மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி - 30 (மெய்ஞான தகவல் தொடர்பு்)
மெய்ஞான தகவல் தொடர்பு
ஞானத்தில் யோகம் முதல் நிலையை அதாவது “யோக தாரக மந்திரம் பிண்டத்தில் செயல் படுத்தும் முறையை” கடந்த 31வது பகுதியில் விளக்கினோம். அடுத்த கட்டமாக எழுத்து வடிவில் வர அனுமதிக்கப்பட்ட “ஞானத்தில் ஞானம்” பற்றிய விளக்கங்களுக்கு முன்னதாக சில விஷயங்களை விவரிக்க கடமை பட்டுள்ளோம். நாம் சில ஆய்வு விஷயங்களை எழுதும்போது வள்ளலார் காலத்தின் சூழ்நிலைகளையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் மனதில் கொண்டு தற்கால சூழ்நிலைகளையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தையும், விஞ்ஞான வளர்ச்சியையும் கருத்தில் கொள்ள வேண்டும். எந்த ஒரு கருத்தையும் முன் வைக்கும் போது உபமானம்,உபமேயம் என்ற இலக்கிய உத்தியை கைகொண்டால்தான் சுலபமாக கருத்துக்களை பிறர் மனதில் பதிப்பிக்க முடியும்.
வள்ளல் பெருமான் 19ம் நூற்றாண்டில் இருக்கும்போதே 21ம்நூற்றாண்டின் வெளிப்பாடுகளையும் அறிந்திருந்தார் என்பதின் சாட்சியம்,மனிதன் தினசரி ஒரு மணி நேரம் தூங்க பழகினால் 1000 ஆண்டுகள் வாழலாம் என்றதை, மனிதன் ஜீன்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தினால் 1200 ஆண்டுகள் வாழலாம் என்பதை இப்போதுதான் தற்போதைய விஞ்ஞானிகள் ஏற்றுகொள்கிறார்கள். விஞ்ஞானிகள் எதை ஏற்றுக்கொண்டாலும் அதை மனித சமுதாயம் அங்கீகரித்ததாக கருதலாம். மேலும் இனிவரும் நூற்றாண்டுகளில் வெளிப்படக்கூடிய கருத்துக்களான ஆன்ம வேகம், ஆன்ம பெருக்கம் ஆகியவையும் வருங்காலத்தில் விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப்படும்போது அன்றைய காலகட்டத்தில் உள்ள மெய்ஞானிகளாகிய சன்மார்க்கிகள் மூலமாக வள்ளல் பெருமான் அவர்கள் விளக்கமளிப்பார்கள். எனவே அதைப்பற்றிய கருத்துக்களை கடந்த அத்தியாயங்களில் வெளிப்படுத்தியது போதுமானது.
இன்றைய சூழலில் சன்மார்க்க உலகம் எதிர்கொள்ள வேண்டிய செயல்பாடுகளையும், வள்ளல் பெருமான் அவர்களும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் சன்மார்க்கிகளுக்கு வழங்கியுள்ள கடமைகளையும்,எதிர்பார்க்கின்ற அனுபவங்களையும் கருத்தில் கொள்வோம். வள்ளல் பெருமான் அவர்கள் அனைத்தையும் பற்றி சத்விசாரம் செய்யுங்கள் என்றார். அந்தந்த காலகட்டத்தின் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு சத்விசாரம் செய்வதே உண்மையான சத்விசாரமாக அமையும்.
வள்ளல் பெருமான் காலத்தில் அவரைத்தவிர மற்றைய மனிதர்கள் எதிர்கால வளர்ச்சியை பற்றி எடுத்துக் கூறினாலும் புரிந்துகொள்ள இயலாத சூழ்நிலையில், வாழ்க்கை இயல்பில் இருந்தார்கள்.வள்ளல் பெருமான் அவர்கள் ஞானதேகம் பெற்று அருளரசாட்சி நடத்தி வருகின்ற இந்த இரண்டு நூற்றாண்டுகளில்தான் விஞ்ஞானம் மிகப்பெரிய வளர்ச்சி பெற்றது. மின்சக்தி பயன்பாட்டுக்குரியதாக அறியப்பட்டு, மின்சார சாதனங்களான விளக்குகள்,கருவிகள் ஆகியவை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இன்று உலகம் முழுக்க ஒரு நிமிடம் மின்சாரம் இல்லையென்று கற்பனை செய்தால் அதன் விளைவுகளை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. மேலும் தொலைபேசி,அலைபேசி,நிழற்படம்,தொலைக்காட்சி,ஆகாயவிமானம், விண்வெளி ஓடங்கள், செயற்கை கோள்கள் ஆகியவைகளும் மனித சமுதாயத்திற்கு கிடைத்திருக்கின்றன.
மெய்ஞானத்தின் சாராம்சங்களை உபமேயமாகக் கொண்டு விஞ்ஞான வெளிப்பாடுகளை உபமானமாகக் கொண்டு எடுத்து விளக்குவது எளிதாகின்றது. சன்மார்க்க செயல்பாட்டில் அருள்சக்தி நம்மை அடையும் வழிமுறையை பார்ப்போம். அருள்சக்தியை உபமேயமாகக்கொண்டு தொலைபேசி அல்லது தொலைக்காட்சி செயல்படும் முறையை உபமானமாகக் கொண்டு ஒப்புநோக்கினால் மிக எளிமையாக புரிந்து கொள்ளலாம். பிரபஞ்சத்திலுள்ள வள்ளலாரின் கேந்திரம் என்பது சாட்டிலைட் எனும் செயற்கைகோள் போன்றது. வடலூர் ஞானசபையானது தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் போன்றது. சித்தி வளாகத்திருமாளிகையானது அருட்பெருவெளியின் வாயிலாக விளங்கும் முதல் திரியம்பல வாயிலாகும். இது செயற்கைகோளிலிருந்து அருள்சக்தியை கிரகித்து கேபிள் மூலம் வழங்கும் ரிசீவர் அல்லது டி.டி.எச் உபகரணம் போன்றது. ஒவ்வொரு சன்மார்க்க சாத்தியர்களான மெய்ஞானிகளும் தொலைக்காட்சி பெட்டி போன்றவர்கள்.
யாம் சன்மார்க்க கருத்துக்களை வெளியிடும்போது திருமுறை பாடல்களை மேற்கோள் காட்டுவதில்லை என்பதின் காரணம் அனைத்து சன்மார்க்க அன்பர்களும் திருவருட்பாவை உள்வாங்கியிருப்பதால் கருத்துக்களை படிக்கும்போதே பாடல் நினைவுக்கு வரும் என்பதாலும்,பாடல்களையும் சேர்த்து எடுத்து இயம்பினால் கட்டுரை அளவுக்கு மீறிய பெருக்கமாய் அமையும் என்பதாலும் பாடலை சாட்சியமாக்கும் உத்தியை கடைபிடிக்கும் தன்மையை கொண்டிருக்கவில்லை.
இருப்பினும் இங்கு ஒரு திருவருட்பா பாடலை மேற்கோளாக எடுத்துக்கொள்வோம்.
தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்த சன்மார்க்கச்
சங்கமே கண்டு களிக்கவும், சங்கம் சார் திருக்கோயில் கண்டிடவும்
துங்கமே பெறுஞ் சற்சங்கம் நீடூழி துலங்கவும், சங்கத்தில் அடியேன்
அங்கமே குளிற நின்றனைப் பாடி ஆடவும் இச்சைகாண் எந்தாய்.
என்பதின் அடிப்படையில் வள்ளல் பெருமான் எம்மிடம் ஒவ்வொரு நூறு கிலோமீட்டருக்கும் திரியம்பல வாயிலின் தன்மையுடைய மகாமந்திரபீடம் வருங்காலத்தில் அமைக்கபட வேண்டும் என்றார். இவ்வாறு சங்கம் சார்திருக்கோயிலாக அமையும் மகாமந்திர பீடங்களிலிருந்து அன்பர்களின் கோரிக்கைகளும் வள்ளல்பெருமானின் கேந்திரத்தை சென்றடையும்.வள்ளல் பெருமான் வழங்கும் அருள்சக்தியும் கிரகிக்கப்பட்டு அன்பர்களுக்கு வழங்கக் கூடிய தன்மையுடையதாய் அமையும்.
வடலூர் ஞானசபையானது “நிலைத்த சக்தி” என்றால் மகாமந்திர பீடங்கள் “இயங்கு சக்தி”யாக செயல்படும். ஞானசபை பல்கலை கழகம் என்றால், பீடங்கள் அதிலடங்கிய கல்லூரிகள் போன்று செயல்படும். மகாமந்திரபீடம் போன்ற சங்கம் சார் திருக்கோயில்கள் தொலைபேசிநிலையங்கள் என்றால் சன்மார்க்க சாதகர்கள் அனைவரும் அங்கு சென்று வழிபடுவதின் மூலம் தொலைபேசிவைத்துள்ள பயனாளர்கள் போன்றவர்கள். ஆயிரம் முறை அகவல் படித்து லட்சம் முறைக்குமேல் மகாமந்திரம் கூறி அனுபவரீதியாக பக்குவப் பட்ட சன்மார்க்க சாத்தியராகும் அன்பர்கள் செல்போன் எனும் அலைபேசி வைத்துள்ள பயனாளர்கள் போன்றவர்கள். அவர்கள் தொலைபேசி நிலைய தொடர்பு இல்லாமலேயே நேரடியாக செயற்கை கோளாகிய பிரபஞ்சத்திலுள்ள வள்ளலாரின் கேந்திரத்தில் தொடர்புக் கொண்டு செயல்படும் தன்மை பெற்றவர்கள்.
வள்ளல் பெருமான் அருளரசாட்சியில் மெய்ஞானத்திலும் அருளரசாட்சி தன்மையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பிரம்ம சக்தி முதலாக பஞ்சகிருத்தியங்கள் செய்யும் அனைத்து பஞ்சகிருத்தி கர்த்தாக்களுக்கும் தனித்தனி சுயகேந்திரங்களூக்கு பிரபஞ்சத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அனுமதியளித்திருந்தார். வள்ளல் பெருமானுக்கு முற்பட்ட கால கட்டங்களில் பஞ்சகிருதிகர்த்தாக்கள் தமது சுயகேந்திரங்களை தமது சுயசக்திபெருக பக்தி மார்க்கத்தை பயன்படுத்தி உபயோகித்து வந்தனர்.இயற்கையுண்மை தெய்வத்தின் பெருமைகளை தமது பெருமைகளாக காண்பித்து மாயையால் மறைத்தனர். அதனால் சமயங்கள், மதங்கள் பல்கி பெருகி உபயோகமாக இருக்க வேண்டிய செயல்பாடுகள் அனைத்தும் உபத்திரவ செயல்பாடுகளாக ஜீவ ராசிகளுக்கு துன்பத்தையே வழங்கின.
வள்ளல் பெருமான் அருளரசாட்சி ஏற்பட்டபின் கருணை வடிவாக உள்ள ஆன்மாக்களே பஞ்சகிருத்தியம் அடைந்து, அதையும் கடந்து ஞானத்தில் ஞானியாக மாறி சத்தி சத்தர்களாக செயல்பட இயலும். இன்றைய காலகட்டத்தில் சத்தி சத்தர்களுக்கு மட்டுமே சுயகேந்திரம் அமைக்க அனுமதியுண்டு. பஞ்சகிருதிகர்த்தாக்கள் கருணை வடிவாக இயற்கைநியதி கோட்பாட்டை பின்பற்றினால்,சத்தி சத்தர்கள் தமதுகேந்திரத்தை பயன்படுத்திக்கொள்ள கர்த்தாக்களுக்கு அனுமதியளிப்பார்கள். நியதிகளை தவறும் பட்சத்தில் கேந்திரங்களை பயன்படுத்தும் அனுமதியை இழந்து பஞ்சகிருத்தியங்களை சரியாக நடத்த முடியாமல் விரைவில் சக்தி இழப்பார்கள். அருட்பெருவெளியிலுள்ள வள்ளலாரின் கேந்திரத்தில் அண்டத்தில் அண்டமாய் அருள் சக்தி காரியப்படும். ஞானசபையில், சித்திவளாகத்தில்,மகாமந்திரபீடத்தில்,உரியவகையில் செயல்படும் சங்கம் சார்திருக்கோயில்களில் அண்டத்தில் பிண்டமாய் அருள்சக்தி காரியப்படும். சன்மார்க்கசாத்தியர்,சாதகர்,உண்மைஞானிகள் ஆகியவரிடம் பிண்டத்தில் அண்டமாய் அருள்சக்தி காரியப்படும். கருணை வடிவான அன்பர்களிடம் பிண்டத்தில் பிண்டமாய் அருள்சக்தி காரியப்படும்.
வள்ளல் பெருமான் அவர்கள் ஞானதேகம் பெற்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் தான்வேறு இறைவன்வேறு என்று பாகுபாடின்றி இரண்டற கலந்திருந்தாலும்,தம்மை குருவாக மட்டுமே கருதி இறைவனை மட்டுமே தொழுபவர்களுக்கெ உயர்நிலையடைய ஞானத்தை உரைப்பார்.எனவே வள்ளல் பெருமானை தெய்வமாய் கருத வைக்கும் உருவ வழிபாட்டை மேற்கொள்வது அவ்வாறு செய்வோரின் முயற்சிக்கு தடைக்கல்லாய் அமையும்.
சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள் வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினோடும் கேட்பீர்
என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்
எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்
புன்மார்க்கத்தவர் போலே வேறு சில புகன்றே
புந்திமயக்கடையாதீர் பூரண மெய்ச் சுகமாய்
தன்மார்க்கமாய் விளங்கும் சுத்த சிவம் ஒன்றே
தன் ஆணை என் ஆணை சார்ந்தறிமின் ஈண்டே.
என்பது வள்ளலார் அன்பு கட்டளை. சன்மார்க்கம் என்பது ஒன்பது வகையான வழிகளில் பூவுலகில் மக்களிடம் எடுத்துச் செல்லப்படும். அந்த ஒன்பது வழிகளில் ஒன்றுதான் எம்மை கருவியாகக் கொண்டு வள்ளல் பெருமான் அவர்கள் மகாமந்திரபீடத்தில் வெளிப்படுத்திய அனைத்து விஷயங்களின் சாராம்சம் ஆகும். இது முழுமையாக இந்த தொடர்க்கட்டுரையில் இரண்டாம் பகுதியில் வெளியிட்ட சாதக நிலையிலிருந்து சாத்திய நிலைக்கு உயரும் பொருட்டு செய்யும் முயற்சியில் ஏற்படும் அனுபவ ரீதியிலான சந்தேகங்களுக்கு வழங்கப்படும் அனுபவ ரீதியிலான பதிலாக கொள்க.
(தொடரும்)
ஜோதிமைந்தன் சோ. பழநி
