மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி - 31 (நவ வகை சன்மார்க்க செயல்பாடுகள்)

சன்மார்க்கம் என்ற வார்த்தையை திரு மூலர், தாயுமானவர், தியாகைய்யர் போன்ற அருளாளர்கள் பயன் படுத்தியிருந்தாலும், வள்ளல்பெருமான் அவர்களே முழுமையாக அந்த சொல்லுக்கு ஒரு உதாரணமாக வாழ்ந்து காட்டியதுடன், தமது அனுபவத்தை திருவருட்பா பாடல்களாகவும் உரைநடையாகவும் பதிப்பித்தவர். மேலும் அவர் செய்த பன்முக சன்மார்க்கப் பணிகளை இன்றைய காலகட்டதில் ஒருவர் அல்லது ஒரு சன்மார்க்க சங்கம் ஆகியவற்றில் முழுமையாக செயல்படுத்தி விட இயலாது. மேலும் ஒவ்வொரும் ஒவ்வொரு வழிமுறையை தேர்ந்தெடுத்து செயல்படுத்தும்போது சன்மார்க்கம் ஒட்டு மொத்தமாக வளர்ச்சியடையும்.

நாம் எந்த வழியில் சன்மார்க்கத்தை பரப்பவேண்டும் என்று வள்ளல் பெருமானின் அருளாசியுடன் பலவகையான செயல்முறைகளை முயற்சித்து அடையாளம் தெரிந்து கொள்ளலாம்

(1). மாநாடுகள்,பேரணிகள்,விழாக்கள் நடத்துவது மூலமாக வள்ளல் பெருமானின் கருத்துக்களை பொது மக்களிடம் எடுத்துசெல்வது ஒருவகையான சன்மார்க்க செயல்பாடு.

(2). ஊடகங்கள்,பத்திரிக்கைகள்,பிரசுரங்கள் மூலமாக படித்தவர்களிடம் சன்மார்க்கத்தை எடுத்துச்செல்வது ஒருவகையான செயல்பாடு.

(3). சத்விசாரத்தின் மூலமாக சன்மார்க்க கருத்துக்களை சன்மார்க்க அன்பர்களிடம் காலத்திற்கேற்ப அடிப்படை மாறாமல் பகிர்ந்து கொள்வதும், நவீன வடிவம் கொடுப்பதும் ஒருங்கிணைந்த கருத்துகளை உருவாக்குவதும் ஒருவகையான சன்மார்க்க செயபாடு.

(4). ஜீவகாருண்ய செயல்பாட்டின் அங்கமான அன்னதானத்தை செய்வதின் மூலமாக வறியவர்களின் மனதில் சன்மார்க்க கருத்துக்களை இடம் பெறச்செய்வதும் ஒருவகையான சன்மார்க்க செயல்பாடு.

(5). முதியோர் இல்லங்கள், ஏழைச்சிறுவர் இல்லங்கள் பெயரால் பரோபகாரம் எனும் வார்த்தைக்கு அர்த்தமளிப்பதுடன் சிறுவர்களை இம்மைக்கும், முதியோர்களை மறுமைக்கும் சன்மார்க்க வழியாலான பயிற்சியின் மூலமாக தயார் செய்வதும் ஒருவகையான சன்மார்க்க செயல்பாடு.

(6). உடற்பிணி,உயிர்ப்பிணி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு மருத்துவம் அளிப்பதின் மூலமாக சன்மார்க்க கருத்துக்களை பதியவைத்து வழி நடத்துவதும் ஒருவகையான சன்மார்க்க செயல்பாடு.

(7). ஒவ்வொரு சன்மார்க்க அன்பரும் நல்லமுறையில் பொருளை ஈட்டி மேற்கண்ட சன்மார்க்க நெறிமுறையில் செயல்பட்டு வள்ளல்பெருமானுக்கு கருவியாக செயல்படும் உண்மையான சன்மார்க்க அன்பர்களை தேடி கண்டுபிடித்து தமது பொருளாதாரம் பாதிக்காதவண்ணம் பொருள் சக்தியை வழங்குவதின் மூலமாக சன்மார்க்கம் பரவ வழிவகை செய்வதும் ஒருவகையான சன்மார்க்க செயல்பாடு.

(8). ஒவ்வொரு சன்மார்க்க அன்பரும் துர்க்குணங்களை விலக்கி சன்மார்க்க நெறிமுறைகளை கடைபிடிப்பதின் மூலமாக வள்ளல் பெருமானின் அன்புக்கு பாத்திரர் ஆகி சன்மார்க்க தொண்டு செய்யும் அன்பர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்படவும், இடையில் ஏற்படும் மனசஞ்சலங்களை விலக்கி பக்குவம் ஏற்படுத்தவும் தம்மால்முடிந்தவரை சன்மார்க்க கருதுக்களை அனுபவமாய் எடுத்துக்கூறியும், இடைவிடாமல் வள்ளல்பெருமானையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும் அருள்சக்தி அனைவருக்கும் வழங்க மனிதநிலையில் பிரார்த்திப்பதும் ஒருவகையான சன்மார்க்க செயல்பாடு.

(9). ஸ்தூலதேகத்திலிருந்து விடுபட்ட சன்மார்க்க ஆன்மாக்கள் வள்ளல் பெருமான் அருளால் சக்தி சத்தர்களாக மாறி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருட்கட்டளைப்படி தெய்வநிலையில் சன்மார்க்க செயல்பாடுகள் சிறப்பாக நடைபெறும் வண்ணம் ஆங்காங்கே உள்ள சன்மார்க்க அன்பர்களின் சத்திய விண்ணப்பங்களில் நற்குண அடிப்படையில் பொது நலமுள்ள விண்ணப்பங்களை ஆண்டவரின் அங்கிகாரத்துடன் வள்ளல் பெருமான் மேற்ப்பார்வையில் நிறைவேற்றவும், துர்க்குண அடிப்படையலான சுயநல விண்ணப்பங்களை நிராகரித்து அவர்களுக்கு பக்குவம் வருவிக்கும் அடிப்படையில் சோதனைகளை உருவாக்குவதும் ஒருவகையான சன்மார்க்க செயல்பாடு.

மேலும் இதில் பட்டியிலிடப்படாத செயல்பாடுகள் இருக்ககூடும் அவையனைத்தும் இந்த ஒன்பது வழிகளில் ஏதேனும் ஒன்றில் பொருந்தும், அல்லது இந்த ஒன்பது வழிகளில் ஒன்றுடன் ஒன்று இணைந்து முற்றிலும் புதுமையான மற்றொரு வழி எதிர்காலத்தில் உருவாக்கக்கூடும். இன்றைய சூழ்நிலையில் வள்ளல் பெருமான் அவர்கள் எமக்கு உணர்த்திய ஒன்பது வழிகளை பட்டியலிட்டோம் அவ்வளவே. மேலும் சில அன்பர்களுக்கு ஏதேனும் ஒரு வழி சிறப்பாக அமையக்கூடும், சில அன்பர்களுக்கு பலவழிகள் சிறப்பாக அமைய வள்ளல் பெருமான் அருள்சக்தி வழங்கக்கூடும். ஒன்பது வழிகளையும் ஒரு சேர வள்ளல் பெருமான் மட்டுமே செயல்படுத்த இயலும். நாமும் அவர் போல் செயல்படவேண்டும் என்று முயற்சித்து இயலாமல் போவதை விட நம்மால் எந்த வழியை பின்பற்றுவதன் மூலம் வெற்றியடையலாம் என சிந்தித்து செயல்படுவது சன்மார்க்க அன்பர்களின் அவரவர் பக்குவம். பெரும்பாலான சன்மார்க்க அன்பர்கள் மனதில் சன்மார்க்க செயல்பாடுகளும் சங்கங்களும் ஒருங்கிணைந்து செயல் படவில்லை என மனச்சோர்வு சிறிதளவு உள்ளது. ஆனால் உண்மையில் தெய்வ நிலையில் வள்ளல்பெருமான் அவர்கள் ஒருங்கிணைத்துதான் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்.

* மனித நிலையில் ஒருங்கிணைப்பை காண வேண்டுமாயின் மாநாடு பேரணிகள் மூலம் சன்மார்க்கப் பணி செய்ய விரும்புவோர் அந்தந்த மாவட்டத்திலிருந்து முன் வந்து ஒருங்கிணைந்து செயல்படுதல்.

* ஊடகங்கள், பத்திரிக்கைகள் ஒருங்கிணைந்து செயல்படுதல்.

* சத்விசாரக்குழுக்கள் ஒருங்கிணைந்து செயல்படுதல்.

* அன்னதான நாட்டமுள்ளவர்கள் தமக்குள் ஒருங்கிணைந்து ஒழுங்கு முறையை உருவாக்கிக்கொள்ளுதல்.

* மருத்துவமாமணிகள் ஒருங்கிணைந்து தமக்குள் தகவல் தொடர்புகளை உருவாக்கி கொள்ளுதல்.

* இல்லங்கள் நடத்துவோர் ஒருங்கிணைந்து தமக்குள்ள கஷ்டங்களையும் நடைமுறை சிக்கல்களையும் பகிர்ந்து கொள்வதின்மூலம் அனுபவங்களை கொண்டு வெற்றிப் பெறுவது ஆகியவை சிறந்த நடைமுறையாக இருக்கும்.

தாம் ஒருவகையான வழிமுறையில் இருந்து கொண்டு இன்னொரு வழிமுறையை சன்மார்க்கப் பணியாக செயல்படுபவரை ஊக்கமளிக்கும் வகையில் விமர்ச்சிக்கலாம். ஆனால் ஆராய்ந்து பாராமல் ஏதேனும் தவறாக விமர்சினம் செய்துவிட்டால் சக்தி சத்தர்களால் பக்குவம் வருவிக்கும் வகையில் சோதனைகளை எதிர் கொள்ள வேண்டிவரும். தமது வழிவகையில் செயல்படுபவரைக்கூட அவருடன் ஆரோக்கியமாக போட்டியிட்டு அவரைவிட சிறப்பாக செயல்பட முயற்சிக்கலாம். ஆனால் பொறாமையின் அடிப்படையில் விமர்சனம் செய்தால் பாதிப்பிலிருந்து மீள இயலாது.

ஒவ்வொரு சன்மார்க்க அன்பர்களையும் வள்ளல் பெருமானும் ஆங்காங்கே உள்ள சத்தி சத்தர்களும் ஊன்றி கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற எண்ணம் மனதில் பதிந்து விட்டால் துர்க்குண அடிப்படையிலான செயல்பாடுகள் வரும் வாய்ப்புகள் இல்லாமல் போகும். துர்க்குண செயல்பாடுகள் அநிச்சையானது. எனவே அதனை ஞான அறிவினால் தவிர்த்து கொள்ளுதல் சன்மார்க்கத்தில் நாம் செய்கின்ற பாதையை எளிதில் கடக்க உதவும். சன்மார்க்க வாழ்க்கை இயல்பு என்பது கடலில் குளிப்பது போன்றது. சன்மார்க்கப்பணியும் அதில் கிடைக்கும் அனுபவங்களும் கடலில் முத்தெடுப்பது போன்றது. சாதாரண நீச்சல் பயிற்சியிலேயே நீச்சல் பயிற்சிக்கு வந்தவர் பயிற்சியாளரிடம் கைகால்களை எப்படி நீச்சலில் அசைப்பது என்று கேள்வி கேட்டுக்கொண்டிருந்தால் பயிற்சியாளர் பேசாமல் அந்த மனிதரை தூக்கி நீரில் போட்டு விடுவார். அப்போது அந்த மனிதர் அநிச்சையாக கைகால்களை அசைத்து கரையோர முயற்சிப்பார், அவரால் இயலாத போது பயிற்சியாளர் உடன் விரைந்து காப்பாற்றுவார்.

வள்ளல் பெருமான் அவர்கள் ஞானதேகம் எனும் கப்பலில் இருந்துகொண்டு கரையிலிருப்பவர்களை முத்தெடுக்கும் பயிற்சி வழங்கி முத்தெடுத்து கொடுப்பதாக அழைக்கிறார். பெரும்பாலான அன்பர்கள் முத்தெடுத்தும் திரும்புகிறார்கள். ஒரு சில அன்பர்களுக்கு முத்தெடுக்கவும் ஆசையுள்ளது. ஆனால் சன்மார்க்க கடலில் இறங்கி வள்ளல் பெருமானை நோக்கி செல்லாமல் முத்தெடுத்து வந்த அன்பர்களின் முத்துக்களை விமர்சனம் செய்யமுயற்சித்து சோர்ந்து போகிறார்கள். வள்ளல்பெருமானை பொறுத்தவரை அனைவருக்கும் முத்துக்கள் வழங்க காத்திருக்கிறார், மனிதர்கள் கடலில் இறங்காமல் போனால் மரணத் துன்பம் எனும் சுனாமி வந்து வாரி சுருட்டிக்கொண்டு போய்விடும். சுனாமி என்பது கரையிலுள்ளவர்களைதான் பாதிக்கும் ஏற்கனவே கடலிலுள்ளவர்களை பாதிக்காது. முத்துக்கள் மீது ஆசைப்பட்டாவது அன்பர்கள் தம்மையடைய சன்மார்க்க கடலில் இறங்கினால் அவர்களை காப்பற்றலாமே என்ற பேராவலில் வள்ளல் பெருமான் அழைக்கிறார். ஒன்பது வழிகளும் நவரத்தினங்களுக்கு ஒப்பாவை அவரவர் தன்மைக்கேற்ப இந்த இரத்தினங்களை கைகொண்டால் மரணமிலா பெருவாழ்வுதானே அமையும். ஆனால் மரணமிலாப் பெருவாழ்வு கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு செயல்பட்டால் எதுவும் கிடைக்காது வள்ளல் பெருமானின் ஆசையற்ற தன்மைதான் அவருக்கு சுத்தமாதி மூன்று தேகத்தை வழங்கியது.

இறக்கவும் ஆசை இல்லைஇப் படிநான் இருக்கவும் ஆசைஇன் றினிநான்
பிறக்கவும் ஆசை இல்லைஉல கெல்லாம் பெரியவர் பெரியவர் எனவே
சிறக்கவும் ஆசை இலைவிசித் திரங்கள் செய்யவும் ஆசைஒன் றில்லை
துறக்கவும் ஆசை இலைதுயர் அடைந்து தூங்கவும் ஆசைஒன் றிலையே.

(திருவருட்பா)

என்ற பாடலின் தன்மை இதை உணர்த்துகிறது. மனித நிலையில் சத்திசத்தர்கள் தன்மையை கூட எய்தி விடலாம். ஆனால் சுத்ததேகம் என்பது இறைவன் தானாக கொடுப்பது எனவே அந்த தன்மையையும் அதற்கு மேலான தன்மையையும் சத்விசாரத்திற்கு உட்படுத்தக்கூடாது. எனவே சுத்த சன்மார்க்க அன்பர்கள் பூரண நம்பிக்கையுடன் செயல்பட்டு சன்மார்க்கப்பணி செய்து வந்தால் தானே அமையும்

(தொடரும்)

ஜோதிமைந்தன் சோ. பழநி