மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி - 16 (சன்மார்க்க தானம்)

சத்யயுகத்தில் சன்மார்க்கத்தின் பணி(தொடர்ச்சி)

சன்மார்க்க நெறிமுறையில் உள்ளவர்கள் அனைவரும் என்னதான் முயற்சித்தாலும் விவரம் தெரிந்திருந்தாலும் சமயங்கடந்து வருவதில்லை. எனவெ மனிதனின் நோக்கமானது 108வது படிநிலையாக இருக்க வேண்டுமென்றாலும் மனிதர்கள் தம்மை அதற்கு தயார் செய்து கொள்வதில்லை.அவ்வாறு முயற்சி செய்திருந்தால் வள்ளல் பெருமான் போல் ஞானதேகம் பெற்றவர்கள் இந்த நூற்று இருபத்தைந்து ஆண்டுகளில் பலர் உருவாகி அவரது நிலைக்கும் கொள்கைக்கும் சாட்சியமாக இருந்திருப்பார்கள். பெரும்பாலான மனிதர்கள் வள்ளலார் யோகநிலை காரணமாகவே உயர்நிலைப்பெற்றார் என்று கருதி காலவிரயம் செய்கிறார்கள். வள்ளல் பெருமான் பேருபதேசத்தில் தெளிவாக கூறியிருந்தும் அனைவரும் தன்னுள்ளே இறைவனை காண முயற்சிக்கின்றர்களே தவிர பிற உயிர்களில் இறைவனைக் காணும் ஞானத்தில் திளைக்கும் நிலைக்கு முற்படுவதில்லை. மேலும் ஞானகுரு தமது அருட்பா பாடலில் புற இனத்தார்க்கு பசி தவிர்த்தல் மட்டும் செய்க என்றதால் சன்மார்க்கத்திற்கு பசி தவிர்த்தல் மட்டும் போதுமானது என்று கருதிவிடுகிறார்கள்.அகஇனத்தார்க்கு அருளியல் செய்க என்பதை கருதுவதில்லை.

பசிதவிர்த்தல் எனும் அன்னதானம் என்பது பனிரெண்டு வயதுக்குட்பட்ட ஆதரவற்ற சிறுவர்களுக்கொ எழுபத்திரண்டு வயதுக்கு மேற்பட்ட வயோதிகர்களுக்கோ கை,கால் அங்கஹீனமான மனிதர்களுக்கோ சொந்த உழைப்பின் மூலமாக செய்யும் அன்னதானமெ சிறந்த அன்னதானமாக அமையும். இந்து தர்ம நம்பிக்கைபடி அன்னதானம் செய்வோரின் ஆன்மாவையும் அவர்தம் முன்னோர்களையும் வைதரணி ஆற்றை கடக்க உதவும். சனாதன தர்ம நம்பிக்கைப்படி ஒவ்வொரு ஆன்மாவும் இறந்தபின் நூறு யோசனை அகலமுள்ள இந்த வைதரணி ஆற்றை கடந்தே தீரவேண்டும். அப்படி கடக்க வேண்டுமானால் இறந்தவர் வாழும்போதோ அல்லது இறந்தவர்களின் வாரிசுகளோ கோதானம் செய்ய வேண்டும். கோதானம் என்பது ஜீவகாருண்ய ஒழுக்கத்திலுள்ள பரபிரம்மத்தை உணர்ந்த ஒழுக்க சீலனான மனிதனுக்கு கறவை பசுவை கன்றுடன் தானம் செய்ய வேண்டும். தானம் பெற்றவன் அந்த பசுவின் பாலில் பத்தில் ஒரு பாகம் ஏதேனும் ஒரு ஏழைக்குழந்தைக்கு தினசரி பால்தானமாக வழங்க வேண்டும். மேலும் அந்த பசுவையோ அதன் மூலம் பெற்ப்பட்ட கன்றுகளையோ பணத்திற்கு விற்ககூடாது. அந்தபசுவையும் கன்றுகளையும் மாமிசத்திற்காக கொன்றுவிட நேர்முகமாகவோ மறைமுகமாகவோ ஏற்பாடு செய்யக்கூடாது. அதற்கான உத்தரவாதத்தை தானம் பெறுபவரிடம் பசும்பாலை சாட்சியம் வைத்து சத்தியம் பெற்ற பின்னரே தானம் வழங்க வேண்டும். ஆனால் தற்போது ஈமக்கிரியைகள் செய்பவர்கள் வெள்ளி உலோகத்தாலான பசுவின் பதுமையை கோதானம் எனக்கொடுத்து பரிகாரம் தேடுகின்றனர். இந்தநிலை தானம் பெருபவர்க்கு வேண்டுமானால் பொருளாதாரத்தை உயர்த்தலாம்.தானம் தருபவர்க்கோ அவரது முன்னோர்களுக்கோ ஆன்மரீதியாக எந்த பலனும் கிடைக்காது. எழுபத்திரண்டு வயதைக் கடந்த எழுபத்திரண்டு பேருக்கு சொந்த செலவில் அன்னதானம் செய்தால் கோதானம் செய்த புண்ணிய பலனை அடையலாம்.

எல்லா மனிதர்களும் இறந்தபின் வைதரணி ஆற்றை கடக்க வேண்டியநிலை இருந்தால் நமது ஆய்வுப்படி 92வது படிநிலையிலுள்ள கருப்பு உலக ஆன்மாக்களுக்கே அந்த பாதிப்புக்கள் ஏற்படும். 93வது படிநிலையிலுள்ள நீல உலகில் சஞ்சரிக்கும் ஆன்மாக்கள் தங்களது ஆன்மவேகத்தால் சுலபமாக கடந்து விடுவார்கள் என்பதில் ஐயமில்லை. ஆன்மவேகம் பற்றி தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் விவரிப்போம். எனவே சன்மார்க்கிகள் ஒவ்வொன்றையும் ஆய்வு செய்து அருளியல் செய்ய வேண்டும். இது போன்ற காரணங்களால் தேவசபையானது எல்லா படிநிலைகளிலும் அவரவர் பக்குவ நிலைக்கு ஏற்ப நிரம்பும்.

இதில் சன்மார்க்கத்தின் பணி யாதெனில் அனைவரையும் 108வது படிநிலைக்கு உயர்த்த முயற்சிப்பது ஆகும். அந்த முயற்சியில் அவரவர் பக்குவம், விடாமுயற்சி,சூழ்நிலை அடிப்படையாகக் கொண்டு ஆண்டவர் அளிக்கும் நிலையை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை ஏற்படுத்துவது. வள்ளல் பெருமான் இது முதல் யாவர் உடலிலும் புகுந்து கொள்வோம் என்று கூறியபின் அதை சத்தியமாக நம்பி அவரவர் தம்மை வள்ளலாரின் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு மற்றவர்களிடம் பழகி தம்மை வள்ளல் பெருமானுக்கு கருவியாக்கி கொள்வதுதான் ஒவ்வொரு சன்மார்க்கிகளின் கடமையாகும். வள்ளல்பெருமானின் உணர்வுகளைகொண்டுஅவருக்கு ஆட்பட வேண்டுமாயின் பேருபதேசத்தில் குறிப்பிட்டவாறு அண்டத்தையும் பிண்டத்தையும் பற்றி சத்விசாரம் செய்து கீழ்கண்ட மாற்ற முடியாத உண்மைகளை மனதில் ஆணித்தரமாக பதிக்க வேண்டும்.

வள்ளல் பெருமான் அவர்கள் ஆன்மீகவாதிகளும் நாத்திகவாதிகளும் இருதரப்பினரும் ஏற்று கொள்ளும் வகையில் திருவருட்பாவை உருவாக்கி தனது முழுமையான ஈடுபாடு எண்ண எழுச்சிகளினால் இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பை பூர்த்தி செய்தவர். ஞானசித்தர் காலத்தை உருவாக்கும் பொறுப்பை அவர் ஏற்று கொண்டதால் அவரின் எண்ண ஓட்டங்களை நாம் புரிந்துகொண்டால்தான் அவரின் உணர்வு அலைகளை கிரகிக்க முடியும். கடந்த நூற்றாண்டில் வள்ளல்பெருமான் வெளியிட்ட கருத்துக்கள் அனைத்தும் படிப்படியாக விஞ்ஞானிகளால் ஏற்றுகொள்ளப்பட்டு மெய்பிக்கபட்டுவருகின்றது.

பெருமான் அவர்கள் மனிதன் ஒருநாளைக்கு ஒருமணிநேரம் தூங்கப்பழகினால் அதற்கேற்ற பக்குவத்தை உடலில் உருவாக்கி கொண்டால் ஆயிரம் ஆண்டுகள் வாழலாம் என்றார்.விஞ்ஞானிகள் மனிதனின் மரபணுக்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தினால் ஆயித்திருநூறு ஆண்டுகள் வாழலாம் எனக்கூறியுள்ளார்கள். விஞ்ஞானிகள் நமது பால்வெளி அண்டத்தில் ஒளியின் வேகமான ஒரு நொடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர் வேகத்தை விட அதிகமான வேகம் செல்லக்கூடிய பொருளொ,அலையொ,சக்தியொ எதுவுமில்லை.அப்படி ஏதேனும் செல்லுமென்றால்,அது நீலநிற ஒளிக்கீற்றைஏற்படுத்தும்,”செரங்கொவ்” விளைவை உருவாக்கும் என்கிறார்கள். வள்ளல் பெருமான் அவர்கள் அத்தகைய தன்மையுடையது ஆன்மா மட்டுமெ என்று உணர்த்தினார். ஆன்மா மூன்று லட்சம் கிலோ மீட்டர் வேகத்தை விட அதிக வேகம் செல்லும்போது 93வது படி நிலையான நீல உலகில் சஞ்சரிக்கின்றது என்று உணர்த்தினார். ஆன்மாவின் தன்மையை ஆய்வு செய்ய வேண்டுமாயின் பிரபஞ்சத்தின் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும்.(இந்த இடத்தில் மெய்ஞ்ஞானத்தை அடையும் வழி -பகுதி-1 ஐ மீண்டும் படிக்கவும்). அன்பின் சக்தியை மனதில் கொண்டு அருட்பெருஞ்ஜோதியரை வணங்கினால் அருளை பெறலாம்.அன்பின் சக்தியை நிரூபிக்கும் வகையில் ஆண்டவரிடம் வேண்டி அருளைப் பெற்று வள்ளல் பெருமான் துணைக்கொண்டு அருளியல் நன்மைகளை மற்றவர்களுக்கு வழங்குவது தவறில்லை. அதனால் இறைநம்பிக்கை பெருகும் அருள்சக்தியை பயன் படுத்தினால் செலவழிந்துவிடும் என்று பயம் கொள்ளுதல் கூடாது.அருள்சக்தியை செலவிடுவதும் தொடர்ந்து ஈட்டுவதும்தான்சன்மார்க்கிகளின் கடமையாகும்.

உலகினில் உயிர்களுக் குறுமிடையூறெலாம்
விலக நீயடைந்து விலக்குக மகிழ்க

சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக
உத்தமனாகுகஒங்குக என்றனை

என்று அகவலில் கூறிய்ள்ளபடி சன்மார்க்கத்தின் பணி யாதெனில், எல்ல உயிர்களும் இன்புற்று வாழ சன்மார்க்கிகளை பயன் படுத்தி பூரணமாக ஞான சித்தர் காலம் எனும் சத்ய யுகத்தை உருவாக்குவதேயாகும். இதன்மூலமாக வள்ளல் பெருமான் தெய்வநிலையில் வைத்துள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் இடம் பெற்று நேரடியாக 105 வது படிநிலையை அடையலாம். மேலும் மனிதநிலையிலேயே சுத்தமாதி மூன்று தேகங்களை பெற ஆண்டவரின் தனிப் பெருங்கருணையால் முயற்சிக்கலாம். இதற்கு நாம் செய்ய வேண்டுவது எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதும் சத்விசாரம் செய்து மற்றவர்கள் படிநிலை உயர கருவியாக இருப்பதும்,தம்மை வள்ளல் பெருமானின் உணர்வலைகளுக்கு கருவியாக்கிகொள்வதுமாகும். இந்த அத்தியாயத்தில் ஒட்டு மொத்தமாக சன்மார்க்கத்தின் பணியை கோடிட்டு காட்டினோம்.இதிலுள்ள கருத்துக்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் குறையொ அல்லது பாராட்டோ செலுத்த எழுதப்பட்டதல்ல. ஒவ்வொரு மனிதர்களும் பொதுவாக கடைபிடிக்க வேண்டிய விஷயங்களையும் ஒவ்வொரு சன்மார்க்கிகளும் பொதுவாக மனதில் நிறுத்துவதற்கு தேவையான விஷயங்களையும் தெளிவு படுத்தினோம். அடுத்ததாக ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்திலிருந்துக் கொண்டு விலகாமல் சன்மார்க்க நிலையில் இருப்பது பற்றிய விவரங்களை “சன்மார்க்கத்தில் சமுசாரிகளின் நிலை” என்ற தலைப்பில் ஆய்வு செய்வோம்.

(தொடரும்)

ஜோதிமைந்தன் சோ. பழநி