மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி - 19 (துறவறமும் உறவறமும்)

துறவறமும் உறவறமும்

தன் உறவனைத்தையும் தன் அரசாட்சியில்
என் உறவாக்கிய என் தனித் தந்தையே

ஒருவரே இறைவன் எனும்போது உலகிலுள்ள ஆன்மாக்கள் அத்தனையும் அவரின் குழந்தைகளாக அமைகின்றன. இந்த ஆன்மாக்கள் 108 படிநிலைகளாக இருக்கின்றன என்பதை பார்த்தோம். இவற்றில் மிக உயர்ந்த வகையில் சுதந்திரம்,ஸ்தூல உடல், ஆறறிவு ஆகியவற்றை கொண்ட மனிதனையே நாம் உயர் பிறப்பாக கருதும்படி இறைவன் வழி நடத்துகின்றார்.மனிதனை விட மேலான தெய்வ நிலையில் கூட மனித நிலையில் செய்யக் கூடிய பாவ புண்ணியங்களை அடிப்படையில் அடைந்த உயர் நிலைதானே தவிர அந்த நிலைக்கு ஆதாரமே மனிதன் எனும் போது மனிதனை விட மேலான பிறவி யாதுமில்லை. மனித நிலையோடு பிறவி என்பது முற்றுப்பெற்று அதற்குமேல் மேல்நிலைகள்தான் அமைகின்றனவே. தவிர ஆன்மாக்களுக்கு மனித நிலையை கடந்த பின் யோனி பிறப்பு அமைவதில்லை. புராணங்களில் கூறப்படும் தெய்வங்கள் பிறப்பு என்பவை யனைத்தும் அவர்கள் மனித நிலையில் பிறந்திருந்தபோது வாழ்ந்த கதையாகும். பலகாலம் செவிவழி செய்தியாக வந்து பிறகுதான் தெய்வநிலை ஏற்பட்டு புராணமாக இயற்றப்பட்டது.

இந்த நிலையில் மனிதனின் வாழ்க்கையை பெரியோர்கள் நான்குவகையாக பிரித்தார்கள். அவைகள் பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வனப்பிரஸ்தம், துறவறம் என்று கூறப்படுகின்றன. அவற்றில் பிரம்மச்சரியம் என்பது கிரகஸ்தம் ஆவதற்கு முன்பு கடைபிடிக்கும் சாதகர் நிலை(பயிற்சி நிலை) எனவும், வனப்பிரஸ்தம் என்பது துறவறம் மேற்கொள்வதற்கான சாதகர் நிலை எனவும் கொள்ளலாம். இந்த அடிப்படையில் மனிதனின் வாழ்க்கை பிறந்ததிலிருந்து பதினாறு வயது வரை பாலபருவம் எனவும் ,அந்த சமயம் அவனை எந்த நியதிகளும் கட்டுபடுத்துவதில்லை. அடிப்படைக் கல்வி மட்டுமே கட்டுபடுத்தும்.

பதினாறு வயதிலிருந்து இருபத்துநான்கு வயது வரை அவன் பிரம்மச்சாரி, அந்த சமயம் வாழ்க்கைகல்வியை கிரகஸ்தனாக இருப்பதற்கு வேண்டிய சகல விதமான விஷயங்களையும் படிப்பறிவாக அறிந்து கொள்கிறான்.

இருபத்து நான்கு வயதில் பிரம்மச்சரிய நிலையை முடித்து தான் கற்ற கல்வியை தனக்கென்று இறைவனால் உருவாக்கப்பட்ட மனைவியுடன் சேர்ந்து கிர்கஸ்தனாகி அனுபவ நிலைக்கு கொண்டு வருகின்றான். அந்த நிலை ஐம்பத்தாறு வயது வரை நீடிக்கிறது.

ஐம்பத்தாறு வயதிலிருந்து மனிதன் வனப்பிரஸ்த நிலைக்கு சென்றுவிடவேண்டும். அதாவது எதிலும் பொதுவான நோக்கம் கொண்டு துறவு நிலைப்பற்றி முழுமையாக படிப்பறிவாக அறிய வேண்டும். அதிகபட்சமாக அவன் எழுபத்திரண்டு வயதுக்கு மேல் வாழ்ந்தால் முற்றிலும் துறவியாகிவிடவேண்டும். இந்த அடிப்படையில் வயதை அடிப்படையாகக் கொண்டுதான் வாழ்க்கைநிலையை தேர்ந்தெடுத்தார்கள். மேலும் பிரம்மச்சரிய நிலையில் எந்த உணர்வுகளுக்கும் இடம் கொடுக்காமல் கிரகஸ்த நிலைக்கு தம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். உணர்வுகளுக்கு அடிமையாகாமல் உருவாகும்போதுதான் எதிர்காலத்தின் சாதக பாதகங்களை தெளிவாக அறிய இயலும்.

சில மனிதர்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கஷ்டங்களை பார்த்து அஞ்சி நடுங்கி கிரகஸ்த நிலைக்கு செல்லாமல் நேரடியாக துறவியாக சென்று விடுகிறார்கள். எந்த வாழ்வியலாக இருந்தாலும் இன்பமும் துன்பமும் கலந்தே வரும். மனிதனின் வாழ்க்கை முழுமையடைய வேண்டுமானால் கிரகஸ்த வாழ்க்கையும் நடத்த வேண்டும். அது சிற்றின்ப வாழ்க்கை என்று எண்ணாமல் நமது பயணத்தின் பாதை என மனதில் கொண்டு குடும்ப வாழ்க்கையை ஏற்க வேண்டும். எத்தனையோ மனிதர்கள் துறவு வாழ்க்கை மேற்கொண்ட பின் மறைமுகமாக இல்லற சுகத்தை தவறான வழியில் நாட, அவர்கள் பெரும்பாதிப்பு அடைந்திருக்கிறார்கள். அதைவிட இல்லறத்திலும் சிறிது காலம் இருந்து தமது கடமைகளை முழுமையாக செய்து பிறகு துறவு நிலைக்கு செல்லலாம். இதனால் எந்த பாதிப்பும் வராது. குடும்பம் என்பது யோனி இன்பத்தில் முடிவடைவதில்லை,அது ஒரு பெரிய கடமையாக விரிவடைகிறது. கிரகஸ்தர்களை சார்ந்தே துறவிகள் வாழ வேண்டி இருக்கிறது. மேலும் பண்டைய சப்த ரிஷிகள் போன்ற ஞானிகள் அனைவரும் இல்லறத்தில் இருந்து கொண்டுதான் பெரும் சாதனைகளைபடைத்தார்கள்.

எந்த ஒரு சாதனைகளும் முற்றிலும் மனித உறவுகளை துறந்து சென்றவர்களால் நடத்தப் படவில்லை. அது போன்ற மனிதர்கள் அனைவரும் சாதக நிலையிலேயே மறைந்து போனார்கள் வாழ்க்கையை தைரியமாக எதிர்கொண்டு பிரசினைகளுக்கு இடையே வாழ்ந்து தர்ம நெறிமுறைகளை கடைபிடித்து வாழ்ந்த ஞானிகளும் பெரியோர்களும்தான் மனித சமுதாயத்திற்கு வேண்டிய சகல விதமான வாழ்க்கை நியதிகளையும் ஆன்ம அறிவையும் கல்வி பொக்கிஷங்களையும் உருவாக்கி கொடுத்தார்கள். பண்டைய காலத்தில் சிறு சிறு இராஜ்ஜியங்கள் வைத்துக் கொண்டு சிற்றரசர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு இடையே எப்போதும் ஏதாகிலும் ஒரு காரணம் கொண்டு சண்டையிட்டுக் கொண்டே இருப்பார்கள். அரசன் போர்ப்பிரகடனம் செய்து விட்டால் எல்லா ஆண்களும் போருக்குப் புறப்பட வேண்டும். அந்த சமயத்தில் வீட்டிலிருந்து புறப்படுகையில் இனி தாம் வந்தாலும் வராவிட்டலும் வீட்டை நிர்வகிக்க தகுந்த ஏற்பாட்டை செய்து விட்டு, வீட்டை துறந்து காவியுடை தரித்து போருக்கு செல்வார்கள். பண்டைய காலத்தில் போருக்கு செல்பவர்கள் காவியுடை தரிக்கும் பழக்கம் எல்லா அரசர்களாலும் பின்பற்றப்பட்டு வந்தது. சண்டை முடிந்து உயிருடன் மீண்டு வந்தால் மறுபடியும் வீட்டுப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள். அங்கேயே இறந்து போனால் மற்ற படைவீரர்களால் இறுதி சடங்கு முடிக்கப் பட்டு விவரம் வீட்டிற்கு தெரிவிக்கப்பட்டுவிடும். இவர்களை வள்ளல் பெருமான் இராஜச துறவிகள் என்கிறார். இப்படியாக இராஜச துறவிகளுக்காக ஏற்பட்ட காவியுடையை நிரந்தரமாக வாழ்க்கையை துறந்தவர்களும் அணிந்து கொண்டார்கள். மேலும் நாம் ஒன்றை இதில் காணவேண்டும். உடையை தயாரிக்க உதவும் பருத்தியாக இருப்பினும் பட்டு நூலாக இருப்பினும் இயற்கை நிறம் வெண்மையாகும். மூலப் பொருட்களுக்கு செயற்கையாகவே காவி உட்பட அனைத்து வண்ணங்களும் உருவாக்கப்பட்டன. அந்த அடிப்படையில் ஞானிகள் செயற்கை அலங்காரங்களை விரும்பாமல் அதைப் பயன்படுத்தினார்கள். அதனால் ஞானியர் உடைகள் பழுப்பு கலந்த வெண்மையாகவே இருந்தது. அதனால்தான் வள்ளல் பெருமான் ஞானியருக்கு தகுந்த உடை வெண்மை நிறமென்றும் காவி நிறம் இராஜச துறவிகளுக்குரியது என்றும் தமது ஆறாம் திருமுறையில் குறிப்பிடுகின்றார்.

இப்படியாக நாம் துறவறம் என்றத் தன்மையை கண்ட பின் எல்லோராலும் இனிதே போற்றப்படும் கிரகஸ்த நிலையை பார்க்கும்போது அதற்கு இல்லறம் என்று பெயர் வைத்தார்கள். இல்லறத்திற்கு சிறந்த நியதிகள் வகுக்கப்பட்டு அவை எல்லோராலும் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. தற்போதைய இல்லறத்தின் நியதிகள் மிகவும் பரிதாப நிலையை அடைந்து விட்டன. இல்லறத்தார்கள் தம் குடும்பத்தில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, அக்கா, தம்பி, தம்பி மனைவி, தங்கை, பிள்ளை, பெண், பேரன், பேத்தி என பல வகையான உறவு நிலைகளையும், தமக்கு மனைவியாக வாய்த்த பெண்ணுடன் இணைந்து அரவணைத்து சென்றார்கள். அத்துடன் தான் பிறந்த வீட்டிற்கென்று சில கடமைகளையும், தன் மனைவி வீட்டிற்கான கடமைகளையும், தான் பிறந்த ஊர், தேசம், மொழி, கலாச்சாரம், உத்தியோகம் ஆகியவற்றிற்கான கடமைகளையும் ,செவ்வனே செய்து ஆன்ம நிலையிலும் மற்ற உயிரினங்களுக்கான கடமைகளையும், இறந்துபோன தமது மூதாதையருக்கான கடமைகளையும், தருமநிலையில் நின்று சிறப்பாகச் செய்து வந்தார்கள். தன்னை படைத்த இறைவனுக்கும் நன்றி செலுத்தி வந்தார்கள். இப்படியாக விருப்பு, வெறுப்பின்றி கடமைகளை முறையே செய்து வந்தவர்களை “நிர்ஷ்காம்ய கர்ம “யோகி” என்று கூறினார்கள். இல்லறத்தார்க்கு இந்த நியதிகள் வலியுறுத்தப்பட்டன. ஆனால் இந்த உயர்ந்த தர்மமானது சிறிது சிறிதாக சுயநலம் தலைதூக்கியதின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனும், தான், தன் மனைவி, தன் மகன்,மகள் என்று குறுகிய வட்டமாக அமைத்துக் கொண்டான். இந்த குறுகிய வட்டத்திலிருப்பவர்களுக்காக மனிதன் எந்த ஒரு பாவத்தையும் துரோகத்தையும் செய்ய தயங்குவது இல்லை.விருப்பு, வெறுப்பற்று தமது கடமைகளை தரும நெறியில் பின் பற்றுபவர்கள் அத்தி பூத்தார்போல்தான் காணப்படுகிறார்கள்.

இது போன்று மனித சமுதாயம் தமது சுய கடமைகளை மறந்து செயலிழந்து சென்று கொண்டு இருப்பதால் ஆண்டவர் கட்டளைப்படி வள்ளல் பெருமான் மீண்டும் மனிதனுக்கான கடமைகளை ஜீவகாருண்யத்தின் அடிப்படையில் வகுத்து சமயங்கடந்த நிலையில் இந்த கடமைகளை ஒழுங்காக செய்து சன்மார்க்க கொள்கைகளை பரப்புகின்ற இல்லறத்தார் கடைபிடிப்பது “உறவறம்” என்று எமக்கு அருளினார்.

(தொடரும்)
அடுத்த தொகுப்பு வெளியீடு அடுத்த வாரம்

ஜோதிமைந்தன் சோ. பழநி