மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி - 14 (ஓங்காரமும் உருவ வழிபாடும்)

ஓங்காரமும் உருவ வழிபாடும்

ஓங்கார சக்திகளுற்ற வண்டங்களை
ஆங்காக வமைத்த அருட்பெருஞ்ஜோதி

அகவல் (595-596)

எட்டு நிலைகளை கடந்தால் மனிதன் இறைவனை அடைய முடியும் என்பது நிலை. இந்த எட்டு நிலைகளில் ஏழு மாயா நிலைகளாகவும் ஒன்று ஞான நிலையாகவும் இருக்கின்றன. இந்த ஒரு ஞான நிலையிலேயே ஒன்பது நிலைகளாக ஆன்மாக்கள் அமைந்துள்ளன. ஒன்பது நிலைகளில் முதல் ஐந்து ஞான நிலைகள் யோகத்தின் அடிப்படையிலான ஞானமென்றும் அடுத்த நான்கும் ஞானத்தின் அடிப்படையிலான ஞானமென்றும் வள்ளல் பெருமான் கூறுகிறார். இந்த நிலைகளில் முதல் ஏழு மாயா நிலைகளையும் அடுத்து ஐந்து யோகத்தின் அடிப்படையிலான ஞானபடிநிலையையும் இறைவனுடன் தொடர்பு படுத்த நாதம் சாதனமாக உள்ளது. ஞானத்தின் அடிப்படையிலான நான்கு ஞான படி நிலைகளுக்கு இறைவனுடன் தொடர்பு படுத்த அன்பு சாதனமாக உள்ளது. அன்பு சாதனமாக அமைவதென்பது ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் எல்லா ஜீவராசிகளிடம் ஏற்படும் அன்பாகும். மனிதர்கள் மீது மட்டும் வைக்கும் அன்பும் சாதி சமய மத ரீதியாகவும் கர்த்தாவை வணங்குவதை அடிப்படையாக கொண்ட அன்பும் எந்த விதத்திலும் இறை தொடர்புக்கும் ஆன்மா மேநிலையடவும் பயன்படாது. தெய்வநிலை ஆன்மாக்களையும் இறைவனயும் தொடர்புபடுத்தும் நாதத்தை நாம் ஓங்காரம் என்கிறோம். இதன் உச்சரிப்பை ஓம் என்று வரி வடிவம் அளிக்கிறோம். ஒவ்வொறு வரி வடிவத்திற்கும் ஆரம்பம் வியாபகம் முடிவு என்று மூன்று நிலைகள் இருக்கும். அந்த வகையில் இந்த ஓம் எனும் வரி வடிவத்திற்கு உ என்பது ஆரம்பமாகவும் ஆ என்பது வியாபகமாகவும் ம் என்பது முடிவாகவும் அமைகிறது. நாம் ஓங்காரத்தை உச்சரிக்கையில் உ ஆம் என்று மூலாதாரத்திலிருந்து உச்சரிக்க வேண்டும். தமிழில் ஒரு சிறப்பு யாதெனில் உ அ என்பது சேர்ந்த வார்த்தையாக வரும் போது ஒ என்றும், உ ஆ என்பது சேர்ந்த வார்த்தையாக வரும் போது ஓ என்றும் குறிப்பிட வேண்டும். உ அ என்றோ அல்லது உ ஆ என்றோ குறிப்பிடக் கூடாது. அந்த இடத்தில் அவை போலி எழுத்துக்கள் எனவும் இலக்கணம் வகுத்துள்ளார்கள். இதுபோன்றே அ இ சேர்ந்தால் ஐ என்றும் அ உ சேர்ந்தால் ஒள என்றும் உச்சரிக்க வேண்டும் என்பதுடன் வரி வடிவம் கொடுக்கையில் போலி எழுத்துக்களை பயன்படுத்துவது கூடாது என்பது இலக்கண மரபு.

இந்த அடிப்படையில் ஓம் என்பதை உ ஆம் என்றே உச்சரிக்க வேண்டும். அதுவே சரியான நாதமாகும். மேலும் சில ஆன்மீக வாதிகள் ஓங்காரத்திற்கு பொருள் கொடுக்கையில் அ என்பது ஆரம்பம் என்றும் உ என்பது வியாபகம் என்றும் ம என்பது முடிவு என்றும் கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறானதாகும். அ என்றும் மொழிக்கு முதலாக இருக்கலாம். ஆனால் சங்கின் நாதமும், ஓங்காரத்தின் நாதமும் உ என்ற உச்சரிப்பில் தான் ஆரம்பமாகிறது. மேலும் போலி எழுத்து இலக்கணப்படி அ என்ற எழுதிற்கு பிறகு உ என்ற எழுத்தின் உச்சரிப்பு வந்தால் ஒளம் என்றுதான் உச்சரிப்பும் வரிவடிவமும் வரும். ஓளம் என்பது ஆக்ஞா சக்கரத்தின் மூலமந்திரமாகும். ஓம் என்பது சஹஸ்ராகாரத்தின் மூலமந்திரமாகும். இதன்மூலம் ஆக்ஞா சக்கரமே மனிதனின் முழுச்செயல்பாட்டின் இறுதி நிலை என தம்மையறியாமல் ஏற்றுக் கொள்கிறார்கள். மேலும் சிலர் பெண்கள் ஓம் உச்சரிக்கக்கூடாது தேவதா மந்திரங்களுடன் முன்னதாக ஓளம் சேர்த்து உச்சரிக்கவே உரிமை பெற்றவர்கள் என்றும் வாதிடுவார்கள். இதன் மூலமாக அனைவரும் கர்த்தாக்களுடன் நின்று போகிறார்கள் சஹஸ்ரா ஹாரத்திற்குள் நுழைந்து ஏக இறைவன் தன்மையை உணரும் வாய்ப்பை தம்மையறியால் இழக்கிறார்கள்.

மேலும் இந்த அடிப்படையில் உச்சரிக்கப்படும் ஓங்காரமானது மந்திரங்களுக்கு முன்னதாக் ஆரோகணமாக அமைந்து மந்திரங்கள் மூலம் சக்தி பெறுவதற்கு மூலாதாரமாக அமைகிறது. மேலும் இறைவனிடமிருந்து நேரடியாக சக்தி பெறுவதற்கு பண்டைய ஞானிகள் ஓங்காரத்தை மட்டும் உபயோகித்தார்கள் பஞ்ச பூதங்களுக்கும் நவகிரகங்களுக்கும், பஞ்சகிருதி கர்த்தாக்களுக்கும், உப தேவதைகளுக்கும் மந்திரங்களை ஏற்படுத்தி அவர்கள் மூலமாக இறைவனிடமிருந்து அருளை பெரும் முறையை ஏற்படுத்திய போது மந்திரங்களுக்கு முன்னதாக ஓங்காரத்தை பயன்படுத்தி அதன் மூலம் இறை அருளை பெற்றார்கள். இந்த அடிப்படையில் ஓம் சிவாய நமஹ என்று ஒரு பக்தன் உச்சரிக்கையில் ஓம் என்று சொல்லும் போது அருள்சக்தியானது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் இருந்து வெளிக்கிளம்பி சிவாய எனும் போது சிவன் எனும் கர்த்தாவை அடைந்து நமஹ எனும்போது பக்தனை வந்து அடைகின்றது. இதைப் போலவே ஓம் நமோ நாராயணாய நமஹ எனும் போது அருள் சக்தி இறைவனிடம் இருந்து புறப்பட்டு நாராயணன் எனும் விஷ்ணுவை அடைந்து பிறகு பக்தனை வந்தடைகிறது. மேலும் இதன் மூலம் இறைவனிடம் உள்ள சக்தியில் பல கோடியில் ஒரு பங்கு அருள் சக்தி கர்த்தாவிற்கு சென்று அவரிடமிருந்து பல கோடியில் ஒரு பங்கு சக்தியே பக்தனை வந்தடையும். மேலும் ஓங்காரமானது ஆன்மாவை 104 வது நிலையான சதாசிவ நிலை வரைக்கும் தான் உயர்த்தும். அருள் சக்தியை மட்டும் இறைவனிடம் இருந்து கீழுள்ள ஆன்மாக்களுக்கு வழங்கும். எல்லா உயிர்களிடத்தும் அன்பு மட்டுமே இறைவனிடம் மனிதனை சேர்ப்பிக்கும். மேலும் ஆன்மாவிற்கு அருளகங்காரம் 104 வது படிநிலை வரை உடன் வரும்.

மேலும் சரியை கிரியை வழிபாடுகளில் கர்த்தாக்களை சஹஸ்ர நாமங்களாலும் அஷ்ட்டோத்ர சத நாமங்களாலும் பூஜிக்கையில் பெரும்பாலும் ஓங்காரம் இணைக்காமல் பாராயணமாக சொல்லும் முறை உள்ளது இதனால் இறைவனிடமிருந்து சக்தியை பெறமுடியாமல் தமது சக்தியை செலவிட்டு கர்த்தாக்கள் தமது சக்தியை சிறிது சிறிதாக இழக்கிறார்கள். சஹஸ்ர நாமமாகட்டும் அஷ்ட்டோத்ர சதமாகட்டும் ஓங்காரம் இணைந்து சொல்லும் நாமாவளியே சரியானது நியாயமானதுமாகும். கர்த்தாக்களுக்கு அருள் சக்தியை ஏற்படுத்தி கொடுத்து அதிலிருந்து சிறிது அருள்சக்தியும், பொருள் சக்தியும் பெறுவதே சரியை கிரியை வழிபாடுகளின் நியதி. நியதியை மீறி கர்த்தாக்களிடமுள்ள சக்தியை ஓங்காரத்தின் துணையின்றி பாராயணத்தின் மூலம் பெறுவது அந்த கர்த்தாக்களுக்கு செய்யும் துரோகம் என்றாலும் மிகையில்லை. மேலும் கர்த்தாக்கள் வேண்டுதல் மூலம் பயனளிக்கிறவர்கள், ஒரு பக்தன் ஒரு வேண்டுதலை வைத்து இது நிறைவேறினால் சஹஸ்ர நாம அர்ச்சனை செய்வதாக வேண்டிக் கொள்கிறான். அந்த பிரார்த்தனை நிறைவேறிய பின் அவன் தனது கடமையை செலுத்த சரியை கிரியை வழிபாடுகளை நடத்த தெரிந்த அல்லது அதற்காக நியமிக்கப்பட்ட குருவை நாடுகிறான். அவர் சஹஸ்ர நாமத்தை ஓங்காரத்துடன் இணைந்து முழுமையாக செய்தால் தான் அந்த அர்ச்சனையில் பலனாக கர்த்தாவானவர் தன் பக்தனுக்காக செலவிட்ட அருள் சக்தியை திரும்ப பெற இயலும் அதை தவிர்த்து நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி அரைகுறையாக பூஜை முடிந்தால் கர்த்தாக்களும் அருள் சக்தியை ஈட்ட முடியாது அதனால் கர்த்தாக்களுக்கு கோபம் வந்து எதிர் விளைவுகளையும் ஏற்படுத்துவார்கள். மேலும் சில காலங்களில் அந்த கர்த்தாவானவர் மீண்டும் ஈட்ட முடியாத அளவுக்கு சக்தியிழந்து ஞானத்திலிருந்து கீழிறங்கி படிப்படியாக மாயா நிலைகளில் இறங்கி மீண்டும் மனிதனாக பிறந்து மாயையில் அகப்பட நேரிடும். மேலும் தற்போது பணம் தான் வழிபாட்டை நிர்ணயிக்கிறது. சரியான முறையில் வழிபாடு செய்ய காலம் அதிகமாக ஆகும் என்றால் அதை குருவானவர் பக்தனுக்கு எடுத்து சொல்லி சரியான முறையை செய்ய வழிவகை செய்ய வேண்டும். மேலும் 10 பக்தர்களுக்கு ஒரு நாளில் அரை குறையாக பத்து முறை வழிபாடு செய்வதை விட ஒரேபக்தனுக்கு ஒரே முறை வழிபாடு சரியான முறையில் செய்து 10 பேரிடம் கிடைக்கும். தட்சணையை ஒருவரிடம் கேட்டுப்பெறலாம் தவறில்லை. இதன் மூலம் கர்த்தாவும் அருள் சக்தியை இழ்க்கமாட்டார். பக்தனும் பரிபூரணமாக தமது கடமையை செய்தவனாகிறான்.

இது போன்ற முறையற்ற செயல்பாடுகள் எல்லாரும் செய்வதில்லை. அதிகமான மக்கள் வருகை உள்ள ஆலயங்களில் இவ்வாறு தவறுகள் நடக்க நிறைய வாய்ப்புகள் ஏற்படுகின்றன. இந்த கருத்துக்கள் யாரையும் புண்படுத்தும் நோக்கில் வெளியிடப் பட்டவை அல்ல. அருள் சக்தியானது மனிதர்களின் அறியாமையால் வீணாகிறது என்ற ஆதங்கத்துடன் வெளியானவை. மனிதர்களின் வழிபாடே கர்த்தாக்களின் அருள் வலிமையை நிர்ணயிக்கிறது. சரியை, கிரியை, யோகம், ஞானம் இதில் எந்த வகை வழிபாட்டு முறையாக இருந்தாலும் சரியான வகையில் வழிபாடு செய்து மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்து இறைவனிடம் சக்தி பெற்று எல்லா உயிர்களுக்கும் பயனளிக்க செய்வது எவ்வாறு என்று சத்விசாரம் செய்தபடியே சரியான நிலையை கொள்வதே மனிதனின் கடமையாகும். இந்த கடமை சாதி, குலம், வருணம், சமயம், மதம், ஆசிரமம் ஆகிய எந்த அடிப்படையிலும் வருவதல்ல. இறைவன் காட்டிய வழியை சரியாக பின்பற்றுவதே அவரவர் உயர வழியாகும்.

தோன்றிய வேதாகமத்தை சாலம் என உரைத்தோம், சொற்பொருளும் இலக்கியமும் பொய் எனக்கண்டறியேல்
ஊன்றிய வேதாகமத்தின் உண்மை நினக்காகும், உலகறி வேதாகமத்தை பொய் எனக் கண்டுணர்வாய்
ஆன்ற திருவருட்செங்கோல் நின்க்களித்தோம் நீயே, ஆள்க அருள் ஒளியால் என்றளித்த தனிச்சிவமே
ஏன்ற திருவமுதெனக்கும் ஈன்ற பெரும்பொருளெ, இலங்கு நடத்தரசெ என் இசையும் அணிந்தருளெ.

(தொடரும்)

ஜோதிமைந்தன் சோ. பழநி