ஜோதிமைந்தனின் சொல்லோவியம் - 4

கடந்த 16-01-1998 அன்று சுயநலம் தவிர மற்றதை அறியாத மனிதர் ஒருவர் தமது பிரச்சினைக்கு விளக்கம் கேட்டு மஹாமந்திர பீடம்வந்தார். அவர் நிலை வயதான கடைசி காலத்தில் மனைவியும் மதிப்பதில்லை, தமது ஒரே மகனும் மதிப்பதில்லை. ஆனால் எதையும் வெளியே சொல்ல முடிவதில்லை.தம் குடும்ப நன்மை தவிர எதைப்பற்றியும் கவலைப் படாத, அகங்காரப் பேயால் ஆட்டுவிக்கப்படும் ஒவ்வொரு மனிதனின் இறுதிக் காலமும் இப்படித்தான் இருக்கும் என்பதின் உதாரணம் வள்ளல் பெருமான் அவர்கள் அந்த மனிதரின் மனநிலையை பற்றி கூறிய சொல்லோவியம்:

இராமலிங்கம் ஆசி வழங்கினேன் என் அன்பரே,
சரியாக சங்கடத்தில் மனிதர் கஷ்டப்படுகிறார்,
சித்தனைப்போல் பித்தம் கலங்கி
நித்தம் மனம் குழம்பி, பத்தினியிடம் மறைக்கிறார்
புத்திதனை தெளிவிக்க, சக்திதனை வருவிக்க,
மற்றதனை தருவிக்க, கற்றதனை மனதில் அறிவிக்க,
பாட்டைப் படித்து, ஏட்டை முடித்து,
காட்டிற்கு செல்கையில், மாற்றம் எதை செய்வது
தூற்றும் சுற்றத்தாரை வெல்வதா,
போற்றும் நண்பர்களை சொல்வதா,
நாற்றாக நான் எதைக்கொள்வது,
என் தனையனா, மனையாளா,
யார் சொல்வதை கொள்வது, அல்லது தள்வது,
காலைமுதல் மாலைவரை,
சோலையாய் இருக்க வேண்டிய மனம்,
பாலையாய் மாறுவதேன்
நம்பிய நமசிவாயன்,
நல்லது செய்வானா, உள்ளது சொல்வானா,
என எண்ணும் முனிவரே,
மற்றது கேட்கின் உற்றது சொல்வேன்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க சுபம்.