மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி - 33 (சன்மார்க்க இறைவரி)

சன்மார்க்க இறை வரி

வள்ளல் பெருமான் அவர்களால் வாழ்க்கை இயல்பாக வழங்கப்பட்ட சன்மார்க்க இயல்பு என்பது எல்லாவகையிலும் ஈடுகாட்ட முடியாத தனித்தன்மை வாய்ந்த, மனிதனை உயர்ந்த நிலைக்கு அருள்சக்தியாலும் பொருள் சக்தியாலும் நிலை நிறுத்தக்கூடிய மிக உயர்ந்த வழிமுறையாகும். இந்த வழிமுறையில் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்கள் எந்த வகையிலும் தோல்வி காணாத அவரவர் பக்குவத்திற்கேற்ற வகையில் பலன் தரும் நல்லதொரு பாதையில் பயணிக்கும் மிக உயர்ந்த பேறு பெறுகிறார்கள். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற வாக்கிற்கு இணங்க ஒவ்வொரு சன்மார்க்க அன்பருக்கும், தாம் பெற்ற சன்மார்க்க இயல்பை உலகமாந்தர் அனைவரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தின் தாக்கமே அவர்களை மிக உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை. அந்த எண்ணம் இருந்தால் மட்டும் போதுமானதல்ல சன்மார்க்கத்தை உலகமாந்தர்க்கு எடுத்து செல்லும் பணியில் நமது பங்கு எவ்வளவு என்பதை கணிக்கும் வழிமுறையை பின்பற்றுவதே அவரவர் கடமையாகும்.

எந்த ஒரு செயல்பாடும் வெற்றி பெறுவது என்பதை அந்த செயல்பாட்டை செய்பவரின் ஈடுபாடு,ஆற்றல் மற்றும் அதற்கான பொருள்சக்தி இவையே நிர்ணயிக்கின்றன. வள்ளல் பெருமான் அருளரசாட்சியில் உலகமக்கள் அனைவரும் சன்மார்க்க வழியில் சென்றால்தான் உலக உயிரினங்களை காப்பற்ற இயலும் என்ற சூழல் உருவாகி வருகிறது. வாழ்க்கையில் ஏற்கனவே சன்மார்க்கத்தை பின்பற்றி வருபவர்களும் உலக செயல்பாட்டை உற்று நோக்கும்போது மிகப்பெரிய கடமை சன்மார்க்கிகளை எதிர் நோக்குகிறது. புவி வெப்பமயமாதலை தவிர்க்க வேண்டுமானால் உலக மக்கள்தொகையில் பத்து சதவீதம் பேர் சுத்த சைவ உணவை மேற்கொணடால் போதுமானது என ஐ.நா.சபையே அறிவித்துள்ளது. இந்த சூழலில் உலகை காப்பற்றவும், உயிரினங்களை பாதுக்காக்கவும் குறைந்த பட்சம் அறுபது கோடி பேர் சமயங்கடந்த தனிப்பொருள் வெளியாய் அமையும் திருச்சபை அருட்பெருஞ்ஜோதியை புரிந்து கொண்டு சைவ உணவுக்கு மாறவேண்டும். இது நிகழ வேண்டுமானால் பெரிய அளவில் சன்மார்க்க கருத்துக்கள் பரப்பும் கடமையை ஒவ்வொரு சன்மார்க்க அன்பரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு பொருள்சக்தி தேவைப்படும். பொருள்சக்தியை பொறுத்தவரை தம்மையும் தமது குடும்பத்தாரையும் பாதிக்காத வண்ணம் சன்மார்க்கப்பணிகளுக்காக தமது வருமானத்தில் குறிப்பிட்ட பகுதியை ஒதுக்க வேண்டும்.

ஒவ்வொரு நாட்டின் நல்ல குடிமகனும் தமது நாட்டுக்கு அரசு வரியை செலுத்துவது எந்த அளவு முக்கியமோ, அந்த அளவு சன்மார்க்க அன்பர்களும் உலக நன்மைக்காக தமது வருமானத்தில் குறிப்பிட்ட அளவு தொகையை சன்மார்க்க இறைவரியாக கருதி செலவழிப்பது முக்கியம் என்ற கருத்தை மனதில் பதிக்க வேண்டும். இந்த கருத்தை மனதில் நிறுத்தி வள்ளல் பெருமானின் அருளால் சத்விசாரம் செய்து வெளிப்பட்டகருத்துக்களை அனுபவ ரீதியாகவும் முன்வைக்கிறோம். கடின உடல் உழைப்பு செலுத்தி பொருளாதாரத்தில் குறைவான நிலையில் வாழ்க்கை நடத்தும் அன்பர்கள் தமது வருமானத்தில் 3 சதவீதம் இறைவரியாக நினைத்து செலவிட வேண்டும். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த சன்மார்க்க அன்பர்கள் தமது வருமானத்தில் 6 சதவீதத்திற்கு குறையாத அளவு இறைவரியாக நினைத்து செலவிட வேண்டும்.

மேல்தட்டு வர்க்கம் என்றும் ஆளும் வர்க்கம் என்றும் பகுத்தறியப்பட்ட சன்மார்க்க அன்பர்கள் 9 சதவீதத்திற்கு குறையாத வகையில் சன்மார்க்கப்பணிகளுக்காக ஒதுக்க வேண்டும். சில நேரங்களில் வள்ளல்பெருமான் துணையால் ஆண்டவரின் அருள்சக்தியை பயன்படுத்தி சில பொருளாதார லாபங்கள் ஏற்படும் அது சமயம் வழக்கமான இறைவரியுடன் அருளியல் செயல்பாட்டின் தன்மையை மனதில் கொண்டு கூடுதலாக ஆறு சதவீதம் லாபத்தில் இறைவரியாக நினைத்து செலவிட வேண்டும். ஏப்ரல் முதல் மார்ச் வரை என்பது மனித நிலை அரசுவரிக்கான ஆண்டுக் கணக்காக கணக்கீடு செய்வதுபோல் அருளரசாட்சி ஆண்டுகணக்கிற்கு ஆடிமாத பூச தினத்திலிருந்து அடுத்த ஆடிமாத பூச தினம் வரை ஆண்டுகணக்கீடு செய்து இறை வரியை கணக்கிட்டு, அந்த தொகையை அதற்கடுத்து வரும் தைப்பூசத்தினத்திற்கு மூன்றாம நாள் வரும் திருக்கதவதிறப்பு நாளை குருதினமாக கருதி அந்த நாளுக்குள் சன்மார்க்க செலவினமாக செய்து இறை வரியை பூர்த்தி செய்ய வேண்டும் . ஏனெனில் தைமாத பூசம் பெளர்ணமியில் வரும், ஆடிமாத பூசம் அமாவாசை தினத்தன்று வரும் சத்ய யுகம் உருவானது ஆடிமாத அமாவாசை தினத்தன்று என்பதால் அதையே ஆண்டு கணக்கிற்கும் ஆரம்பமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் நடைமுறையில் அவ்வப்போது இறைவரி செலவு செய்யவேண்டும். அப்படியும் இறைவரி கணக்கீடு படி உபரியாக இருக்கும் நிதியை குருதினத்திற்குள் செலவு செய்யவேண்டும்.

உதாரணமாக 2009 ஆடிமாத பூசதினத்திலிருந்து 2010 ஆடிமாத பூசதினம் வரை கிடைத்த வருமானம் அருளியல் மூலம் கிடைத்த இலாபம் இவைகளைக் கொண்டு அந்தந்த மாதம் செலவு செய்து வரவேண்டும். 2010 ஆடிமாதம் கணக்கீடு செய்யும்போது உபரியிருந்தால் 2011 குருதினத்திற்குள் செலவு செய்யவேண்டும். ஏனெனில் 2010 ஆடி மாதத்திற்கு பிறகு அடுத்த ஆண்டு தொடங்கி விடுவதால் அடுத்த ஆண்டின் இறைவரி கணக்கில் வந்துவிடும் என அறிக. இவ்வாறாக உபரித்தொகையையும் கணக்கிட்டு முறையாக செலவு செய்யும் அன்பர்களுக்கு 2011 தை பூச தினத்திலிருந்து 2011 ஆடி பூச தினம் வரை வருமானம் எதிர்பாராத அளவுகூடும். குறைந்தபட்ச இறைவரியாக கூட தெரிந்தே செலவு செய்யாதவர்களுக்கு ஆறுமாதத்தில் தானாக வருமானம் குறைந்துவிடும். இந்த கணக்கீடு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் ஒவ்வொரு சன்மார்க்க அன்பரும் தைப்பூச தினத்தை எந்த அளவு ஈடுபாட்டுடன் அன்னதான வழிபாட்டுடன் எதிர்கொள்கிறார்களோ அந்த அளவு அடுத்த ஆண்டு பொருள்சக்தி பெருகுவதைக் கொண்டு அவரவரே இறைவரியின் பிரதிபலிப்பை நிர்ணயித்துக் கொள்ளலாம். சன்மார்க்கம் என்பது உலகளாவிய வகையில் பெருக வேண்டும் என்பதால் இறைவரியைக் கொண்டு சன்மார்க்க அன்னதானம் மூலமாகவோ, மாநாடுகள், விழாக்கள் எடுப்பது மூலமாகவோ சன்மார்க்க கருத்துக்கள் மக்களிடையே பரவுவதை அவரவர் பகுதியிலேயே அரங்கேற்றம் செய்ய வேண்டும். அந்தந்த பகுதியில் உருவாகும் சன்மார்க்க அன்பர்களின் கூட்டுமுயற்சியால் ஆங்காங்கே சங்கங்கள் செயல்பட வேண்டும். சன்மார்க்க வழிகாட்டிகளாக தம்மை நிலைநிறுத்திக் கொள்ள விரும்பும் சன்மார்க்க அன்பர்களும் தமது எல்லையை மக்கள்பணி செய்யும் இடத்திலிருந்து அதிகபட்சமாக ஐம்பது கிலோமீட்டருக்குள் நன்கொடைகள் பெறவேண்டும். அதையும் கடந்து சென்று பெற்றால் அந்த்ந்த பகுதி சன்மார்க்கப் பணி பாதிக்கப்படும்.

மேலும் ஆங்காங்கே மாவட்ட அளவில் பேரணிகள், மாநாடுகள் நடத்தப் படும்போது மாநில அளவில் புகழை உருவாக்கிக் கொண்ட சன்மார்க்க அன்பர்களை,வழிகாட்டிகளை மாநாட்டிற்கு அழைத்தால், தமது எல்லைபகுதியையும் கடந்துசென்று மாநாட்டில் பங்கு கொள்ளும் வாய்ப்பை பெற்றவர்கள் அந்த மாநாட்டில் சென்று நன்கொடை வசூலில் இறங்குவதை தவிர்க்க வேண்டும். மாநாட்டிற்கு வரும் அன்பர்கள் மாநாட்டை கருத்தில் கொண்டு நன்கொடை வழங்க தயார் செய்து வந்திருப்பார்கள். அவர்களை வலிய சென்று நன்கொடையை பிறர் பெற்றுக் கொண்டால் மாநாடு அமைப்பாளர்களுக்கு சிரமம் ஏற்படுவதுடன், அவ்வாறு வசூல் செய்தவரை மற்ற இடங்களில் மாநாடு நடத்துபவர்கள் பயந்து, இங்கிதமற்றவர் எனப் புறக்கணித்து, ஒரு நல்ல ஆன்ம நேயர் காலப்போக்கில் மக்களால் அடையாளம் காண முடியாமல் போய்விடுவார். மேலும் மாநாடு என்றால் இயல்,இசை,நாடகம் எனும் முத்தமிழால் அலங்கரிக்கப்படும்போது, மாநாடு வரும் அன்பர்கள் முதலில் மாநாடு நடத்தும் அமைப்பாளர்களிடம் தாம் வழங்க எண்ணும் நன்கொடையை வழங்கிவிட்டு உபரியிருப்பின், இசை ஆர்வத்திலும் கலையார்வத்திலும் கலைஞர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கலாம். பெரும்பாலும் கலைஞர்கள் அமைப்பாளர்களால் உரிய பணம் கொடுத்தே அழைத்துவரப்படுகிறார்கள். அவர்களுக்கு அன்பளிப்பு கொடுப்பதின் மூலம் மாநாட்டுக்கு வழங்க இருந்த நன்கொடையானது பாதிக்கப்படக்கூடாது. அப்படியும் மீறி கலைஞர்களுக்கு அன்பளிப்புகள் வந்தால்,கலைஞர்கள் தமது கலைக்கு மதிப்பளித்து மேடை அமைத்துக் கொடுத்த விழாக்குழுவினரிடம் பாதி அன்பளிப்பு தொகையை வழங்குவதின் மூலமோ அல்லது த்மக்கு விழாக்குழுவினர் வழங்க வேண்டிய தொகையில் சரி செய்துக் கொள்வதின் மூலமோ ஒரு முன்னுதாரணமாக இருந்து மற்ற மாநாடுகளிலும் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற செய்ய தூண்டுகோலாக அமைய வேண்டும். மேலும் சன்மார்க்க அன்பர்கள் இறைவரிக்காக கணக்கிட்ட தொகையில் தாமே நேரடியாக செலவு செய்ததுபோக மீதமிருப்பின் சன்மார்க்கத்தை உள்ளன்போடும் ஆன்மநேயத்தோடும் பரப்பிவரும் சன்மார்க்க வழிகாட்டிகள் மூலம் செலவு செய்து தமது கடமையை முடிக்கலாம். சன்மார்க்க வழிகாட்டிகளாக தம்மை முன்னிலைப் படுத்திக்கொள்ளும் அன்பர்கள் தமது இறைவரியை முழுமையாக பயன்படுத்தி தம்மீது நம்பிக்கை வைத்து நன்கொடையாக இறைவரி வழங்கும் அன்பர்களின் தொகையையும் செம்மையாக சன்மார்க்கப்பணிக்கு செலவிடவேண்டும். யாரையும் சென்று வலிய நன்கொடை கேட்பதின் மூலம் தொல்லை செய்து தம்மைபார்த்தாலேயே பயந்து ஒளியும்தன்மையை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வள்ளல் பெருமான் யார் உள்ளத்தில் புகுந்து நம்மிடம் பணம் வழங்கி, செலவு செய்ய கடமை விதிக்கிறாரோ அதை மட்டுமே நாம் செய்ய கடமைப் பட்டவராவோம் என்ற எண்ணத்தையும்,எந்த வித முகாந்திரமுமின்றி நன்கொடைக்காக பிறரை வலியுறுத்தினால் தெய்வ நிலையிலும் புறக்கணிக்கப் பட்டுவிடுவோம் என்ற கருத்தையும் மனதில் நிரந்திரமாக,ஆழமாக பதித்துக் கொள்ளவேண்டும்.

அதே நேரத்தில் சன்மார்க்க அன்பர்களுக்காக செய்யும் அருளியல் பணிகள், சொற்பொழிவுகள், அருளியல் மருத்துவங்கள் ஆகியவைகளுக்காக அவரவர் தன்மைக்கேற்ப குறிப்பிட்ட தொகையை பெற்று சன்மார்க்கப் பணிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் தவறில்லை. மேலும் உயிர்க்கொலையும் புலைப்புசிப்பும் உடைய புற இனத்தாரிடம் நன்கொடை பெறுவதை தவிர்த்து விடவேண்டும். அவர்களாக முன்வந்து கொடுத்தாலும் அவர்களை அகவினத்தாராக மாற்றுவதை முதல்கடமையாக கொள்ளவெண்டும். இந்த அடிப்படையில் செயல்படும் ஒவ்வொருசன்மார்க்க அன்பரும் எதிர்காலத்தில் உலகிற்கு சன்மார்க்க வழிகாட்டிகளாக உருவாக வாய்ப்புண்டு. அவரவர் மனதிலும்,செயலிலும் ஏற்புடைத்தான சன்மார்க்கப் பணிகளை தேர்ந்தெடுத்து, முழுமையாக செயல் வடிவம் கொடுத்து, இறைவரியை முழுமனத்திருப்தியுடன் செலவு செய்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் வள்ளல் பெருமானை முன்னிலைப் படுத்தி விண்ணப்பமாக வைத்தால் அவையனைத்தும் நிறைவேறும். இதை கடைபிடிப்பவர்கள் பொருள்சக்தியில் படிப்படியாக கீழ்நிலையிலிருந்து நடுத்தரவர்க்கமாக உயர்ந்து பிறகு மேல் தட்டு வர்க்க மனிதராக மாறுவார்கள். அருள்சக்தியில் சன்மார்க்க அன்பர்களாக இருப்பவர்கள் வழிகாட்டிகளாக மாறி பின்பு அருளாளர்களாக மாறுவர் என்பது உறுதி மற்றும் இறுதி நிலை என அறிக.

(தொடரும்)

ஜோதிமைந்தன் சோ. பழநி