மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி - 26 (சன்மார்க்க வழிபாட்டு முறைகள் ஞானத்தில் கிரியை)

சன்மார்க்க வழிபாட்டு முறைகள் ஞானத்தில் கிரியை(தொடர்ச்சி)

தினசரி பூஜைபோல் அனைவரும் ஒன்றிணைந்து வள்ளல் பெருமான் வருகைப் பாடலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருப்பள்ளியெழுச்சியும் பாடி பூஜையை தலைமை ஏற்று நடத்துபவர் கற்பூர ஜோதி ஏற்றி அதனை அகண்டத்தில் விட்டு அகண்ட ஜோதியை ஏற்ற வேண்டியது. ( தலைமை ஏற்று நடத்துபவர் மிக குறைந்த பட்சமாக ஒரே நாளில் ஒன்பது முறையாவது அகவல் படித்திருக்க வேண்டும். அகவல் நிலையை கடக்க ஒரே நாளில் இருபத்து நான்கு முறை அகவல் படித்திருக்க வேண்டும் என்பது நியதி). அகண்டத்தில் நெய் அல்லது தேங்காயெண்ணை வேண்டிய அளவு விட்டு ஏற்றவும். பிறகு அனைவரும் ஒன்று சேர்ந்து 12 நிமிடம் தாரக மந்திரம் கூறி கருப்புதிரைக்கு ஒரு நெய் விளக்கால் ஜோதிப்பாடல் பாடி ஆரத்தி எடுக்கவும். இதனால் கருப்புத்திரை விலகி தெய்வ மாயா படிநிலையில் முதல் படிநிலையை அனைவரும் கடக்கிறோம்.

அதற்கு மேல் 6 நிமிடம் தாரக மந்திரம் கூறி ஜோதிப்பாடல் பாடி இரண்டு நெய் விளக்கால் ஆரத்தி எடுத்து நீலத்திரையை விலக்கி 2ம் படி நிலையை கடக்கவும். இதைப் போலவே ஒவ்வொரு படிநிலைக்கும் 6 நிமிடங்கள் தாரக மந்திரம் கூறி மூன்று நெய்விளக்கால் பச்சை திரையையும் நான்கு நெய் விளக்கால் சிவப்பு திரையையும் ஐந்து நெய்விளக்கால் மஞ்சள் திரையையும் ஆறு நெய் விளக்கால் வெண்மை திரையையும் ஏழு நெய் விளக்கால் பலவண்ண திரையையும் ஆரத்தி பூஜை செய்து திரைகளை விலக்கி ஏழு மாயா தெய்வ படிநிலைகளையும் கடந்து தாமரைப்பூ வடிவம் கொண்ட எட்டாவது ஞானத்திரை முன் ஞான உலகில் சஞ்சரிக்க தயராக வேண்டும். எட்டாவது திரையில்தான் பஞ்சகிருத்தி கர்த்தாக்கள் எனும் கூட்டுறு சித்துக்களும் ஞானிகள், முத்தேகிகள் எனும் அறிவுறு சித்துக்களும் அடங்குவர்.

அந்தபடிநிலைக்கு பூஜை ஆரம்பிக்கும் முன் ஆரத்தி தட்டிலுள்ள ஏழுநெய் தீபங்களையும் அனைவரும் நீலத்திரைக்கும் பச்சைதிரைக்கும் இடையிலுள்ள கோட்டில் வைத்து வரிசையாக அலங்கரிக்கவும். பூஜையில் இதுவரை கரும்பச்சையாக காட்சியளித்த பச்சைத்திரையானது தற்போது பொன் பச்சையாக பிரகாசிக்கும். தற்போது ஞானத்திரையை விலக்கும் பொருட்டு பனிரெண்டு நிமிடம் மகாமந்திரம் கூறி அட்டகம் பாடி பூஜையிலுள்ள ஒவ்வொருவரும் அவரவர் தட்டில்கற்பூரத்தில் ஏகதீபம் ஏற்றி ஜோதிபாடல் பாட வேண்டியது.

அட்டகம் ஆரம்பிக்கும்போது முதல் அனைவரும் மண்டியிட்டு பிரார்த்தனையை தொடரவேண்டியது. ஜோதி பாடல் முடித்து தினசரி வழிப்பாட்டு முறைப்படி வாழ்த்துப் பாடலும் சன்மார்க்க விண்ணப்பமும் வைத்து ஒவ்வொருவரும் ஒரு கற்பூரத்தை அகண்டத்திலிட்டு அர்ப்பணித்து அவரவர் சொந்த வேண்டுதல் இருந்தால் மனதிற்குள் இறைவனிடம் விண்ணப்பிக்க வேண்டியது.

இவ்வாறாக ஒவ்வொரு திரைக்கும் மந்திரம் கூறி பூஜை செய்யும் போது அந்த பூஜையில் கலந்து கொண்ட அனைத்து ஆண்கள் பெண்கள் குழந்தைகள் அனைவரையும் ஒவ்வொரு திரையாக விலகி அருட்பெருவெளியில் சென்று பிரவேசிக்கும் தன்மையை இந்த பூஜையானது உருவாக்குகின்றது.

இவ்வாறாக மனிதர்களின் ஆன்மாக்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நோக்கி திரை நீக்கி படிநிலை கடந்து பிரயாணப்படும் சமயத்தில் இருவருக்கும் இடையே உள்ள படி நிலை தெய்வங்களையும் சந்திக்க நேரிடும். அந்த காட்சியானது பூஜையில் கலந்து கொண்டவர்களின் தியானத்தில் தோன்றலாம். அல்லது அங்கே அமர்ந்திருப்பவர்கள் அந்த தெய்வங்களால் ஆசீர்வதிக்கப் பட்டவர்களாக இருந்தால் அவர்கள் மீது வெளிப்படலாம். எந்த வண்ணப் படிநிலைக்கு திரைக்கு பூஜை செய்யும் போது அந்த தேவதைகள் வெளிப்படுகிறார்களோ அந்தப் படிநிலையில் அவர்கள் தேவசபையில் இருப்பதாக அனுமானித்து கொள்ளலாம். அத்துடன் அகண்ட ஜோதியிலும் வெளிப்படலாம். அவ்வாறக அகண்ட ஜோதி வெளிப்பாடாக வந்த தேவதைகளின் காட்சிகள்தான் ஸ்டில் போட்டோக்களாக இந்த பகுதியில் அச்சிடப்பட்டுள்ளது.

இந்த பூஜையில் அமர்ந்து பூஜை செய்பவர்கள் எந்த அளவு வள்ளல் பெருமான் மீதும் அவரது தத்துவங்கள் மீதும் மகாமந்திரத்தின் மீதும் அதிக அளவு நம்பிக்கை வைத்து செயல்படுபவர்களாக உள்ளார்களோ அந்த அளவிற்கு அகண்ட பூஜையின் பலன் அதிகரிக்கும். படிநிலை தேவதைகளின் காட்சி வெளிப்பட்டதால் இந்த பூஜை சிறு தெய்வ வழிபாட்டு பூஜை என எண்ணி விடுதல் ஆகாது. ஏதேனும் ஒரு படிநிலையில் வெளிப்பாடு ஆகும் தேவதை அந்த அந்த படிநிலையை கடந்த அடுத்தப் படிநிலைக்கு வர முடிவதில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் மட்டும் மகாமந்திரத்தின் துணையுடன் அருட்பெருவெளியில் பிரவேசிக்கிறோம். வள்ளல்பெருமான் கூறியவாறு நம் கண்களால் இறைவன் உருவாக்கும் காட்சிகளை பார்ப்பதற்க்காக இந்த பூஜையில் புஷ்ப , வஸ்திர ஆபரண அலங்காரங்கள் செய்யப்படுவதில்லை.

இறைவனால் உருவாக்கப்படும் உயிர் ஒலிகளையும், சலங்கை ஒலி நாதங்களையும் காதுகளால் கேட்கப்பட வேண்டுமென்பதற்காக வாத்தியக் கருவிகள் இசைக்கப்படுவதில்லை. இறைவனால் உருவாக்கப்படும் வாசனையை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக ஊதுபத்தி, சாம்பிராணி, சந்தனம் போன்ற வாசனை திரவியங்கள் பயன்படுத்தப் படுவதில்லை. இறைவனால் வழங்கப்படும் அருளமுதத்தை சுவைக்க வேண்டும் என்பதற்காக சுவை கூட்டும் பட்சணங்கள் படைக்கப் படுவதில்லை. இறைவனால் உருவாக்கப்படும் உணர்வுகளை அனுபவிக்க வேண்டுமென்பதற்காக பூஜையின் போது ஒருவரை ஒருவர் தொடாத வகையில் இடைவெளி விட்டு அமர்ந்து பூஜை செய்யப்படுகின்றது.

இந்த பூஜையானது எல்லா உயிர்களும் இன்புற்று வாழும் பொருட்டு பொதுநோக்கில் செய்யப்படுவதாகும். எனவே இந்த பூஜையை தலைமை ஏற்று நடத்தும் சன்மார்க்க அன்பர் ஆணாக இருப்பின் ஒரே நாளில் 24 முறை அகவல் பாராயணம் செய்தவராக இருப்பின் அது உயர்ந்த நிலை. பெண்ணாக இருப்பின் ஒரே நாளில் 12 முறை அகவல் பாராயணம் செய்தவராக இருப்பின் அது உயர்ந்த நிலை. எந்த அளவு மகாமந்திரத்திலும் அகவல் பாராயணத்திலும் ஒன்றி செயல்பட்டு அவர்கள் ஆழ்மனதில் பதிந்துள்ளதோ அந்த அளவிற்கு பூஜையும் செயல்பாடுகளும் சிறப்பாக இருக்கும். மேலும் குறைந்தபட்சம் ஒரே நாளில் 9 முறையாவது அகவல் பாராயணம் செய்தவர்கள் தலைமை ஏற்று நடத்தினால்தான் அந்த அகண்ட ஜோதி வாழிபாடு சரியான இலக்கை நோக்கிய வழிபாடாக இருக்கும் இதை எந்த பக்குவமும் அற்றவர்கள் செய்தால் வெறும் சடங்காக அமைந்து கால விரயமாகத்தான் இருக்கும். மேலும் இந்த பூஜையானது 56 வயதுக்குட்பட்ட உறவறத்தார்களால் நடத்தப்பட வேண்டும்.

56 வயதுக்கு மேற்பட்டவர்களின் ஸ்தூல உடல் மருத்துவ ரீதியாக இந்த பூஜையில் கலந்து கொள்வதில் சிரமத்தை உருவாக்கும். துறவிகளுக்கு இந்த பூஜை அவசியமில்லை. மேலும் எல்லா வகையிலும் சன்மார்க்க ஆண்களைவிட சன்மார்க்க பெண்டிர் ஆண்கள் செய்யும் முயற்சியில் பாதி செய்தாலேயே ஆண்களுக்கு சமமான பலனை பெற இயலும். எனவேதான் அகவல் பாராயணம் ஆண்களுக்கு 24 முறை என்றால் பெண்களுக்கு 12 முறை என்ற நியதி உள்ளது. இயற்கை நியதிப்படி ஆண்களைவிட பெண்கள் இரண்டு மடங்குகளாக முயற்சிக்கு பலன் பெறுகிறார்கள்

ஆண்களைவிட பெண்களுக்கு தெய்வ குணங்களான கருணை, அன்பு, பொறுமை, இரக்கம், அருளறிவு ஆகியவை இரண்டு மடங்காக வெளிப்படும். பெண்களைவிட ஆண்களுக்கு சமமான அனுபவம் வயது கல்வி என்று இருக்கும் நிலையில் அசுர குணங்களான் அகந்தை, சகிப்பின்மை, பொறாமை ஆகியவை பாதியளவே வெளிப்படும். எனவேதான் கருணையே வடிவான அருள்சக்தி பெற பெண்கள் பாதியளவு முயற்சித்தாலேயே ஆண்களுக்கு சம்மான பலனைப் பெறலாம் என்பது நியதியானது. ஆண்களுக்கு சமமாக முயற்சித்தால் இரண்டு மடங்கு பலன் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

24.07.2006 மகாமந்திரபீடத்தில் நடந்த அகண்ட ஜோதியில் வெளிப்பட்ட அற்புதக் காட்சி

(தொடரும்)

ஜோதிமைந்தன் சோ. பழநி