ஜோதிமைந்தனின் சொல்லோவியம் - 1

இல்லாத ஊருக்கு வழி கேட்பதும்,
சொல்லாத வார்த்தைக்கு விளக்கம் கேட்பதும்,
கல்லாத மனிதனை கட்டளை யிடுவதும்,
நில்லாத காலத்தை நினைக்காமல் இருப்பதும்,
கல்லாக மனதை கட்டி போடுவதும்,
தள்ளாத வயதில் துள்ளி யாடுவதும்,
முள்ளாக இருந்து பிறர் முன்னேற்றத்தை தடுப்பதும்,
வல்லார்கள் செயலை புல்லாய் நினைப்பதும்,
நல்லார்கள் மனதை நடுங்க செய்வதும் என்றும் ஆபத்தானது,

நேற்றைய செயல் இன்று திருந்தச்சொல்லும் தவறினால்,
இன்றைய செயல் நாளை வருந்தச் சொல்லும்,

கருடன் பார்வை பாம்பின் மீது,
பாம்பின் பார்வை தவளையின் மீது,
தவளையின் பார்வை பூச்சியின் மீது,
பூச்சியின் பார்வை புழுவின் மீது,
புழுவின் பார்வை புல்லின் மீது,
புல்லின் பார்வை கல்லின் மீது,
கல்லின் மீதும் கடவுளின் உருவம்,
கருடனின் மீதும் கடவுளின் உருவம்,
கடவுளின் பார்வை அனைத்தின் மீதும்,
அறியா விட்டால் அனைத்தும் வீழும்,
அறிந்து கொண்டால் அனைத்தும் வாழும்.

—ஜோதிமைந்தன் சோ. பழநி