மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி - 11 (கீர்த்தி நிறைந்த கிருதயுகம்)

கீர்த்தி நிறைந்த கிருதயுகம்

ஆடுறு சித்திகளறுபத்து நான்கெழு
கோடியும் விளங்கக் குலவு மெய்ப்பொருளே
கூட்டுறு சித்திக்கள் கோடி பல் கோடியும்
ஆட்டுற விளங்கு மரும்பெரும் பொருளே
அறிவுறு சித்திகளனந்த கோடிகளும்
பிறிவறவிளங்கும் பெருந்தனிப்பொருளே.

(அகவல் 911-916)

உண்மையான ஆன்ம நிலைக்கும் காலத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.ஆன்மாக்கள் ஒட்டு மொத்த சுழற்சியாக செயல்பட ஆண்டவர் காலத்தை வகுத்துள்ளார். 1 முதல் 108 படிநிலைகளில்,104 படிநிலைகள் வரை உள்ள ஆன்மாக்கள் மட்டும் கால சுழற்சியில் சிக்குகின்றன. 105 முதல் 108 வரை உள்ள படிநிலை ஆன்மாக்கள் கால சுழற்சிக்கும் அப்பாற்பட்டு ஆண்டவரின் அண்மைக்கு சென்று விடுகின்றன. ஆண்டவர் 1முதல் 90 படிநிலைவரை உள்ள ஆன்மாக்களின் செயல்பாடுகளை தம் சுதந்திரமாக வைத்துக் கொண்டு 91 முதல் 108 படிநிலைவரை உள்ள ஆன்மாக்களுக்கான சுதந்திரத்தை 91வது படிநிலையில் உள்ள மனிதர்களிடம் அளித்துள்ளார் என்று கடந்த அத்தியாயத்தில் பாத்தோம்.

மேலும் 91வது படிநிலை முதல் 104 வது படிநிலை வரை உள்ள ஆன்மாக்களே காலத்தால் வழி நடத்தப்படுவதுடன் ஆன்ம சுழற்சியை நிர்ணயிக்கின்றன. நான்கு யுகங்களை கொண்ட சதுர்யுகத்தில் முதல் யுகமான கிருதயுகமே அந்த சதுர்யுகத்தின் செயல்பாட்டை நிர்ணயிக்கிறது.

91 வது படிநிலையிலுள்ள மனிதனுக்கும் ஆண்டவருக்கும் இடையே 108 வரை கணக்கிட்டால் 18 படி நிலைகள் இருந்தாலும், அவைகளை இன்னும் தொகுத்தால் மூன்று நிலைகளாக அமையும்.

93 முதல் 99 வது படிநிலை வரையுள்ள ஏழு படிநிலைகளும் சேர்ந்து ஒரு தொகுப்பாக மாயா படிநிலைகளாக அமைகின்றன இந்த மாயா படிநிலைகள் ஒவ்வொன்றிலும் 64 கோடி ஆன்மாக்கள் வீதம் இருப்பதற்கு தக்க அளவிற்கு இடமுள்ளது. இப்படியாக இந்த மாயா படிநிலைகளில் 448 கோடி ஆன்மாக்கள் அமர முடியும். இந்த ஆன்மாக்கள் தெய்வநிலையை பெற்றவர்கள் என்பதால் வள்ளல்பெருமான் இவர்களை ஆடுறு சித்துக்கள் என்று அழைக்கிறார். மேலும் இந்த படிநிலைகளையே ஏழு மாயா திரைகளாக உருவகப்படுத்துகிறார்.

அடுத்ததாக 100 வது படிநிலை முதல் 104 வது படிநிலை வரை உள்ள ஆன்மாக்கள் யோக நிலையில் ஞானம் பெற்றவர்கள் என்பதாலும் ஞானத்திலேயே இருந்து லயித்து கொண்டு கால சுழற்சிக்கு உட்பட்டவர்கள் என்பதாலும் கூட்டுறு சித்திக்கள் என்று அழைக்கிறார்.

அடுத்ததாக 105 வது படிநிலை முதல் 108 வது படிநிலை வரை உள்ளவர்கள் காலத்தையும் கடந்து ஞானத்தையும் கடந்தவர்கள் என்பதால் இவர்களை அறிவுறு சித்திக்கள் என்று கூறுகிறார்கள்.

இந்த கூட்டுறு சித்திக்களும் அறிவுறு சித்திக்களும் சேர்ந்து கூட்டு எண்ணியாக 100 வது படிநிலையிலிருந்து 108 வரை படிநிலைவரை உள்ள அனைத்திற்கும் 64 கோடி ஆன்மாக்கள் அமர வசதியுண்டு. இப்படியாக மாயாநிலை ஆன்மாக்கள் 448 கோடியும் ஞானபடி நிலை ஆன்மாக்கள் 64 கோடியும் சேர்ந்து 512 கோடி ஆன்மாக்கள் மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள தெய்வ நிலையில் இருப்பார்கள். இதில் 92 வது படிநிலையிலுள்ள அடுத்த நிலைக்காக காத்திருக்கும் ஆன்மாக்கள் கணக்கிலடங்காது. சதுர்யுகத்தின் முதல் யுகமான கிருதயுகம் எனும் சத்யயுகத்தில் மனிதர்கள் எல்லாம் தர்ம வழியில் நடந்து இந்த 512 கோடி தெய்வ பதவிகளை தமது ஆயுள் முடிந்த பின் சென்று நிரப்புவார்கள்.

இந்த மாயா நிலை ஏழும் ஞான நிலையும் சேர்ந்து இருக்கும் நிலையில் அதுவே தேவ சபையாகும். தேவசபையானது புண்ணியாத்மாக்களால் முழுவதுமாக நிரப்பப்படும் போது பூரணமான கிருதயுகம் தோன்றி நடக்க ஆரம்பிக்கும். இந்த சபையில் மிகவும் சக்தி மிக்க ஆன்மாக்கள் வந்த அமர சக்தி குறைந்தவர்கள் கீழிறங்கி சென்று விடுவார்கள். எவ்வளவு ஆன்மாக்கள் வந்தாலும் 512 கோடிக்கு மேல் ஒருவர் இருந்தாலும் அவரின் ஆன்மா மனித நிலைக்கு இறங்கிவிடும். அதே சமயம் சக்தி மிக்க ஆன்மாக்கள் வரவில்லை என்றாலும் குறிப்பிட்ட அளவுக்கும் காலத்துக்கும் மேல் சக்தி குறைந்தவர்கள் கீழிறக்கப்பட்டு விடுவார்கள். இப்படியாக பூரண கிருதயுகம் முடியும் வரை தேவ சபையானது எப்போதும் நிரம்பியிருக்கும். அதே சமயம் 91 வது படிநிலையிலுள்ள மனிதர்கள் விரும்பும் பட்சத்தில் தேவசபையிலுள்ளவர்களை காணவும் இயலும்.

இந்த கிருத யுகத்தில் செயற்கரிய செயல்கள் செய்து தேவசபையை நிரப்பும் ஆன்மாக்களின் வரலாறுகள் அடுத்த வரும் யுகங்களின் புராணங்களாக பெருமைபடுத்தப்படும். பூரண கிருதயுகம் முடிவுக்கு வந்து திரேதாயுகம் ஆரம்பிக்கையில் தேவ சபையை நிரப்ப வருவோரின் எண்ணிக்கை குறைந்து சபையிலிருந்து சக்தியிழந்து இறங்குவோரின் எண்ணிக்கை அதிகமாகும். இந்த வித்தியாசம் படிப்படியாக உயர்ந்து ஒரு கால கட்டத்தில் தேவ சபையானது காலியாகிவிடும். அப்படி காலியாகும் காலத்தில் த்ரேதாயுகம்,துவாபரயுகம் முடிந்து பூரண கலியுகம் ஆரம்பித்து இருக்கும். அது முதல் பஞ்ச கிருத்தியங்களுக்கு பொறுப்பேற்ற சில ஆன்மாக்களும் அவைகளின் உதவிக்கான சில ஆன்மாக்கள் தவிர மற்ற ஆன்மாக்கள் அனைத்தும் மனித நிலைக்கு வந்து தமது பயணத்தை மனித பிறவியில் தமது சுதந்திரத்தை எப்படி பயன்படுத்துகிறார்களோ அதனடிப்படையில் அடுத்த கட்டத்தை அடைவார்கள். இப்படியாக கிருதயுகத்தில் மனிதர்களாக இருப்பவர்கள் தெய்வ நிலையடைவதும், கலியுகத்தில் தெய்வநிலை அடைந்தவர்கள் மனித நிலைக்கு இறங்குவதும் தொடர் சுழற்சியாக அமையும். கலியுகம் முடிந்து மீண்டும் கிருத யுகம் ஆரம்பிக்கும் கால கட்டத்தில் பஞ்ச கிருத்தியங்கள் பொறுப்பு ஏற்ற ஆன்மாக்களும் சக்தி இழந்து தமது ஆட்சியை ஆண்டவரிடம் ஒப்படைத்து விடுவார்கள்.

அது சமயத்தில் ஆண்டவர் ஒரு யுக புருஷனை தோற்றுவித்து அடுத்த நான்கு யுகங்களுக்கும் உரிய ஆன்மீக வழிமுறையை ஏற்படுத்தும் வாய்ப்பை அந்த யுக புருஷனுக்கு வழங்குவார்.அந்த யுக புருஷன் தோன்றி மீண்டும்தேவ சபை நிரம்புவதற்கான வழிவகையை மக்களிடையே தோற்றுவிப்பார். அவரின் வழிமுறையை அடிப்படையாக கொண்டு அடுத்த சதுர்யுகம் நடைபெற்று வரும். மேலும் சதுர்யுகத்தில் உள்ள ஒவ்வொரு யுகத்தையும் ஆரம்பிக்க ஒரு யுக புருஷனும் தோன்றுவார். அந்த யுக புருஷன் கிருதயுக புருஷனை அடிப்படையாக கொண்டே வழி நடத்துவார்.

இந்த வகையாக கடந்த சதுர்யுகத்தை விசுவாமித்திரர் எனும் அரசராயிருந்து முனிவரானவர் தோன்றி யுக புருஷனாக வழி நடத்தினார். அவர் ஏற்படுத்திய காயத்ரி மந்திரம் கடந்த 12,000 ஆண்டுகளாக தேவ சபையை நிரப்பவும் அருளாரசாட்சி செய்யவும் பயன்பட்டது. அவரை பின்பற்றி திரேதாயுகத்தை சூரியனும், துவாபரயுகத்தை யாக்ஞவல்ய முனிவரும், கலியுகத்தை துவாரகை மன்னன் கிருஷ்ணனும் யுக புருஷர்களாக இருந்து முறையே யோகம், கிரியை சரியை வழிபாட்டு நிலைகளை மக்களிடையே உருவாக்கினார்கள். இந்த அடிப்படையில் முடிந்த போனது கடந்து சதுர்யுகத்தின் தாக்கமும் இன்னும் 100 ஆண்டுகளில் முற்றிலுமாக முடிந்து போகும்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அவர்கள் அடுத்த சதுர்யுகத்திற்கான யுக புருஷரை தோற்றுவிப்பதற்காக கடந்த நூற்றாண்டில் பல பெரியோர்களை தோற்றுவித்து அவர்களில் நமது ஞானகுரு கருணைமிகு இராமலிங்கம் அவர்களை யுக புருஷ்ராக்கி அவருக்கு ஐந்தொழிலையும் கொடுத்து அடுத்த சதுர் யுகத்திற்கான வழி நடத்தும் மந்திரமாக மகா மந்திரத்தையும்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்ப்ருஞ்ஜோதி

வள்ளல்பெருமானிடம் ஒரு சிறப்பம்சம் யாதெனில் இதுவரை உருவான யுக புருஷ்ர்கள் அனைவரும் யோகத்தை அடிப்படயாக கொண்டு உருவானவர்கள். வள்ளல்பெருமான் மட்டுமே ஜீவகாருண்யத்தை அடிப்படயாக கொண்டு சுத்தமாதி மூன்று தேகங்களைப் பெற்று ஆன்மாவின் பயணத்தை பூர்த்தி செய்து காலத்திற்கு அப்பாற்பட்டு விளங்குபவர். மற்றவர்கள் எல்லாம் காலத்திற்கு உட்பட்டு உருவானவர்கள். அதனடிப்படையில் வள்ளல் பெருமான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் மூவரும் தேவரும் மூத்தரும் சித்தரும் யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை என்று பாடியுள்ளார்.

மேலும் சதுர்யுக மாற்றங்கள் அனைத்தும் அவ்வப்போது ஏற்பட்ட சிறு தெய்வங்களின் வேண்டுகோளுக்கு இணங்க அழிவை கொடுத்தே ஆண்டவர் ஏற்படுத்தினார். உதராணமாக கடந்த கலியுகமானது ( சிந்து சமவெளி நாகரீகம் என்ற பெயரால் சரித்திர ஆசிரியர்களால் குறிக்கப்படுவது) இயற்கையின் சீற்றத்தால் ஆறுகள் திசை மாறி அழித்தும் இயற்கை உற்பாதங்களாலும், வேறு பல காரணங்களாலும் முற்றிலும் அழிந்து ரிக்வேத கால நாகரீகம் எனும் கிருதயுகம் தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் நமது வள்ளல் பெருமான் அவர்கள் பெரும் பாதிப்புகள் இன்றி மறுமலர்ச்சி மூலம் யுகமாற்றத்தை ஏற்படுத்தி ஞானசித்தர் காலத்தை உருவாக்கலாம் என ஆண்டவரிடம் விண்ணப்பித்துள்ளார். மேலும் மிக குறுகிய காலத்தால் ஞானிகளை உருவாக்கி யுக மாற்றத்தை ஏற்படுத்தி விட ஞான தேகத்திலிருந்து கொண்டு செயல்பட்டு வருகிறார்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை சுத்த சன்மார்க்க நெறிமுறையில் ஜீவகாருண்யத்துடன் வணங்கும் அனைவருக்கும் அருள்சக்தியை வழங்கி ஞான சித்தர்களாக மாற்றி வருகிறார். இதன் மூலம் சத்ய யுகத்திற்கு மனிதனுக்கு இருக்க வேண்டிய குண நலன்கள் அனைத்தும் சன்மார்க்கிகளின் கடமையாக வெளிப்படுத்தியுள்ளார். எனவே அடுத்த சதுர்யுகத்தை வழி நடத்த போவது அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரமும், சுத்த சன்மார்க்க நெறிமுறையை பின்பற்றுபவர்களும் என்றால் மிகையல்ல. மேலும் முற்றிலுமாக அவரது பேருபதேச கொள்கைகளையும், சமயம் சாராத நிலையயும், ஜீவகாருண்ய ஒழுக்கத்தையும், சாதி சமயற்ற எண்ணத்தையும் முழுமையாக கடைபிடித்தால் மகா மந்திரத்தை அடிப்படையாக கொண்டு எல்லா வகையான தெய்வ நிலை சக்திகளையும், இதுவரை யாரும் எண்ணி பார்த்திராத அளவிற்கு வள்ளல் பெருமான் வெளிப்படச் செய்கிறார்.

மேலும் கிருத யுகம் என்பது தர்மமும் நியாயமும் மனிதனாயிருந்தாலும் அல்லது வேறுஎந்த ஜீவராசியானாலும் ஆண்டவரை வணங்கினால் உடனுக்குடன் பயன் கிடைக்கும் காலமாகும். மேலும் எந்த கால க்ட்டத்திலும் தர்மம் இருக்கும் அளவிற்கு அதர்மமும் இருக்கும். கிருதயுகத்தில் மட்டும் உடனுக்குடனாக தர்மம் ஜெயித்து இறைசக்தி நிரூபிக்கப்படும்.எனவே இந்த வரக்கூடிய காலக்கட்டத்தில் இறை வழிபாட்டின் முறையானது ஞானநிலை வழிபாடாக அமையும் காலம் என்பது கிருதயுகமாய் அமையும். சன்மார்க்க நெறிமுறைகள் வாழ்க்கை வழிமுறைகளாக அமையும். ஆன்மீகத்தை வழி நடத்தும் மூல மந்திரமாக அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் அமையும் ஒழுக்கம் என்பது ஜீவகாருண்யமாக இருக்கும். சத்விசாரமே இறைவழிபாடாக இருக்கும். பரோபகாரமே இறைவனுக்கு அர்ப்பணமாகும். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்ற எண்ணமே மனிதனை படிநிலை உயர்த்தும் தவமாக அமையும்.

இந்த சூழ்நிலையில் மகா மந்திரத்தின் மகிமையை வெளிப்படுத்துவது எவ்வாறு என்றும் அதனுடைய தன்மையையும் நாம் அடுத்த அத்தியாயமன மகா மந்திரமும் தாரக மந்திரமும் என்ற தலைப்பில் ஆய்வு செய்வோம்.

(தொடரும்)


ஜோதிமைந்தன் சோ. பழநி

2 thoughts on “11.கீர்த்தி நிறைந்த கிருதயுகம்”

Comments are closed.