஞானத்தின் கிரியை)

சன்மார்க்க வழிபாட்டு முறைகள் ஞானத்தில் கிரியை

சுத்த சன்மார்க்க வழிபாடு என்பது வழிபாட்டில் பதின்மூன்றாவது நிலையான ஞானத்தில் சரியையில் ஆரம்பிக்கிறது. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் மனிதனுக்கும் இடையே ஏழு மாயாதிரைகளும் எட்டாவதாக ஞானத்திரையும் உள்ளது. அதில் பல்வேறு உட்பிரிவுகளும் உள்ளன.

ஞானத்தில் சரியையும், ஞானத்தில் கிரியையும் கூட்டுப் பிரார்த்தனையாக செய்யக் கூடியவை. ஞானத்தில் யோகமும் ஞானத்தில் ஞானமும் தனி ஆத்மாவோ, ஒரேதன்மையுடைய இரண்டு ஆத்மாக்களோ ஒன்று சேர்ந்தோ தனித்தனியாகவோ செய்யும் வழிப்பாட்டு முறைகளாகும்.

ஞானத்தில் சரியை என்பது நினைந்து நினைந்து செய்யவேண்டிய வழிபாட்டு முறையாகும்.

ஞானத்தில் கிரியை என்பது உணர்ந்து உணர்ந்து செய்யவேண்டிய வழிபாட்டு முறையாகும்

ஞானத்தில் யோகம் என்பது நெகிழ்ந்து நெகிழ்ந்து செய்யவேண்டிய வழிபாட்டு முறையாகும்.

ஞானத்தில் ஞானம் என்பது அன்பே நிறைந்து நிறைந்து பிற உயிர்களிடம் பழகுவதின் மூலம் ஆண்டவரிடம் அன்பு கொள்ளுதல் ஆகும்.

ஞானத்தில் சரியை என்பது தற்போது எல்லா சன்மார்க்கிகளாலும் பின்பற்றபடுவது கடந்த அத்தியாயத்தில் அதை விவரித்தோம். ஞானத்தில் கிரியை என்பதன் பொருள் என்ன. அதை எப்படி செயல் படுத்துவது என்று பார்ப்போம்.

ஓங்காரமே சரியையில் கிரியைகளுக்கும், கிரியையில் கிரியைகளுக்கும், யோகத்தில் கிரியைகளுக்கும் ஆதாரமாக உள்ளது. ஞானத்தில் கிரியைகளுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையையும் ஞானகுரு கருணைமிகு இராமலிங்கம் அவர்களையுமே ஆதாரமாக கொள்ள வேண்டும். சன்மார்க்கத்தை பொறுத்தவரை சமய சடங்களுக்கு ஈடாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நோக்கிச் செய்யும் விண்ணப்பமே சடங்காக அமைகிறது. அதையும் ஒரு வரைமுறையுடன் செய்யும்போது சடங்கு போல் தோற்றமளிக்கிறது ஆனால் அவையனைத்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நோக்கிச் செய்யப்படும் பிரார்த்தனைகளேயன்றி வேறில்லை. எனவே ஞானத்தில் கிரியை என்பதின் பொருள் என்ன அதை எப்படி செயல்படுத்துவது இதன் மூலம் கூட்டு பிரார்த்தனை செய்து அருளியல் சாட்சியத்தையும் மகாமந்திரத்தின் பெருமையையும் எப்படி மக்கள் உணரும்படி செய்வது என வள்ளல் பெருமானிடம் சத்விசாரம் செய்ததில் ஏற்பட்ட வெளிப்பாடே இந்த அருள் பெருவெளி பிரவேச அகண்ட ஜோதி பூஜையாகும். சமயங் கடந்த நிலையில் எந்த ஒரு கலாச்சார ஆதிக்கமும் இன்றி ஞானத்தில் கிரியை எனும் பூஜையை ஏற்ப்படுத்த்துவது சற்று கடினமானதுதான் இருப்பினும் வள்ளல் பெருமான் அவர்கள் எமக்களித்த விஷயங்களை கொண்டு இப்படியே இந்த பூஜை முறையை நடைமுறைக்கு கொண்டு வந்தோம். இந்த பூஜைமுறையை அமல் செய்ததினால் ஏற்பட்ட வெளிப்பாடுகளும் நன்மைகளும் கணக்கிட முடியாது.

இந்த பூஜையை செய்ய முதலில் இடத்தை தேர்வு செய்து அங்கு ஒரு அகண்டதீபம் ஏற்ற தேவையான ஏற்பாடுகளை செய்யவும். மையமான பகுதியில் ஒரு மாக்கோலத்தால் வட்டமிடவும் வட்டத்தினுள் மஞ்சள் தாமரை விரிந்த நிலையில் கோலமிடுக. அதற்கு பின்புலமாக சிவப்பு வண்ணமிடுக இந்த பூஜையை எட்டு பேர் அல்லது பதினாறு பேர் சேர்ந்து செய்யலாம். அந்த வட்டத்திலிருந்து திக்குக்கு கோணத்திற்கு ஒரு கோடு வீதம் எட்டு அல்லது பதினாறு பேர் வட்டமாக அகண்டத்தை சுற்றி உட்காரும் தூரம் அளவிற்கு கோடு இழுத்து கோட்டின் முடிவில் ஒரு ஐந்து இதழ் தாமரை மலர்ந்த நிலையில் வரைக. ஒவ்வொரு கோட்டின் முடிவிலும் வரைந்த அந்த தாமரையை பூஜை செய்யும் ஒவ்வொருக்கும் பீடமாக நினைத்து பூஜை தட்டு வைத்து அமர செய்க அகண்டத்திற்கும் உட்கார்ந்திருப்பதற்க்கும் இடையில் ஏழு வளையங்களை கோடுகளாக அமைத்து அருகில் உள்ள முதல் வளையத்திற்கும் இரண்டாவது வளையத்திற்கும் இடையில் உள்ள பகுதியை கருப்பு வண்ணத்தால் அலங்கரிக்கவும் அடுத்தடுத்து உள்ள பகுதிகளையும் முறையே நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள், வெள்ளை, என்று நிறங்களிட்டு அலங்கரிக்கவும் வெள்ளைக்கும் அகண்டத்தை சுற்றியுள்ள பகுதிக்கும் இடையில் உள்ள பகுதியை இந்த ஆறு வண்ணங்களின் கோடுகளை மாற்றி மாற்றி போட்டு பல வண்ண திரையாக உருவகப்படுத்தவும். இப்போது தாமரை பூவின் மீது 21 அங்குல உயரத்தில் ஒரு அகண்டமும் தேங்காய் எண்னை கற்பூரமும் துணி ஆகியவற்றால் அமைக்கவும். அகண்டமானது ஆண்டவர் என்றால் பூஜை செய்பவர் ஜீவாத்மா இவர்களுக்கு இடையே ஏழு திரைகளும் ஞான திரையாக தாமரை மலரும் அமைந்திருக்கின்றன.

(தொடரும்)


ஜோதிமைந்தன் சோ. பழநி