மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி - 10 (ஜீவாத்மாக்களின் ஜீவித உரிமை-3)
இந்த ஆன்மாவானது அடுத்தக் கட்டமான 99 வது படிநிலைக்காக மனித நிலையில் யோகம் செய்கையில் சூக்கும தேகமானது அருட்பெருவெளியின் வாயிலை அடைந்து இறைவனின் தரிசனத்திற்காக காத்து நிற்கையில் இறைவன் திரியம்பல வாயிலில் காட்சியளித்து அருளுவார்.
அது சமயம் பிற ஆன்மாக்களின் நலனுக்காக வேண்டுபவன், எல்லாம் இறைவனின் கருணையால் கிடைத்தது என்று நினைத்து பிரார்த்திப்பவன் அஷ்டமாசித்துக்களும் பஞ்சகிருத்தியங்களும் பெற்று
மேலும் 99 படிநிலையை கடந்து மேலே செல்லும் தெய்வீக சக்தியாக மாறுகிறான். இறைவனை மறந்து தனக்கு யோகம் பெருக வேண்டும். எல்லோரும் தன் கீழ் பணிய வேண்டும். தானே எல்லாம் என்று கருதுபவன் முழுமையான அகந்தையில் அகப்பட்டு மீண்டும் எல்லா மாயாத் திரைகளும் மூடிக்கொண்டு அசுர சக்தியாக மாறிப்போகிறான். அதுவரை அவன் செய்த தவப்பயனால் விளைந்த சக்தியானது அகந்தையின் காரணமாக மேலும் பாவங்களை செய்ய தூண்டி அவனை 92 வது படிநிலைக்கு செல்லும் போது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
மேலும் மனித நிலையில் தமது சுதந்திரத்தை புண்ணியத்திற்கும் இறைவனை காண முயற்சிக்கும் யோக நிலைக்கும் பயன்படுத்தியவன் அருட்பெரு வெளியின் வாயில்வரை சென்று ஆண்டவர் தரிசனத்தை வாயிலில் காண்கிறான். அதன் மூலம்அஷ்டமாசித்துக்களும், பஞ்சகிருத்தியங்களும் பெற்று பக்குவ நிலை கேற்ப 99வது படி நிலை முதல் 104வது படி நிலை வரை அமர்கிறான். சில யுகங்கள் ஜீவாத்மாக்களின் ஜீவிதத்தை வழி நடத்தி தம்மையே தெய்வமாக முன்னிறுத்துகிறான். மீண்டும் தமது சக்தி குறைந்த போது மனித நிலைக்கு வந்து பயணத்தை மீண்டும் உயரேசெல்ல பயன்படுத்திக் கொள்கிறான். அதன் முலம் தான் ஏற்கனவே பெற்ற நிலையைவிட மேநிலையை அடைய முயற்ச்சிக்கிறான்.
இந்த 99வது படிநிலை முதல் 104 வது படிநிலை வரை உள்ள ஆன்மாக்களின் நிலை பற்றிய விவரங்களை காண்போம்
99வது படிநிலை மனித வாழ்க்கையில் யோக ஞானத்தின் மூலம் அஷ்டமாசித்துக்கள் கைவர பெற்ற ஆன்மாக்கள் அடையும்படிநிலையாகும். இந்த படிநிலையில் உள்ள ஆன்மாக்கள் கருப்பு,நீலம் ,பச்சை,சிவப்பு,மஞ்சள்,வெள்ளை பல வண்ணக் கலப்பு எனும் ஏழு மாயா திரைகள் விலகினாலும் பொன் மயமான ஞான திரையால் குறுக்கே இறைவனிடம் இருந்து பிரிக்கப்பட்டு ஞான உலகில் சஞ்சரிப்பவர்கள். தெய்வ படிநிலைகளான மாயா படிநிலையகளில் ஏழாவது படிநிலையில் இருப்பவர்கள். இவர்களை வள்ளல் பெருமான் அசுத்த மாயாகாரிகள் என்று தமது பேருபதேசத்தில் குறிப்பிட்ட்ள்ளார்.
100வது படிநிலை என்பது சூக்கும தேகத்தில் பிரம்ம பதவி எனும் படைக்கும் தொழிலை அடைந்த ஆன்மாக்கள் அடையும் படிநிலையாகும். இவர்கள் மாயா தெய்வ நிலைகளை கடந்து ஞானத்திரையை நீக்கி ஞான உலகில் சஞ்சரித்து கொண்டு காலத் திரையால் இறைவனிடம் இருந்து பிரிக்கப்பட்டவர்கள். 104 வது படிநிலை வரை உள்ள ஆன்மாக்கள் அனைவரும் இப்படியாகவே ஞான உலகில் இருந்து காலத் திரையால் இறைவனிடம் இருந்து பிரிக்கப்பட்டவர்களே.
101 வது படிநிலை என்பது சூக்கும தேகத்தில் விஷ்ணு பதவி எனும் படைத்தல்,காத்தல், எனும் இரண்டு கிருத்தியங்கள் அடைந்த ஆன்மாக்கள் உள்ள படிநிலையாகும்
102வது படிநிலை என்பது சூக்கும தேகத்தில் ருத்ர பதவி எனும் படைத்தல், காத்தல் ,அழித்தல் எனும் மூன்று கிருத்தியங்கள் அடைந்த ஆன்மாக்கள் உள்ள படிநிலையாகும்
103 வது படிநிலை என்பது சூக்கும தேகத்தில் மகேஷ்வரன் பதவி எனும் படைத்தல்,காத்தல்,அழித்தல், ருளல் எனும் நான்கு கிருத்தியங்களை அடைந்த ஆன்மாக்கள் உள்ள படிநிலையாகும்.
104 வது படிநிலை எனபது சூக்கும தேகத்தில் சதாசிவ பதவி எனும் படைத்தல்,காத்தல்,அழித்தல், அருளல், மறைத்தல் எனும் பஞ்ச கிருத்தியங்களும் பெற்ற ஆன்மாக்கள் அடையும் படிநிலையாகும். மேலும் மனித நிலையில் தமது சுதந்திரத்தை முற்றிலுமாக அன்பு எனும் பெரும் சக்தியை பயன்படுத்தி இயங்கியவன் 105 முதல் 107 வது படிநிலையடைந்து அருட்பெருவெளியில் திரியம்பலவாயிலையும் கடந்து சென்று ஆண்டவரை கண்ட பக்குவ நிலைக்கேற்ப பேரின்பத்தில் கொண்டு ஞானத்தில் ஞானியாக வாழ்ந்தவர்கள் அடையும் படிநிலையாகும்
105 வது படிநிலை என்பது மனித தேகத்திலேயே எந்த ஒரு மந்திர, யோக பிரயோகமும் இன்றி அன்பு ஒன்றையே அடிப்படையாக கொண்டு ஞானத்தில் ஞானியாக வாழ்ந்தவர்கள் அடையும் படிநிலையாகும்.
106 வது படிநிலை என்பது மனித தேகத்திலேயே அன்பு எனும் ஞானவழியில் சென்று சுத்த தேகம் பெற்ற ஆன்மாக்கள் அடையும் படிநிலையாகும்.
107 வது படிநிலை என்பது மனித தேகத்திலேயே அன்பு எனும் ஞானவழியில் சென்று சுத்த தேகம், பிரணவ தேகம் இரண்டையும் பெற்ற ஆன்மாக்கள் அடையும் படிநிலையாகும்.
108 வது படிநிலை என்பது அன்பையே சாதனமாக கொண்டு ஜீவகாருண்ய ஒழுக்கத்தால் எல்லா ஆன்மாக்களுக்கும் பரோபகாரம் செய்து இறைவனிடம் நேரிடையாக சத்விசாரம் செய்து மனித நிலையிலேயே சுத்த தேகமும் அதை தொடர்ந்து பிரணவ தேகமும் அதை தொடர்ந்து மிக உயர்ந்த நிலையான ஞான தேகமும் பெற்று உயர்வது. மேலும் தமது ஸ்தூல தேகத்தை எங்கு வேண்டுமானாலும் காற்றோடு காற்றாய் கரைத்து வேண்டும் போது வருவித்து இறைவனுடன் இரண்டற கலந்து லயிப்பதாகும். அதன் மூலம் அண்ட சராசரங்கள் அனைத்திற்கும் சென்று வரும் சக்தி பெற்று தானே எல்லா வகையான செயல்பாடுகளுக்கும் நிலைகளான அமைந்து மற்ற ஜீவாத்மாக்கள் சாட்சியமாக அமைய தம்மை ஆட்படுத்திக் கொள்ளும் உயர்நிலையாகும். இந்த நிலையோடு ஜீவாத்மாவின் பயணம் முற்று பெறுகிறது. இந்த உன்னதமான 108 வது படிநிலையை நமது ஞானகுரு கருணைமிகு இராமலிங்கம் எனும் திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் அடைந்து, இந்த அண்ட சராசரங்களை வழிநடத்த இறைவனுக்கு தம்மை கருவியாக்கி தம்மை உருவாக்கி கொண்டார்.
இந்த பூ உலகில் காலத்தை அடிப்படையாக கொண்டு மனிதர்கள் வாழ்க்கையும் வழிபாடும் நடத்தும் வகையில் என்ன திட்டமிட்டுள்ளார் என்பதையும் அடுத்த கால கட்டமாக சதுர்யுகத்தில் முதல் யுகமான கிருத யுகத்தில் அவரது பணியின் காரணம் பற்றியும் அவர் எமக்கு உரைத்ததை நாம் மற்றவர்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் கீர்த்தி நிறைந்த கிருதயுகம் என்ற தலைப்பில் ஆய்வு செய்வோம்.
நாம் இந்த அத்தியாயத்தில் கண்ட 93 வது படிநிலை முதல் 104 வது படிநிலை வரை உள்ள தெய்வநிலை ஆன்மாக்கள் காலத்திரையால் மறைக்கப்பட்டு சில காலத்தில் மீண்டும் மனித நிலைக்கு வருவார்கள். 105 முதல் 108 வரை படிநிலை ஆன்மாக்கள் இந்த சுழற்சியில் சிக்குவதில்லை. இதுவரை கடந்து வந்த அத்தியாயங்களின் கருத்துகளை மனதில் நிறுத்தி அடுத்த அத்தியாயத்திற்கு செல்வோம் இவ்வாறு சரியான கோணத்தில் சென்றால்தான் சத்யயுகத்திற்கும் சன்மார்க்கத்திற்கும் என்ன தொடர்பு என்பது தெளிவு கிடைக்கும்.
(தொடரும்)
ஜோதிமைந்தன் சோ. பழநி
