மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி - 27 (சன்மார்க்க திருமணம்)
சன்மார்க்க வழிபாட்டு முறைகள் ஞானத்தில் கிரியை
(தொடர்ச்சி)
சன்மார்க்க திருமணம்
பெண்ணிடை நான்கும் ஆணிடை மூன்றும்
அண்ணுற வமைத்த அருட்பெருஞ்ஜோதி
ஔடதம் என்பது எந்த அளவுக்கு ஒரு நோயால் பாதித்தவனுக்கு அவசியமோ அந்த அளவுக்கு பிறவி எனும் நோயால் பாதித்த ஆன்மாவிற்கு திருமணம் என்பது அவசியமாகிறது. எல்லா உயிரினங்களும் இயற்கை நியதிப்படி உறவுநிலை மேற்கொள்ளும்போது மனிதன் மட்டும் இயற்கை நியதிக்கு முரண்பட்டு தனித்திருப்பது அவசியமில்லை. இந்த அடிப்படையில் மனிதபிறவிக்கு உறவு நிலையை வகுக்கும் திருமணத்தை எப்படி சன்மார்க்கத்தில் நடத்துவது என காண்போம். சன்மார்க்க திருமணம் என்பது ஞானவழி நடக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படுத்தபடும் வாழ்க்கை ஒப்பந்தமாகும். இதன்மூலம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும் வள்ளல் கருணைமிகு இராமலிங்கம் அவர்களையும் சாட்சியாக வைத்து ஞான வாழ்க்கையை ஆரம்பிக்க செய்யும் வழிபாடும் உறுதிமொழியும் கொண்டு திருமண அடையாளமாக மங்கலநாண், மெட்டி ஆகியவைகளை அணிவிக்கும் விழாவாகும்.
திருமண வாழ்க்கையை இயற்கை நியதிப்படி நடத்துவதற்காக ஆண்டவர் ஆணுக்கு மூன்று இடத்திலும் பெண்ணுக்கு நான்கு இடத்திலும் ஜீவசக்தியை வைத்துள்ளார். அந்த இருவருக்கும் உள்ள ஏழு இடங்களும் தத்துவம் கெடாமல் ஒழுங்காக செயல்பட்டால்தான் வெற்றிகரமாக மணவாழ்க்கை அமையும். சந்ததி விருத்தியாகும். என்பதையும் கருத்தில் கொள்வதுடன் மண வாழ்க்கை தொடர்ந்து ஞானவாழ்க்கையை அடிப்படையாக கொள்ள வேண்டும் என்பதால் ஒரு முறையான திருமண ஒப்பந்தம் சன்மார்க்க முறையில் எப்படி நடத்தலாம் என்று வள்ளல் பெருமானிடம் சத்விசாரம் செய்து அமைக்கப்பட்ட வழிமுறையை கொடுத்துள்ளோம். மேலும் இந்த வழிமுறைகள் வாழ்க்கைநியதி களை தம்பதியர் அறிந்திருக்க வேண்டுமென்பதற்காகவும் சுற்றமும் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவும் அமைக்கபட்டது.
ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்க்கையை மேற்கொள்ளும் விழாவை பண்டைய நாளில் இருவருக்கும் உறவினர்களால் ஒரு நல்ல நாளில் புனித நீராட்டுவதின் மூலம் முடித்து வைத்தார்கள். ஒரு ஆணின் காலடிச் சுவடுகளை பின்பற்றி ஒரு பெண் ஏழு அடி நடந்தாலேயே அவர்கல் இருவரையும் தம்பதிகளாக அங்கீகரித்தார்கள். தாலியும், மெட்டியும் பிற்காலத்தில் திருமண அடையாளமாக சேர்க்கப்பட்டது. நலங்கு வைப்பது, பாதபூஜை செய்வது, அரசாணை கால் வைத்து பூஜை செய்வது அனைத்தும் பிற்காலத்தில் சடங்குகளாக சேர்ந்து கொண்டன. தற்போதைய நவீன காலத்தில் திருமணப்பதிவு என்பது அரசு பதிவாளரிடம் பதிவு செய்யப்படுகிறது. அதுபோல் பண்டைய காலத்தில் திருமணம் செய்வது அந்தந்த பகுதி அரசரிடம் தெரிவிக்கப்படவேண்டும். அன்றைய காலக்கட்டத்தில் தகுதியுடைய குடும்ப திருமணங்களை அரசரே நேரில் சென்று வாழ்த்துவார். அரசர் செல்ல இயலாத திருமணங்களுக்கு திருமண அனுமதி ஓலையும் அரசர் சார்பாக ஒரு மூங்கில் கழியும் அனுப்பி வைக்கப்படும். அனுமதிஓலை பூஜையில் வைக்கப்படும்.மூங்கில் கழியை அரசராகக் கருதி மரியாதை செலுத்தப் படும். மேலும் பண்டைய காலத்தில் அரசர்களும் மாவீரர்களும் பல பெண்களை திருமணம் செய்யும் பழக்கம் இருந்தது. சில நெருக்கடியான காலங்களில் அவரவர் திருமணத்திற்கே கூட அவர்களால் வர முடியாத சூழலில் அவர்கலின் ஆயுதமான கத்தியை வைத்து மாப்பிள்ளையாக பாவித்து திருமணங்களும் நடந்துள்ளது. அன்றைய காலசூழலுக்கு இவையெல்லாம் அவசியமாக இருந்தது. இன்றைய காலசூழலுக்கு இவையெல்லாம் வெறும் சடங்காக தொடர்கிறது, அரசராட்சி போய் அரசர்களும் இல்லாத நிலையில் அரசாணைக்கால் வைத்து அரசரை கௌரவித்தல் என்பது அவசியமற்றது. இது போன்ற காலத்தால் மாறுப்பட்ட சடங்குகளையே வள்ளல் பெருமான் அவசியமில்லை என வலியுறுத்துகிறார். எனவே எல்லா வகையிலும் புரிந்து பக்குவப்பட்ட சன்மார்க்கிகளும் உறவினர்களும் இருந்தால் மூன்று முறை மஹாமந்திரம் கூறி சுத்த சன்மார்க்க சுக நிலையிலுள்ள மூத்தவரால் எடுத்துக் கொடுக்கும் மங்கல நாண் அணிவிக்கப்படுவதும் மற்றவர்கள் வாழ்த்துவதும் போதுமானது என்றும் முழுமையான ஆத்மரீதியான திருமணமாகவும் கொள்ளலாம் என்பதும் இதிலேயே திருமணம் நிறைவடையும் என்பதும் பொதுவான சன்மார்க்க விதியாகும்.
தற்போது வாழ்க்கை தத்துவங்களை வெளிப்படுத்தி திருமணம் செய்யும் முறையை காண்போம். சன்மார்க்க திருமணத்திற்கு மணமேடை இருந்தால் போதுமானது பந்தல் அமைக்க அவசியமில்லை. மேடையில் கிழக்கு நோக்கி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும் வள்ளல் பெருமானையும் முறைப்படி இருக்கை தினசரி வழிப்பாட்டில் கூறியுள்ளது போல் அமைக்கவும். ஆண்டவர் முன்பாக ஏழு குடங்களில் சுத்தமான நீர் நிரப்பி அதில் பன்னீர், மல்லிகை போன்ற வாசனாதி திரவியங்களை இட வேண்டும். மணமக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய திருமண உடைகளையும், அலங்காரப் பொருட்களையும் குளியலுக்கு தேவையான சோப்பு,ஷாம்பு, எண்ணை, போன்ற பொருட்களையும் இருவருக்கும் இரண்டு தட்டுகளில் தனித்தனியாக வைக்க வேண்டும். பிறகு மணமக்களும் சங்கத்தாரும் பெற்றோர்களும் சேர்ந்து தினசரி வழிப்பாட்டிலிருப்பது போல் வள்ளலார் வருகைப்பாடல், திருப்பள்ளியெழுச்சி பாடி அகவல் பாராயணம் செய்து கற்பூர ஆரத்தி செய்து சன்மார்க்க விண்ணப்பம் வைத்து கீழ்கண்ட சத்திய விண்ணப்பம் வைக்கவும். எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கிகளான(மணமக்கள் பெயர்) ஆகிய இருவரும் இன்றுமுதல் திருமணம் செய்து வாழும்பொருட்டு இந்த புனித நீரிலும் புத்தாடைகள் அலங்காரப் பொருட்களிலும் அருள் சக்தியை வழ்ங்கி, நீராடி அணிவதின் மூலம் இந்த திருமணம் சிறப்பாக அமைந்து வாழ்க்கையில் அருள்சக்தியும், பொருள்சக்தியும் பெற்று சன்மார்க்க சக்தியை உலகிற்கு நிருபித்து வாழ வாழ்த்தும்படியாகவும் எங்கள் ஞானகுரு கருணைமிகு இராமலிங்கம் சாட்சியாகவும் தங்களீன் தனிபெருங்கருணை சாட்சியாகவும் இந்த சத்திய விண்ணப்பம் வைக்கிறோம்.இதை ஏற்று சுபமாக நடத்தி முடிக்க அருளும்படி கேட்டுக் கொள்கிறோம். அதன் பொருட்டு எல்லாமாகிய தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தேவரீர் திருவருட்பெருங்கருணைக்கு,
வந்தனம்! வந்தனம்!! வந்தனம்!!!.
இவ்வாறு சத்திய விண்ணப்பம் வைத்து மணப்பெண்ணிடம் அவரது ஆடையணிகலன்களையும் நான்கு குடம் நீரையும், மணமகனுக்கு ஆடையணிகலன்களுடன் மூன்று குடம் நீரையும் அளிக்கவும். தற்போதைய வழக்கம் இரண்டு நாள்திருமணத்தில் முதல் நாள் இரவு இந்த அளவில் திருமண நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. திருமணநாள்காலையில் கொடுத்த பொருட்களை பயன் படுத்தி திருமண அலங்காரத்துடன் மணமேடைக்கு வந்துவிடும்படி கூறவும்.
(தொடரும்)
ஜோதிமைந்தன் சோ. பழநி
