வாழ்கின்ற வள்ளலார் - 1
வள்ளல் பெருமான் அண்டங்களை கடக்கும் ஆற்றலை பெற்றவர் என்பதை சன்மார்க்கிகள் அறிவர். எந்த ஒருஆற்ற்லையும் ஆண்டவரிடம் பெற்றால், அந்த ஆற்றலை மற்ற ஆன்மாக்களுக்கு பயன்படும்வகையில் செயல்படுத்தி இன்பம் காண்பதே வள்ளல் பெருமானின் கோட்பாடு. அந்த அடிப்படையில் வள்ளல் பெருமான் 1874ல் தான் பெற்ற ஞானதேக ஆற்றலை அடுத்த அண்டமான “அண்டிராய்டு” அண்டத்தை நோக்கி செலுத்தி இங்கிருந்து இருபது லட்சம் ஒளி ஆண்டு தூரமுள்ள அந்த அண்டத்திற்கு ஒரு நொடிக்கு ஆயிரம் கோடி கிலோமீட்டர் வேகத்தில் சென்று அறுபது ஆண்டுகளில் அடைந்தார். அங்கிருந்து மீண்டும் திரும்பி வர அறுபது ஆண்டுகள் மொத்தம் நூற்றிருபது ஆண்டுகளில், அதாவது 1994ல் தமது கேந்திரத்தில் மையம் கொண்டு அருளரசாட்சியை செய்து கொண்டு தமது உணர்வலைகளை ஏற்று செயல் படுபவர்களுக்கு தாமே நேரடியாக வழிகாட்டியாக இருந்து செயல் பட்டு வருகிறார்.
மந்திரங்கடந்த நிலையில் இருப்பவர்கள் அவரின் ஆன்மாவில் உணர்வுபூர்வமாக ஐக்கியமானால் 192 நொடிகளில் அவரது உணர்வு அலைகளை சந்திக்கலாம். அவரது ஒளியுடல் காண வேண்டுமாயின் முழுமையாக முயற்சி செய்து உணர்வலைகளை ஐக்கியபடுத்தும் அந்த நிமிடம் முதல் 18மணி நேரத்தில் ஒளியுடலை தரிசிக்கலாம். வருங்காலத்தில் இந்த உண்மைகள் விஞ்ஞானிகளாலும் ஏற்றுக்கொள்ளப் பட்டு நிருபணமாகும்.
எமது வாழ்க்கையில் உணர்வு பூர்வமாக வள்ளல் பெருமான் வழிகாட்டி வந்தாலும் நேரடி அனுபவத்தை இங்கு எடுத்து கூறுவது இந்தகட்டுரைக்கு நல்ல சாட்சியமாக அமையும் என்பதால் இரண்டு நிகழ்வு களை இங்கு சுட்டி காட்டுகிறோம்.
இராணிப்பேட்டையில் ஞானசபை கட்டியபோது கீழ்தளம் அமைத்து அந்த தளம் அமைக்க ஏதுவாக பீடம் சுற்றி மணல் கொட்டப்பட்டிருந்தது.24.06.1998 அன்று அந்த மணலை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது ,பீடத்தருகே சென்ற நல்லதொரு சமுக சேவகராக இராணிப்பேட்டையில் திகழ்ந்துவரும் கஜேந்திரன் என்ற அன்பருக்கு வள்ளல் பெருமான் சில கணங்கள் தமது ஞானதேகத்தை காட்டி மறைந்தார். அதன் காரணமாக அந்த அன்பர் ஒரு நாழிகைநேரம் உணர்ச்சி மேலிட்டில் தத்தளித்தார். நல்ல மனிதர் சேவை குணம் கொண்ட பண்பாளர் என்பதால்,எம்மைவெளிப்படுத்தினோம் என வள்ளல் பெருமான் எம்மிடம் கூறினார்.
அடுத்ததாக திருமாளிகை கோபுரத்தின் உச்சியில் 10.08.1999 அன்று முதல் ஜோதி ஏற்றப் பட்டது. அது சமயம் வந்திருந்த அன்பர்கள் ஜோதியை தரிசனம் செய்ய கோபுரம் மேலேயே ஏறிவந்து வணங்கிவிட்டுச் சென்றார்கள். அடுத்து இரண்டாவதுஜோதி 07.09.1999 அன்று பூசதினத்தன்று ஏற்ற முற்படும்போது வள்ளல் பெருமான் எம்மிடம், “தங்களைத் தவிர யாரும் மேலே வரவேண்டாம் என அறிவித்து விடுங்கள்,அனைவரும் கீழிருந்தே ஜோதி தரிசனம் செய்யட்டும்” என்று கூறினார். அதன்படி யாமும் அன்பர்களுக்கு,”யாரும் எம்மை பின் தொடர வேண்டாம்” என அறிவித்து விட்டு, கீழே உள்ள ஜோதியிலிருந்து கற்பூரம் ஏற்றி எடுத்துக் கொண்டு மகாமந்திரம் கூறிக்கொண்டே கோபுரத்தின் மேல் நோக்கி படியேறினோம். அதுசமயம் வெண்மையான ஆடையுடன் வெளீவாயிலிலிருந்து ஒரு மனிதர் சுமார் 5அடி இடைவெளியில் பின்தொடர்ந்தார். யாம் இதை அறிந்து,வள்ளல் பெருமான் உணர்த்தியும்,இவர் பின்தொடர்கிறாரே,இவர் வெளியிலிருந்து வருகிறார் எனவே நமது அறிவிப்பு இவருக்கு தெரிந்திருக்காது,நாம்தான் மந்திரம் கூறிகொண்டு செல்கிறோம் மற்றவர்களாவது எடுத்துக் கூறலாமே என மனதில் வருந்தி மந்திரத்தை நிறுத்தாமலேயே மேலே சென்று, படிநிலை கோபுரத்தை வலம் வந்து மெலெ சென்று தீபம் ஏற்றினோம். வந்தவர் கோபுரத்தில் ஈசான்ய மூலையில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்தார். யாம் தீபமேற்றி மகாமந்திரத்தை தொடர்ந்து ஜோதிப்பாடல் பாடி ஆராதனை செய்து தீபாராதனை தட்டை எடுத்து கீழிறங்கிக் கொண்டே அந்த மனிதரிடம்,”ஐயா கட்டளையை கூறியும் மேலே வந்திருக்கிறீர்களே” என்று வருத்தப்பட்டு கூறிக்கொண்டு அவரது காலிலிருந்து தொடங்கி முகத்தை பார்க்க முயற்சிக்கையில் அந்த மனிதர் மறைந்து போனார். யாம் விதிர்த்து உணர்ச்சி மேலிட்டு படிக்கட்டு இருக்கும் இடம்கூட தெரியாமல் கலங்கி, சிறிதுநேரம் அமர்ந்து ,வந்தது வள்ளல் பெருமான் என உணர்ந்து, கீழே வந்து அனைவரிடமும் கூறி ஸ்தூல தேகமே காற்றில் கரைந்ததை கூறி ஞானதேகத்தின் பெருமையை எடுத்தியம்பி அனைவரும் ஆனந்தம் அடைந்தோம்.
முழு ஈடுபாட்டுடன் வள்ளல் பெருமான் வழி நின்றால் கண்டிப்பாக வாழ்கின்ற வள்ளல் பெருமானை தரிசிக்கலாம் என்பது எங்களது அனுபவ உண்மை.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க சுபம்.
(இந்த அனுபவ வெளிப்பாட்டு கட்டுரை சென்னையிலிருந்து வெளியாகும் “தீபச்சுடர்” மாத இதழில் (ஆகஸ்டு 2009) வெளியிடப்பட்டது)
-வெளிப்பாடு தொடரும்
என்றென்றும் சன்மார்க்க பணியில்,
ஜோதிமைந்தன் சோ. பழநி
