ஜோதிமைந்தனின் சொல்லோவியம் - 5
வள்ளல் பெருமானின் அருளரசாட்சியில் இறைத்தன்மையை தவறாக பயன் படுத்தினால் எவ்வளவு புகழும், அறிவும், விளம்பரமும் இருந்தாலும் கைநொடிப் பொழுதில் காணாமல் போய் விடும் என்பது அருளரசாட்சி சட்டம் என்பதும், இறைவன் பெயரால் தவறு செய்தால் உடனே பின் விளைவுகளை எதிர் கொள்ள வெண்டும் என்பதற்கான சாட்சியமாக உலக நிகழ்வுகள் மிக வேகமாக அரங்கேறி வருகின்றன. இதன் மூலமாக மனச்சோர்வு அடையும் ஆன்மீக நாட்டமுள்ள பொதுமக்களுக்கு இயற்கை உண்மை தெய்வத்தின் தன்மையை எடுத்துரைத்து புத்துணர்ச்சி ஏற்பட வழி வகுக்கவெண்டியது சன்மார்க்கிகளின் கடமையாகிறது. மீண்டும் மக்கள் தவறான வழியில் பயணப்படாமல் சன்மார்க்கிகளின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் பெருமளவில் வெளிப்பட அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் புரிய விண்ணப்பிப்பதுடன் ஏற்கனவே யாம் இது சம்பந்தமாக வெளியிட்டுள்ள வீடியோ (சன்மார்க்கத்தை அடையும் வழி-2) காட்சியின் வசனங்களை எழுத்து வடிவில் சன்மார்க்க உலகிற்கு சமர்ப்பிக்கிறோம்.
கேள்வி-பதில் இலக்கிய உத்தியில் வெளியிடப்பட்ட வசனம் வருமாறு:
கேள்வி: வணக்கம் சார்! தங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
பதில்: ரொம்ப நல்லது வாழ்த்துக்கள்.
கேள்வி: என்னிடம் ஒரு மில்லியன் டாலர் கேள்வியுள்ளது அதற்கான பதிலை வள்ளல் பெருமான் ஒருவரால்தான் வழங்க முடியும். தாங்கள் வள்ளல் பெருமான் கருத்துக்களை பின்பற்றி வருவதால் தங்களை கேட்க அனுமதிப்பீர்களா?
பதில்: தாராளமாக கேளுங்கள் அதைப்பற்றி சத்விசாரம் செய்வோம். உண்மைகளை வெளிப்படுத்துவதும் வள்ளல் பெருமான் கொள்கைகளில் ஒன்றல்லவா.
கேள்வி: ரொம்ப நன்றி சார் கடவுளை பிறருக்கு காட்ட முடியுமா?
பதில்: உண்மையில் இது ஒரு மில்லியன் டாலர் கேள்விதான். ஏனென்றால் கடவுளை காட்டுகிறேன் என்று பதில் கூறி மில்லியன் டாலர் சம்பாதித்து விடலாம். ஆனால் கடவுளை காட்டுகிறேன் என்பதும்,மலையை தலையில் தூக்குகிறேன் என்பதும் ஒன்றுதான்.
கேள்வி: சார் இன்னும் கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள்.
பதில்: கடவுளை புறங்கவிய வர்ணிக்கவே முடியாது எனும்போது எவ்வாறு காட்ட முடியும் என்று யோசியுங்கள்.
கேள்வி: புராணங்களிலும், மந்திரங்களிலும் சமயங்கள் வர்ணித்து கூறுகின்றனவே. சமய குருமார்கள் சிலரும் காட்டுவதாக தம்மை விளம்பர படுத்தி வருகிறார்களே.
பதில்: புராணங்களும், சமய மந்திரங்களும் கடவுளை அழகிய ஆணாகவும் அல்லது பெண்ணாகவும்தான் பாதாதி கேசம், கேசாதி பாதம் வர்ணித்துள்ளன. கடவுளை கடவுளாக வர்ணிக்கவில்லை. மேலும் சமய குருமார்கள் கூட புராணத்தில் வர்ணித்து இருப்பதுபோல் கடவுளை காட்டுகிறேன் என்று விளம்பரபடுத்தவில்லையே.
கேள்வி: அப்படி காட்டுவார்கள் என்று மனதால் நம்பித்தானே மக்கள் அவர்களிடம் செல்கிறார்கள்.
பதில்: பக்குவத்தால் வரவேண்டிய அனுபவங்களை பணம் கொடுத்து அடையலாம் என்ற மக்களின் ஆசைதான் இதற்கு காரணம்.
கேள்வி: தாங்கள் கூறுவதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். கடவுளை கடைச் சரக்காக மாற்றும் இதுபோன்ற விஷயங்களை வருங்காலத்தில் தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
பதில்: ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் இதுவே உலக நியதி.
கேள்வி: அப்படியானால் கடவுளை காணவே முடியாதா?
பதில்: காண முடியும், ஆனால் காட்ட முடியாது.
கேள்வி: சற்று புரியும்படி கூறுங்கள்.
பதில்: மின்சாரத்தை தங்களால் காட்ட முடியுமா?
கேள்வி: மின்சாரத்தை காட்ட முடியாது, ஆனால் அது செயல்படும் கருவிகளை காட்டமுடியும் அதன் செயலையும் காட்ட முடியும்.
பதில்: அதுபோல்தான் கடவுளை காட்ட முடியாது ஆனால் கடவுள் செயல்படும்விதங்களை பார்க்கலாம்.
கேள்வி: காட்ட முடியாது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். காணமுடியும் என்கிறீர்கள் அதை சிறிது விளக்குங்கள்.
பதில்: இறைவனை பிறருக்கு காட்ட முடியாது நாம முயற்சித்தால் அவரவரே காணலாம்.
கேள்வி: அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
பதில்: இறைவன் செயல்படும் முறைகளையும் செயல்களையும் அடையாளம் கண்டு அதை மனதில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நல்ல செயல்களிலும் இறைவன் பங்கு எவ்வளவு, மனிதன் பங்கு எவ்வளவு என கணித்து தன்னையும் அதில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
கேள்வி: இறைவன் இருந்து செயல்படும் இடங்களில் ஒன்றை கூறுங்கள்.
பதில்:
எத்துணயும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடம் என நான் தேர்ந்தேன்
என வள்ளல் பெருமான் கூறுகின்றார் எனவே தங்கள் உள்ளத்தை எத்துணையும் பேதமுறாது இருக்கும்படி பண்படுத்தினால் தங்களிடமே இறைவன் உறைவார். இதுவே சன்மார்க்கத்தின் முதல் படி என அறிவீர்களாக.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க சுபம்.
