வாழ்கின்ற வள்ளலார் - 6
வள்ளல் பெருமான் அவர்கள் தமது பேருபதேசத்தில் :
நீங்களும் என்னைப்போல் ஒருமையுடன் இருங்கள் என்னிடத்தில் ஒருவன் வசப்படாத முரட்டுத்தனமாய் எப்படி இருந்தாலும்,
1. அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன்.
2. மிரட்டி சொல்லுவேன்.
3. தெண்டன் விழுந்து சொல்லுவேன்.
4. அல்லது பொருளைக்கொடுத்து வசப்படுத்துவேன்.
5. அல்லது ஆண்டவரை நினைத்து பிரார்த்தனை செய்வேன்.
இப்படி எந்த வித்தத்திலேயாவது நல்லவழிக்கு வரச்செய்து விடுவேன். நீங்கள் எல்லோரும் இப்படியே செய்தல் வேண்டும் என்று கூறுகிறார். மேலும் எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணுபவர் உள்ளத்தில் இறைவன் நடம் புரிவார் என்று கூறுகிறார்.
எங்கே கருணை இயற்கையிலுள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ்சிவமே
என்று அருட்பெருஞ்ஜோதியரை அகவலில் விளிக்கின்றார்.
தமிழ்ப்புலவர்கள் பெரும்பாலும் புலமையை மெய்ப்பிக்க பாடல் எழுதினால், வள்ளல் பெருமான் அவர்கள் தமது கருத்துக்களை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் பாடல்களை இயற்றினார்.
மேலும் வள்ளல் பெருமான் அவர்களின் அகவையும், அனுபவமும் கூடக்கூட எளிமையும், வலிமையும் கூடும். பக்திநிலையை விட ஞானநிலை வீஞ்சி நிற்கும். முதல் திருமுறையிலிருந்து வரிசைக்கிரமமாக ஆறாம் திருமுறை வரை படிக்கும்போது இது தெரிய வரும்.
மேலும் வள்ளல் பெருமானின் ஆன்மநேய ஒருமைப்பாட்டை பின்பற்றி கருணையை கடவுள்தன்மையாக கருதி வாழ்க்கை நடத்தினால்,
எங்குறு தீமையும் எனைத்தொடராவகை
கங்குலும் பகலும் மெய்க்காவல் செய்துணையே.
என்ற அகவல் வாக்கிற்கிணங்க தமது அன்பர்களை உடனிருந்து வள்ளல் பெருமான் அவர்கள் காப்பாற்றி வருகிறார்.
சன்மார்க்க கருத்துக்களை வாழ்க்கை இயல்பாக கொண்டு அனுபவ ரீதியாக சன்மார்க்க செயல்பாட்டை மேற்கொண்டால் எந்த அளவிற்கு வள்ளல் பெருமான் அவர்கள் நமக்கு துணையிருக்கிறார் என்பதற்கு
பல்வேறு நிகழ்வுகள் சாட்சியமாக இருந்தாலும், இங்கு ஒரு நிகழ்வை முன் வைக்கிறோம்.
1996ம் ஆண்டு தைப்பூசம் நடந்த மறுதினம், திருக்கதவம் திறப்பதற்கு முன்தினம் இரவு யாம் எமது குடும்பத்தாரும் அன்பர்களும் சேர்ந்து சுமார் பதினைந்து பேர்கள் அடங்கிய குழுவினராக சித்திவளாக திருமாளிகை அடைந்தோம். மக்களுக்கு வினியோகம் செய்ய ஒருபிரசுரம் தயாரித்திருந்தோம். அதை திருக்கதவம் முன்பு வைத்து வணங்கிவிட்டு எல்ல அன்பர்களுக்கும் வழங்கினோம். அன்பர்கள் ஆங்காங்கே அமர்ந்து குழுக்களாக அவரவர் பக்குவநிலைக்கேற்ப திருவருட்பா பாடல்களை பாடிக்கொண்டும் சத்விசாரம் செய்துக் கொண்டும் அமர்ந்திருந்தார்கள்.
நாங்கள் குழுவினராக அகவல் பாராயணம் செய்ய இடம் தேடினோம். எல்லா இடங்களும் நிரம்பியிருந்தன. திருக்கதவம் ஜன்னலுக்கு அடுத்ததாக, கட்டிடத்தின் வடகிழக்கு மூலையில் சிறிது இடம் காலியாக இருந்தது. அங்கு சென்று நாங்கள் அனைவரும் அமர்ந்து, அகவல் படிக்க தக்கவாறு எங்களை நிலைப்படுத்திக் கொண்டோம்.
அகவல் படிக்கும் பொருட்டு வள்ளலார் வருகைப் பாடலும் அருட்பெருஞ்ஜோதியரின் திருப்பள்ளியெழுச்சி பாடல்களையும் பாடிமுடித்திருப்போம். திடீரென்று பிச்சைகாரத்தன்மையை பிழைப்பாக ஏற்றுள்ள ஒரு பெண்மணி எங்களிடம் வந்து எமது துணைவியாரை பார்த்து சத்தம் போட ஆரம்பித்து விட்டார்.
“என்னுடைய இடத்தில் நீங்களெல்லாம் எப்படி உட்காரலாம், என் இடம் இது உடனே எழுந்திருங்கள்” என்று கத்தினார்.
எம் துணைவியார்,”இரு சும்மா சத்தம் போடாதே, நாங்கள் அகவல் பாராயணம் செய்து விட்டு எழுந்து சென்று விடுகிறோம், அதுவரை பிரச்னையெல்லாம் பண்ணாதே” என்றார்கள். தொடர்ந்து அந்த பெண்மணி கத்திக் கொண்டிருந்தார் எமக்கு வலப்புறமாக எமது துணைவியார் அமர்ந்திருந்தார்,மற்ற அன்பர்களும் எங்களை சூழ்ந்து அமர்ந்திருந்தார்கள்.அந்த பெண் தமது வசைப்பாடலை நிறுத்தவில்லை. யாம் எமது துணைவியாரிடம்,”அந்த பெண்ணின் பேச்சை பொருட்படுத்த வேண்டாம்,நாம் அகவல் பாராயணம் ஆரம்பித்து விடுவோம், ஒருவேளை வள்ளல் பெருமான் அவர்கள் நம்மையெல்லாம் இதுபோன்ற தன்மையில் சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து வரவேற்க எண்ணம் கொண்டிருக்கிறாரோ என்னவோ” என்று நகைச்சுவையாக கூறி சூழ்நிலையை யதார்த்தநிலைக்கு மாற்றி அகவல் பாராயணத்தை ஆரம்பித்தோம்.
அந்த பெண்மணி எமது துணைவியாரின் வலது புறத்தில் அமர்ந்து கொண்டு முணுமுணுத்துக்கொண்டேயிருந்தார்.
அந்த பெண்ணின் விமரிசனங்கள் எமது காதுகளில் விழுந்து கொண்டேயிருந்தது. யாம் மட்டும் மனதில் ,”பெருமானே என்ன இது எங்களுக்கு சோதனை,தாங்கள் எங்களை பக்குவ படுத்த எண்ணமா,அல்லது தண்டனை வழங்க எண்ணமா, தாங்கள் என்ன முடிவெடுத்தாலும், தாங்கள் எங்களுக்கு வழங்கிய தன்மையிலிருந்து இன்று மாறப்போவதில்லை” என்று எண்ணிக்கொண்டே அகவல் பாராயணத்தை தொடர்ந்தோம்.
அதுசமயம் சுமார் 50 வயது மதிக்க தக்க, பழுப்பேறிய, நான்குமுழ காடா வேட்டியும், தலையால் கழட்டக் கூடிய காடா சட்டையும் முற்றிலும் கிராமத்து தன்மையும் கொண்ட மனிதர் ஒருவர் அங்கே வந்து நாங்கள் அகவல் படிப்பதை சில நிமிடங்கள் வேடிக்கை பார்த்தார்.
அவர் சில நிமிடங்கள் வேடிக்கை பார்த்துவிட்டு பிச்சைக்காரபென்மணிக்கு அடுத்ததாக வலப்புறத்தில் தமது காலிலுள்ள இரப்பர் மிதியடியை கழட்டி வைத்துவிட்டு தலை சாய்த்து படுத்துக் கொண்டார். அந்த பெண்மணிக்கு இடநெருக்கடி அதிகமாகி விட்டது. எமக்கு உள்ளுக்குள் இன்னும் என்ன நேருமோ என்ற எண்ணம் உருவானது. சிலநிமிடங்கள் சென்றன. அந்த மனிதர் ஆழ்ந்து உறங்குவது போல் தெரிந்தது. அந்த பெண்மணி தமக்கு முன்னர் வைத்திருந்த துணியை எடுத்து உதறினார். தரையிலிருந்த மண் அந்த மனிதர் மீது விழுந்து சிதறியது.
நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை, அந்த மனிதர் கோபத்துடன் திடீரென்று எழுந்து தனது இரப்பர் மிதியடிகளால் அந்த பெண்மணியை ஓங்கி ஒங்கி மிக பலமாக கவனித்து விட்டார்.
நாங்கள் ஏற்கனவே அகவல் பாராயண பயிற்சியில் அகவல் பாராயணம் நடக்கும் போது எது நிகழ்ந்தாலும் அகவல் பாராயணத்தை நிறுத்தக்கூடாது என்று கூறியிருந்ததால், அகவல் பாராயணம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.
“ஏதோ வருஷத்தில் ஒரு நாள் இங்கு அன்பர்கள் அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். வருஷம் பூராவும்தான் இங்கிருந்து, வருபவர்களை தொல்லை செய்கிறாயே, இன்றாவது ஒருநாள் அனைவரும் நிம்மதியாக வழிபாடு செய்ய விடுவதுதானே, ஏன் அனைவரையும் தொல்லை செய்கிறாய்.நாளை முழுதும் இந்த காம்ப்பவுண்டுக்குள் உன்னை பார்த்தால் தொலைத்திடுவேன். நாளை மறுநாள்தான் இங்கு வரவேண்டும்” என்று கூறிவிட்டு எம்மை ஓரக்கண்ணால் கவனித்துவிட்டு சென்றுவிட்டார்.
அகவல் பாராயணம் முடித்தபின் நாங்கள் தேடியும் அந்த மனிதரையும் பார்க்க முடியவில்லை, அந்த பெண்மணியும் தென் படவில்லை.
இந்த நிகழ்வை யார் எப்படி எடுத்துக் கொண்டாலும் எங்கள் அன்பர்களை பொறுத்தவரை வள்ளல் பெருமான் அவர்கள் தமது அன்பர்களின் இன்ப துன்பங்களில் எந்த அளவு ஈடுபாடு கொண்டு களைய முற்படுகின்றார் என்பதற்கான சாட்சியமாக அமைந்தது.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க சுபம்.
-வெளிப்பாடு தொடரும்
என்றென்றும் சன்மார்க்க பணியில்,
ஜோதிமைந்தன் சோ. பழநி
