மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி - 24 (தினசரி வழிபாட்டு முறை)
சன்மார்க்க வழிபாட்டு முறைகள்
நாம் வழிபாடு ஆரம்பிப்பதற்கு வீட்டில் ஒரு அமைதியான அறையில் கிழக்கு நோக்கி அமையும் படியாக குறைந்த பட்சம் 21 அங்குலம் (1+3/4 அடி) உயரமுள்ள ஒரு தட்டையான ஒரு மரத்தாலான ஸ்டூல் அல்லது தட்டையான பாத்திரம் கவிழ்த்து வைப்பதின் மூலம் ஆண்டவருக்கு பீடம் ஏற்படுத்த வேண்டும். அதன் மீது வெள்ளை அல்லது பொன்மஞ்சள் நிறமுள்ள துணியை போர்த்த வேண்டும். அதன் மீது ஒரு தாம்பாளத் தட்டு வைத்து அதுனுள் மண் அகல் அல்லது நந்தா விளக்கு வைக்க வேண்டும். நாம் அதற்கு நேரெதிராக அமர்ந்து கொள்ள வேண்டும். (தகர கூண்டு கண்ணாடி விளக்காக இருந்தாலும் 21 அங்குல உயரமுள்ள பீடத்தின் மீது வைக்க வேண்டும்) விளக்கிற்கு பின்புறம் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி வைக்க வேண்டும் நாம் ஜோதி ஏற்றும் போது கண்ணாடியிலுள்ள ஒரு ஜோதி தெரியும். நமது பார்வைக்கும் விளக்கிலுள்ள ஜோதியும், கண்ணாடியிலுள்ள ஜோதியும் இரண்டும் சேர்ந்து ஒரே நேர்க்கோட்டில் ஒன்றாகத் தெரியும்படி அமைத்து எதிரில் அமர்ந்து கொள்ள வேண்டும். நமக்கும் பீடத்திற்கும் இடையே தரையில் ஒரு தீபம் ஜோதியை நோக்கி வைத்து கொள்ள வேண்டும்.
மூன்றுமுறை மகாமந்திரம் சொல்லி மேலே உள்ள ஜோதியையும் கீழே உள்ள தீபத்தையும் ஏற்ற வேண்டும் இரண்டு விளக்குகளுக்கும் கண்டிப்பாக தேங்காய் எண்ணையே பயன்படுத்த வேண்டும்.
விளக்கெண்ணை சயன அறைக்கும்
இலுப்பை எண்ணை இருள் உலக ஆன்மாக்களுக்கும்
புங்க எண்ணை ஏவல் தெய்வங்களுக்கும்
வேப்பெண்ணை காவல் தெய்வங்களுக்கும்
நல்லெண்ணை நவக்கிரகங்களுக்கும் உகந்தது
சுத்த சன்மார்க்கத்தில் ஜோதிக்கு உகந்தது தேங்காய் எண்ணைதான் என அறிக. அருள்சக்தியை வழங்க வல்லது தேங்காய் எண்ணை ஜோதி. பொருள் சக்தி வழங்க வல்லது பசு நெய்யால் ஏற்றும் ஜோதி. நெய்யால் ஏற்றும் ஜோதி செலவினம் அதிகமாகும் என்பதால் தேங்காய் எண்ணையே சிறந்தது. பொருள் சக்திக்காக வழிபடுபவர்கள் நெய் தீபம்ஏற்றவும்.
அருளாளர் வருகின்ற தருணம் இது தோழி
ஆயிரம் ஆயிரங்கோடி அணிவிளக் கேற்றிடுக
தெருளாய பசுநெய்யே விடுகமற்றை நெய்யேல்
திருமேனிக் கொருமாசு செய்தாலும் செய்யும்
இருளேது காலைவிளக் கேற்றிட வேண்டுவதோ
என்னாத மங்கலமா ஏற்றுதலாங் கண்டாய்
மருளேல் அங்கவர்மேனி விளக்கமதென் கடந்த
மதிகதிர் செங்கனல் கூடிற்றென்னினும் சாலாதே
– அனுபவமாலை
ஒவ்வொரு சுத்த சன்மார்க்கியும் தினமும் குறைந்த பட்சம் 24 நிமிடம் இதுபோல் ஜோதி ஏற்றிவைத்து மகாமந்திரம் சொல்ல வேண்டும். வியாழக்கிழமைகளில் 72 நிமிடம் சொல்ல வேண்டும் அல்லது தினசரி ஒரு முறை அகவல் பாராயனம் செய்ய வேண்டும்.
ஜோதியை ஏற்றிய பின்னர் வள்ளலார் வருகைப் பாடல் பாடவும் பெரும்பாலான சன்மார்க்கிகள் இதில் எழுதியுள்ள வருகைப் பாடலைப் பாடி வருகிறார்கள். எனவே நாமும் அதை இங்கே எழுதியிருக்கிறோம். இந்த பாடலை எழுதியவர் “கூடலூர் சிவ துரைசாமி” எனும் சன்மார்க்க புலவர் என தெரிய வருகிறது. அவர் வள்ளல் பெருமானின் அன்பிற்கு பாத்திர மானவர் என்பதில் ஐயமில்லை. அவருக்கு நமது நன்றி.
வருகைப்பாடல் பாட இயலாதவர்கள் பனிரெண்டு முறை மகா மந்திரம் கூறி வடலூர்வள்ளல்பெருமான் வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தால் அவரும் தமது ஞான தேகத்துடன் வந்து பூஜையில் கலந்து கொள்வர் என்பது எனது நம்பிக்கை. வருகைப்பாடல் முடித்தப்பின் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கான திருபள்ளியெழுச்சி பத்துப்பாடல்களை பாட வேண்டும். சுத்தசன்மார்க்கிகள் பூஜையில் பூக்களோ அல்லது நிவேதனப் பொருட்களோ வைக்க அவசியமில்லை.
திருப்ப்ள்ளியெழுச்சி முடித்தப்பின் மகாமந்திரம் ஜெபம் செய்யவும். இதற்கு எண்ணிக்கை அவசியமில்லை. 24 நிமிடம், 72 நிமிடம் என்று நேரம் கணக்கிட்டு ஜெபம் செய்தால் போதுமானது அல்லது அருட்பெருஞ்ஜோதி அகவலை முழுமையாக பாடவெண்டும். ஒருவர் மாற்றி ஒருவர் பாடும் முறை கூடாது. அருள்சக்தி வேண்டுபவர் முழுமையாக பாடவேண்டும். ஒருவர் மாற்றி ஒருவர் பாடினால் மனத்திருப்தி மட்டுமே கிடைக்கும். அகவல் அல்லது மகாமந்திரம் குறிப்பிட்டவாறு முடித்தப்பின் அட்டகம் பாடவும். அதன்பின் ஜோதிப்பாடல் பாடி வழிபாடு செய்யவும். அதன்பின் வாழ்த்துபாடலும் சுத்த சன்மார்க்க விண்ணப்பமும் வைத்து நமக்கு ஆண்டவரிடம் வேண்டுதல் இருந்தால் அதற்கு தனியாக ஒரு சத்திய விண்ணப்பம் வைத்து பூஜை முடிக்கவும். இதுவே சுத்த சன்மார்க்கிகள் தினசரி பூஜை செய்யும் முறையாகும்.
சுத்த சன்மார்க்க தினசரி பூஜை பாடல்கள் விவரம்:
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
(மூன்று முறை கூறி ஜோதி ஏற்றவும்)
எல்லாஞ்செயல் கூடும்
என்னாணை அம்பலத்தே
எல்லாம் வல்லான் தனையே ஏத்து.
இன்று வருமோ, நாளைக்கே வருமோ,அல்லது மற்றென்று வருமோ அறியேன் என்கோவே
துன்றுமல வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிக்கடந்து சும்மா இருக்கும் சுகம்.
சற்குரு நாதா, சற்குரு நாதா
சன்மார்க்க சங்கம் தழைக்க அருள் தாதா
வள்ளல் பெருமான் வருகைப் பாடல்
உலகந் தழைக்க வந்துதித்த உருவே வருக
ஓதாதே உற்ற கலைகள் அனைத்தும் உணர்ந்தோய் வருக
ஒன்றிரண்டற்று இலகு பரமானந்த சுக இயல்பே வருக
இம்பர்தமை இறவாக்கதியிலேற்றுகின்ற இறையே வருக
என்போல்வார் கலக்கந்தவிர்த்து கதியளிக்கும் கண்ணே வருக
கண்ணிறைந்த களிப்பே, களிப்பிலூறுகின்ற கனிவே வருக
கலைமதிதோய் வலகஞ் செறிந்த வடற்பதியின் வாழ்வே வருக
ஸ்ரீஇராமலிங்க வள்ளல் எனுமோர் மாணிக்கமணியே வருக வருகவே
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருப்பள்ளியெழுச்சி
பொழுது விடிந்ததெனுள்ளமென் கமலம்
பூத்தது பொன்னொளி பொங்கிய தெங்கும்
தொழுது நிற்கின்றனன் செய்பணி யெல்லாம்ஞ்
சொல்லுதல்வேண்டுமென் வல்ல சற்குருவே
முழுதுமானான் என் ஆகம வேத
முறைகளெலா மொழிகின்ற முன்னவனே
எழுதுதலரிய சீர் அருட்பெருஞ்ஜோதி
எந் தந்தையே பள்ளி எழுந்தருள்வாயே
துற்குண மாயை போய் தொலைந்தது, ஞானம்
தோன்றிடப் பொன்னொளி தோற்றிய கதிர்தான்
சிற்குணவரை மிசை உதயஞ்செய்ததுமா
சித்திகள் அடிபணி செய்திட சூழ்ந்த
நற்குணச் சன்மார்க்க சங்கத்தாரெல்லாம்
நண்ணினர் தோத்திரம் பண்ணி நிற்கின்றார்
எற்குண வளித்த வென்னருட்பெருஞ்ஜோதி
என்னம்மையே பள்ளி எழுந்தருள்வாயே
நிலந்தெளிந்தது கண மழுங்கிண சுவண
நீடொளி தோன்றிற்றுக் கோடொலிக்கின்ற
அலர்ந்தது தாமரை ஆணவ இருள் போய்
அழிந்தது கழிந்தது மாயை மாலிரவு
புலர்ந்தது தொண்டரோடு அண்டரும் கூடி
போற்றியோ சிவசிவ போற்றி என்கின்றார்
இலங்குரு அளித்த என் அருட்பெருஞ்ஜோதி
என் குருவே பள்ளி எழுந்தருள்வாயே.
கல்லாய மனங்களும் கரையப் பொன்னொளிதான்
கண்டது கங்குலும் விண்டது தொண்டர்
பல்லாரும் எய்தினர் பாடி நின்றாடிப்
பரவுகின்றார் அன்பு விரவுகின்றாராய்
நல்லார் மெய்ஞ் ஞானிகள் யோகிகள் பிறரும்
நண்ணினர் சூழ்ந்தனர் புண்ணிய நிதியே
எல்லாம்செய் வல்ல என் அருட்பெருஞ்ஜோதி
எந்தெய்வமே பள்ளி எழுந்தருள்வாயே.
புன்மாலை இரவெலாம் புலர்ந்தது ஞானப்
பொருப்பின்மேல் பொற்கதிர் பொலிந்தது புலவோர்
சொன்மாலை தொடுத்தனர் துதித்து நிற்கின்றார்
சுத்த சன்மார்க்க சங்கத்தாரெல்லாம்
மன்மாலையா வந்து சூழ்கின்றார்
வானவர் நெருங்கினர் வாழியென்கின்றார்
என்மாலை யணிந்த என் அருட்பெருஞ்ஜோதி
என் பதியே பள்ளியெழுந்தருள்வாயே.
ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே
ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்
பெருமைகொள் சமரச சுத்த சன்மார்க்க
பெரும்புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார்
அருமையும் எளிமையும் ஆகியன்றாகி
அம்பலத்தெ சித்தி ஆடல் செய் பதியே
இருமையும் அளித்த என் அருட்பெருஞ்ஜோதி
என் அரசே பள்ளியெழுந்தருள்வாயே.
சினைப் பள்ளி தாமங்கள் கொணர்ந்தனர் அடியார்
சிவசிவ போற்றியென்று உவகை கொள்கின்றார்
நினைப்பள்ளி யுண்ண தெள்ளாரமுது அளிக்கும்
நேரம் இந்நேரமென்று ஆரியர் புகன்றார்
முனைப் பள்ளி பயிற்றாது எந்தனைக் கல்வி பயிற்றி
முழுதுணர் வித்துடர் பழுதெல்லாம் தவிர்த்தெ
எனைப் பள்ளி எழுப்பிய அருட்பெருஞ்ஜோதி
என்னப்பனே பள்ளியெழுந்தருள்வாயே.
மதம் பிடித்தவர் எல்லாம் வாய்ப்பிடிப்புண்டு
வந்து நிற்கின்றனர் வாய் திறப்பிப்பான்
கதம் பிடித்தவர் எல்லாம் கடும்பிணியாலே
கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறுகின்றார்
பதம் பிடித்தவர் எல்லாம் அம்பலப்பாட்டே
பாடினர் ஆடினர் பரவி நிற்கின்றார்
இதம் பிடித்து எனையாண்ட அருட்பெருஞ்ஜோதி
என் ஐயனே பள்ளி எழுந்தருள்வாயே.
மருளோடு மாயை போய்த் தொலைந்தது மதங்கள்
வாய்மூடிக் கொண்டன மலர்ந்தது கமலம்
அருளோளி விளங்கியதொரு திருச்சபையும்
அலங்கரிக்கின்றனர் துலங்கி வீற்றிருக்க
தெருளொடு பொருளும் மேன் மேலெனக்களித்து
சித்தெலாம் செய்திட திருவருள்புரிந்தே
இருளறுத்தெனையாண்ட அருட்பெருஞ்ஜோதி
என் வள்ளலே பள்ளியெழுந்தருள்வாயே.
அலங்கரிக்கின்றோம் ஓர் திருச்சபையதிலே
அமர்ந்தருள் ஜோதி கொண்டடி சிறியோமை
வலம்பெரும் இறவாத வாழ்வில் வைத்திடவே
வாழ்த்துகின்றோம் முன்னர் வணங்கி நிற்கின்றோம்
விளங்கிய திருளெலாம் விடிந்தது பொழுது
விரைந்து எமக்கு அருளுதல் வேண்டும் இத்தருணம்
இலங்கு நற்றருணம் எம் அருட்பெருஞ்ஜோதி
எம் தந்தையே பள்ளியெழுந்தருள்வாயே.
இந்த அளவில் வள்ளல் பெருமானும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் நம்முன் பூஜையை ஏற்க வந்துவிட்டதாகக் கருதிக் கொண்டு அகவல்பாராயணம் மற்றும் மகாமந்திரஜபம் முடிக்கவும்.அதன்பின் அட்டகம் பாடவும்.
அருட்பெருஞ்ஜோதி அட்டகம்:
அருட்பெருவெளியில்அருட்பெரும்உலகத்து,அருட்பெரும்தலத்துமேனிலையில்
அருட்பெரும்பீடத்து அருட்பெரும் வடிவில் அருட்பெரும்திருவிலே அமர்ந்த
அருட்பெரும்பதியே அருட்பெரும்நிதியே அருட்பெரும்சித்தியென்னமுதே
அருட்பெரும்களிப்பே அருட்பெரும்சுகமே அருட்பெருஞ்ஜோதியென்னரசே.
குலவுபேரண்ட பகுதியோரனந்த கோடிகோடிகளும் ஆங்காங்கே
நிலவிய பிண்டபகுதிகள் முழுதும் நிகழ்ந்த பற்பல பொருள்திரளும்
விலகுறாது அகத்தும் புறத்தும் மேலிடத்தும் மெய்யறிவானந்தம் விளங்க
அலகுறாதொழியாதது வதில் விளங்கும் அருட்பெருஞ்ஜோதியென்னரசே.
கண்முதல் பொறியால் மனமுதற்கரணக் கருவினுட் பகுதியின் கருவால்
எண்முதற் புருட தரத்தினால் பரத்தால் இசைக்குமோர் பரம்பர உணர்வால்
விண்முதற் பரையால் பராபர அறிவால் விளங்குவது அரிதென உணர்ந்தோர்
அண்முதற் தடித்துப் படித்திட வோங்கும் அருட்பெருஞ்ஜோதியென்னரசே.
நசைத்தமேனிலையீதென உணர்ந்தாங்கே நண்ணியும் கண்ணுறாதந்தோ
திசைத்தமா மறைகளுயங்கின மயங்கித் திரும்பின வெனிலதனியலை
இசைத்தலெங்ஙனமோ வையகோசிறிதும்இசைத்திடுவேமெனநாவை
அசைத்திடற்கரிதென்றுணர்ந்துள்ளோர்வழுத்தும்அருட்பெருஞ்ஜோதியென்னரசே.
சுத்தவேதாந்த மவுனமோவலது சுத்த சித்தாந்த ராசியமோ
நித்தநா தாந்த நிலையனுபவமோ நிகழ்பிற முடிபின் மேல் முடிபோ
புத்தமுதனைய சமரசத்ததுவோ பொருளியலறிந்திலமெனவே
அத்தகை யுணர்ந்தோர் உரைத்துரைத்தேத்தும் அருட்பெருஞ்ஜோதியென்னரசே.
ஏகமோவன்றி யனேகமோவென்றும் இயற்கையோ செயற்கையோ சித்தோ
தேகமொ பொதுவோ சிறப்பதோ பெண்ணோ திகழ்ந்திடுமாணதோவதுவோ
யோகமோ பிரிவோவொளியதோவெளியோஉரைப்பதெற்றோவெனவுணர்ந்தோர்
ஆகமோடுரைத்து வழுத்த நின்றோங்கும் அருட்பெருஞ்ஜோதியென்னரசே.
தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம் தத்துவாதீதமேனிலையில்
சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல் சிவநிலை தெரிந்திடச் சென்றேம்
ஒத்தவந்நிலைகண் யாமும் எம் உணர்வும் ஒருங்குற கரைந்து போயினமென்று
அத்தகையுணர்ந்தோர் வழுத்த நின்றோங்கும் அருட்பெருஞ்ஜோதியென்னரசெ
எங்குமாய் விளங்குஞ் சிற்சபை யிடத்தே இதுவது வெனவுரைப் பரிதாய்த்
தங்குமோரியற்கைத் தனியனுபவத்தைத் தந்தெனை தன்மயமாக்கிப்
பொங்குமானந்த போகபோக்கியனாய்ப் புத்தமுதருத்தியென்னுள்ளத்தே
அங்கையிற் கனிபோன்றமர்ந்தருள் புரிந்த அருட்பெருஞ்ஜோதியென்னரசே.
கற்பூர ஆரத்தி எடுக்க விரும்பினால் கீழ்கண்ட ஜோதிப் பாடலால் ஆரத்தி எடுக்கவும்
ஜோதிப் பாடல்
ஜோதி ஜோதி சுயம்
ஜோதி ஜோதி பரம்
ஜோதி ஜோதி அருள்
ஜோதி ஜோதி சிவம்
வாமஜோதி, சோமஜோதி,வானஜோதி,ஞானஜோதி
மாகஜோதி,யோகஜோதி,வாதஜோதி,நாதஜோதி
ஏமஜோதி,வியோமஜோதி,ஏறுஜோதி,வீறுஜோதி
ஏகஜோதி,ஏகஜோதி,ஏகஜோதி,ஏகஜோதி.
ஆதி நீதி வேதனே ஆடல் நீடு பாதனே
வாதிஞானபோதனே வாழ்க வாழ்க நாதனே
நீ என் அப்பன் அல்லவா நினக்கு இன்னும் சொல்லவா
என் தாயின் மிக்க நல்லவா சர்வ சித்தி வல்லவா
ஆதிநீதிவேதனே ஆடல்நீடு பாதனே
வாதிஞானபோதனே வாழ்க வாழ்க நாதனே
வாழ்க வாழ்க நாதனே வாழ்க வாழ்க நாதனே
வாழ்த்துப் பாடல்
வாழி என் ஆண்டவன், வாழி எங்கோன் அருள், வாய்மை என்றும்
வாழி எம்மான் புகழ், வாழி என் நாதன் மலர்ப்பதங்கள்,
வாழி மெய்ச் சுத்த சன்மார்க்க பெருநெறி மாண்பு கொண்டு
வாழி இவ்வையமும் வானமும் மற்றவும் வாழியவே
சுத்த சன்மார்க்க விண்ணப்பம்
எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே,
இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.
எல்லாமாகிய தனிபெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே, தேவரீர் திருவருட்பெருங்கருணைக்குவந்தனம்,வந்தனம்,வந்தனம். இத்துடன் தினசரி பூஜை முடிகிறது.அடுத்ததாக நமக்கு வேண்டுதல் இருந்தால் கீழ்கண்ட வகையில் ஒரு விண்ணப்பம் வைத்து ஆண்டவரை வணங்கவும்.
எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கியான ——— ஆகிய எமக்குள்ள —————– என்ற பிரச்னையை தீர்த்து எமக்கு அருள்சக்தியும், பொருள்சக்தியும் வழங்கி எம்மை சன்மார்க்க சக்தியின் சாட்சியமாக அங்கீகரிக்க வேண்டும் என்று எங்கள் ஞானகுரு கருணைமிகு இராமலிங்கம் சாட்சியாகவும், தங்களின் தனிபெருங்கருணை சாட்சியாகவும் இந்த சத்திய விண்ணப்பம் வைக்கிறேன். இந்த விண்ணப்பத்தை இந்த கணப்பொழுது பரியந்தம் அங்கீகரித்து அதற்கான கட்டளைகளை சத்தி சத்தர்களுக்கு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அதன் பொருட்டு எல்லாமாகிய தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தேவரீர் திருவருட்பெருங்கருணைக்கு
வந்தனம்! வந்தனம்!! வந்தனம்!!!.
(தொடரும்)
ஜோதிமைந்தன் சோ. பழநி

20,22 chapter not open
ஐயா சரி செய்து விட்டோம்