மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி - 29 (ஞானத்தில் யோகம்)

ஞானத்தில் யோகம்

வள்ளல் பெருமான் அருளால் யாம் பெற்ற அனுபவங்களையும் மனதில் இருத்தி முடிந்த வரை மனித தரத்தில் புரிந்து கொள்ளும் வகையில் மெய்ஞானத்தை அடையும் வழியை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறோம். இதுவரை வெளியிட்ட விஷயங்கள் அனைத்தும் ஓரளவுக்கு எழுத்து வடிவிலேயே புரிந்து கொள்ள கூடியவைகளாக இருந்தன.

இனி வரும் விஷயங்கள் அனுபவித்து உணர வேண்டியவைகளையும் எழுத்து வடிவில் கொண்டு வரும் முயற்சி எனக் கொள்க. அருளாளர்கள், குருமார்கள், தலைமைப் பொறுப்பாளர்கள் இவர்களில் எந்தத் தன்மை உடையவராக இருந்தாலும், அவர்கள் தம்முடைய கருத்துக்களையும், உபதேசங்களையும் வெளியிடுவதில் மூன்று வகையான தன்மை உள்ளது. உலக மக்களுக்கு சென்றடையும் வகையில் தமது கருத்துக்களை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் பாடல்களாகவோ, சொற்பொழிவுகளாகவோ, எழுத்து வடிவங்களாகவோ பொது அரங்கத்தில் வெளிப்படுத்துவது முதலாவது வகையை சார்ந்தது.

தம்மை பின்பற்ற முயற்சி செய்யும் அனைத்து தரப்பினருக்கும் தமது அனுபவத்தையும் கலந்து உள் அரங்க மேடையில் வெளிப்படுத்துவது இரண்டாவது வகையைச் சேர்ந்தது. தம்மை பின்பற்ற முயற்சி செய்து, அதில் சில நிலைகளையும் கடந்து, தொடர்ந்து அனுபவப் பட்டு வரும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக தமது உபதேசங்களை அவரவர் அனுபவத்தையும் மனதில் கொண்டு வெளிப்படுத்துவது மூன்றாவது வகையைச் சேர்ந்தது. வள்ளல் பெருமானின் செயல்பாட்டில் அவரது திருமுறைப் பாடல்கள், கடிதங்கள். உரைநடைப் பகுதிகள் அனைத்தும் முதல் வகை வெளிப்பாடுகளின் தொகுப்புகள் என அறிக.

பேருபதேசம் என்ற சொற்பொழிவு இரண்டாம் வகையை சேர்ந்தது. பேருபதேசம் கேட்ட பின்னர் அவரது சீடர்கள் அதை அந்தக் கணமே ஏற்றுக்கொண்டு செயல்பட்டிருந்தார்களானால், இன்றைய கால கட்டத்தில் பல்வேறு சன்மார்க்க அன்பர்களால் மிகவும் கவனத்துடன் ஆய்வு செய்து, அனைவரும் பின்பற்ற வேண்டும் ஏற்ற நோக்கில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் வள்ளல் பெருமானே வெளிப்படுத்தியிருப்பார். மூன்றவது வகையை சேர்ந்த உபதேசங்களை வள்ளல் பெருமான் ஞானதேகம் பெற்ற பின்னரே வெளியிட காலம் கனிந்தது. வள்ளல் பெருமான் காலத்தில் அவருடைய செயல்பாடுகளை புரிந்து கொண்டு அவரை அடியொற்றி சந்தேகங்களை தெளிவு பெற விழையும் அளவுக்கு பக்குவம் மற்றவர்களுக்கு வரவில்லை என்பதை விட 21ம் நூற்றாண்டில் வெளியாக வேண்டிய கருத்துக்களை 19ம் நூற்றாண்டிலேயே வள்ளல் பெருமான் அறிந்திருந்தார் என்பதே உண்மை நிலையாகும். ஆகவே காலத்தால் வெளிப்பட வேண்டிய கருத்துக்களுக்கு “எழுதா மறை” எனப் பெயரிட்டு செயல்பட்டார். அன்றைய 19ம் நூற்றாண்டு கால கட்டத்தில் சமயங் கடந்த நிலை என்பது கற்பனையாகக் கூட மக்களால் சிந்திக்க இயலவில்லை. தற்போது 21ம் நூற்றாண்டில் வள்ளல் பெருமான் அவர்கள் தமது ஞானதேக சக்தியால் அவரது கருத்துக்களை முழுமையாக பின்பற்ற எண்ணுபவர்களுக்கு தாமே நேரில் தொடர்பு கொண்டு வழிகாட்டுகிறார். பல அன்பர்களுக்கு பல்வேறு செயல் பாட்டையும், அடிப்படை போதனைகளையும், நெறிமுறைகளையும் வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் எமது ஈடுபாட்டையும் செயல்பாட்டையும் கருத்தில் கொண்டு அவைகளுக்கு வழிகாட்டும் வகையில் வள்ளல் பெருமான் அவர்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி யாம் அனுபவம் பெற்றதுடன் அவரின் அனுமதியுடன் யாம் இந்த தொடரை வெளியிட்டு வருகிறோம்.

எம்மை கருவியாகக் கொண்டு வள்ளல் பெருமான் வெளிப்படுத்திய முக்கியமான விஷயங்களாக கருதப்படுபவைகள் எனக்கொண்டால், காலக்கணக்கு, சதுர்நிலை வழிபாடுகள் விளக்கம், ஆன்மப்படிநிலைகள், ஆன்மப்பெருக்கம், ஆன்மவேகம், மகாமந்திரம் தாரக மந்திரம் விளக்கம், மந்திரங்களுக்குள்ள உயிர் ஒலிகள் விளக்கம், ஓங்காரத்தன்மை, பிரபஞ்சத்தன்மை, சன்மார்க்க படிநிலைகள், துறவறம் உறவறம் விளக்கம், ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை ஆகிய விஷயங்களை இதுகாறும் வெளியிட்டோம். மேலும் தினசரி வழிபாட்டு முறைகளில் இதுவரை ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை இரண்டும் வெளியிடப்பட்டது. இவையிரண்டும் கூட்டுப்பிரார்த்தனை வகையைச் சேர்ந்தது. புறவழிபாட்டுத் தன்மையுடையது. வெளிமனதிலிருந்து உள்மனதுக்கு மந்திரத்தையும்,சன்மார்க்க கருத்துகளையும் எடுத்துச் செல்லக் கூடிய செயலை செய்யும் முறைகளாகும். அடுத்ததாக ஞானத்தில் யோகம் பற்றிய விவரங்களையும், செயல்முறைகளையும் வெளியிட வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம். ஞானத்தில் யோகம் என்பது அகவழிபாட்டு முறையாகும். அத்துடன் உள்மனதிலிருந்து ஆழ்மனதிற்கு மந்திரத்தையும்,சன்மார்க்க கருத்துகளையும் எடுத்துச் செல்லக் கூடிய செயலை செய்யும் தனிவழிபாட்டுமுறை எனக்கொள்க.

ஞானத்தில் யோகம் தனிமனிதராக வழிபாடு செய்யும் முறை என்பதுடன், இந்த வழிபாட்டு முறை அனைத்தையும் எழுத்து வடிவில் கொண்டுவர அனுமதியில்லை. அதாவது ஞானத்தில்யோகம் எனும் வழிபாட்டுமுறை கீழ் கண்ட நான்கு படிநிலைகளாக கடைபிடித்து உயர வேண்டும்.

யோக தாரக மந்திரம் பிண்டத்தில் செயல்படுத்தும் முறை.
யோக தாரக மந்திரம் அண்டத்தில் செயல்படுத்தும் முறை.
யோக மகா மந்திரம் பிண்டத்தில் செயல்படுத்தும் முறை.
யோக மகா மந்திரம் அண்டத்தில் செயல்படுத்தும் முறை

மேற்கண்ட நான்கு படிநிலைகளில் “யோக தாரக மந்திரம் பிண்டத்தில் செயல் படுத்தும் முறை” மட்டும் இந்த தொடர் கட்டுரையில் விவரிக்கப்படும். “யோக தாரக மந்திரம் அண்டத்தில் செயல்படுத்தும் முறை”, “யோக மகா மந்திரம் பிண்டத்தில் செயல்படுத்தும் முறை” ஆகிய இரண்டு படிநிலைகளும் நேரில் மட்டுமே வழங்கப்படும். “யோக மகா மந்திரம் அண்டத்தில் செயல்படுத்தும் முறை” வள்ளல் பெருமான் தமது நேரடி உபதேசமாக வழங்குவார். மேலும் ஞானத்தில் யோகம், ஆயிரம் முறை அகவல் படித்து, ஒரு லட்சம் மந்திரம் கூறி சாதகம் செய்தவர்களுக்கு சக்தியை முழுமையாக செயல் படுத்த வழிவகை உண்டு. இவைகளை எதையும் பின்பற்றாமல் ஞானத்தில் யோகம் செய்தால் அவரவர் பக்குவத்திற்கேற்பவே பலன் கிடைக்கும்.

இனி இக்கட்டுரையில் “ஞானத்தில் யோகம்” என்று குறிப்பிடும் வார்த்தையானது, “யோக தாரக மந்திரம் பிண்டத்தில் செய்யும் முறையை” மட்டுமே குறிக்கும். மேலும் ஞானத்தில் யோகம் செய்யும் முன்பாக சில விஷயங்களில் நம்மை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஒரு யோகமும் ஒரே நாளில் செயல்பட ஆரம்பித்து விடாது. சாதகம் செய்ய,செய்யத்தான் அவரவர் ஈடுபாடு,பக்குவம், எண்ணங்கள், குணங்கள் ஆகியவைகளுக்கு ஏற்ப பலன் கொடுக்க ஆரம்பிக்கும் மனித வாழ்க்கையில் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். வள்ளல் பெருமான் அவர்களும் அவரவர் உடலை பொன் போல் பாதுகாக்க வேண்டுமென்பார். அந்த வகையில் யோகத்தின் மூலமாக நமது உயிர்ப்பிணியையும், உடல்பிணியையும் போக்கி பூரண ஆரோக்கியம் வழங்க அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரத்தை பயன்படுத்தும் வழிமுறையே ஞானத்தில் யோகமாகும்.

யோகம் என்றாலேயெ அனைவரும் பிண்டமூலாதாரத்திலிருந்து பிண்டத்தில் அண்டம் பகுதியிலுள்ள யோகசக்கரங்களுக்கு குண்டலினி சக்தியை மேலேற்றுவது என்று கருதுகிறார்கள். இந்த வகை முயற்சியை கைகொண்டால் பாதிப்பும் தோல்வியும்தான் மிஞ்சும். நாம் நமது சஹஸ்ராஹாரத்திலிருந்து படிப்படியாக கீழிறங்கும் வகையில் உடலை சுத்தப் படுத்தி வந்தாலேயே, உயிர்ப்பு யோக சக்தியானது பிண்ட மூலாதாரத்திலிருந்து பிண்டத்தில் அண்டம் சஹஸ்ராஹாரத்திற்கு தாமாக உயர்ந்து இணைப்பை ஏற்படுத்தும். பிரபஞ்சத்திலிருந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடமிருந்து அருள்சக்தியை பெற்று நமது உடலில் செலுத்தி எவ்வாறு பயனடைவது என்பதின் செயல்முறை விளக்கத்தை அடுத்த அத்தியாயத்தில் விவரிப்போம்.

(தொடரும்)
அடுத்த தொகுப்பு வெளியீடு அடுத்த வாரம்

ஜோதிமைந்தன் சோ. பழநி