மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி - 35 (சபை எனது உள்ளம் )
சபையெனதுளமென தானமர்ந்தெனக்கே
அபயமளித்ததோர் அருட்பெருஞ்ஜோதி
என்று அருட்பெருஞ்ஜோதி அகவலில் வள்ளல் பெருமான் கூறுகிறார்.
ஒவ்வொரு சன்மார்க்க அன்பரின் உள்ளமும் ஞானசபையாக உருவாக வேண்டும் என்பதே வள்ளல் பெருமானின் எதிர்பார்ப்பு. அவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால்தான் நாம் உண்மையில் அவரைப் பின்பற்றும் சன்மார்க்க சங்கத்தவராக இறைநிலையில் வள்ளல் பெருமானால் ஏற்றுக் கொள்ளப்பட்டவராக அங்கீகரிக்கப் படுவோம். ஒவ்வொரு மனிதனின் உள்ளமும் வெளிமனம், உள்மனம், ஆழ்மனம் என்று மூன்று நிலையாக பகுக்கப்பட்டுள்ளது. சன்மார்க்கத்தில் உயர்நிலையடைய மூன்று பகுதிகளையும் தூய்மைபடுத்த வேண்டும்.
முதலில் வெளிமனதை ஒழுக்கத்தால் தூய்மைபடுத்த வேண்டும். சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் பற்றிய விருப்பமோ வெறுப்போ எது இருந்தாலும் அதை மனதிலிருந்து துடைத்து விடவேண்டும். புலமையின் காரணமாகவோ அனுபவத்தின் காரணமாகவோ அவற்றைப்பற்றிய எண்ணங்களின் தாக்கம் இருந்தால் அவற்றை மூளையில் மட்டும் ஆய்வு கண்ணோட்டத்தில் பதிவு செய்து மனதிலிருந்து வெளியேற்ற வேண்டும். சாதிய எண்ணங்களையும் முற்றிலுமாக நீக்க வேண்டும். வள்ளல் பெருமான் கூறியதுப்போல் சாதி,மதம்,சமயம் என்று எந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் சுத்த சைவ உணவு கொள்பவர்கள் அக இனத்தார் என்றும், கருணையில்லாத அசைவ உணவு உண்பார் எல்லாம் புற இனத்தார் என்ற அளவில் மட்டுமே மனதில் வேற்றுமையை அங்கீகரிக்க வேண்டும். வெளிமனதை இந்த வகையில் பக்குவபடுத்தி தூய்மை செய்து இந்தபதிவுகளை சிறிது சிறிதாக உள்மனதுக்கும் கொண்டு செல்ல வேண்டும். உள்மனதை ஒழுக்கங்களுடன் காலம் காலமாக வந்த நடைமுறை பழக்க வழக்கங்களை கருணை அடிப்படையில் ஒழுங்குபடுத்தி தூய்மை படுத்துவதுடன் துர்க்குணங்களையும் முற்றிலுமாக நீக்க வேண்டும். ஒழுக்கங்கள் எவை துர்க்குணங்கள் எவை கருணையுள்ள உள்ளத்தின் தன்மை என்ன என்பதை வள்ளல் பெருமான் அவர்கள் ஜீவஒழுக்கம், கரண ஒழுக்கம், இந்திரிய ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்று நான்கு பெரும் பிரிவுகளாக வகுத்துள்ளார். அவற்றையே நாம் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் இந்த தொடரில் 18 அம்சங்கள் கொண்ட வாழ்க்கையியல்பாக பட்டியலிட்டுள்ளோம்.
இவ்வாறாக வெளிமனம், உள்மனம் ஆகியவற்றை தூய்மைபடுத்தினால் சன்மார்க்கியின் மன இயல்பானது ஆறாம் திருமுறையிலுள்ள பிள்ளை பெருவிண்ணப்பத்தில் குறிப்பிட்டிருப்பதுபோல் மாறிவிடும். ஆன்ம நேயஒருமைப்பாடு மனதில் மலரும். அதை அப்படியே ஆழ்மனதில் கொண்டு சென்று பதிவு செய்தால் அது கருணை வடிவில் ஆழ்மனதைஆட்கொண்டு ஆண்டவருக்கு அதுவே ஆசனமாக அமையும். இவ்வாறாக உள்ள மனதின் தன்மையே மாயாதிரைகளாக வெளிப்படுகிறது. வெளிமனதின் அடையாளமாகவும் அதிலுள்ள மாயைக்குட்ப்பட்ட எண்ணங்களாகவும் கருப்பு, நீலம், கரும்பச்சை திரைகள் உள்ளன. வெளிமனதை சுத்தம் செய்கையில் இந்த திரைகள் விலகி விடும். உள்மனதின் அடையாளமாகவும் அதிலுள்ள எண்ணங்கள் குணங்களாகவும் பொன்பச்சை, சிவப்பு, மஞ்சள், வெண்மை திரைகள் உள்ளன. உள்மனதை சுத்தம் செய்கையில் இந்த திரைகள் விலகி விடும். ஆழ்மனதின் அடையாளமாகவும் மாயாதிரைகளை அனுபவத்தால் விலகச் செய்த அனுபவங்களாகவும் கலப்புத்திரையுள்ளது. அனைத்து அனுபவ நினைவுகளையும் மூளையில் பதியவைத்து அதுமனதை பாதிக்காமல் செய்யும்போது ஏற்படும் அருளியல் வெளிப்பாடுகளும் அதனால் ஏற்படும் அனுபவங்களும் ஆழ்மனதில் அருளகங்காரமாக ஞானத்திரையாக வீற்றிருக்கும் அதையும் ஆண்டவரிடம் அர்ப்பணித்தால் வெற்றுவெளி ஆழ்மனதில் ஏற்பட்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அமைவிடமாக மாறும். அருட்பெருஞ்ஜோதியாய் வெளிப்படும். அதன்பின் மனம், அறிவு, செயல்பாடு அனைத்தும் ஆன்மாவின் கட்டுப்பாட்டில் வரும். அறிவு பேரறிவு எனும் மெய்ஞானமாக செயல்படும். மெய்ஞானம் ஏற்பட்டப்பின் அற்புதங்களெல்லாம் மனதால் அறியப்படாமலேயே அநிச்சை செயல்களாக வெளிப்படும். ஸ்தூல தேகம் தானாக பண்படும். ஆன்மா பரமான்ம நிலையில் செயல்படும்.
“துன்றுமல வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிக்கடந்து சும்மா இருக்கும் சுகம்” ஏற்படும்.
ஜோதிமைந்தன் சோ. பழநி
