மெய் ஞானத்தை அடையும் வழி பகுதி - 29 (சன்மார்க்க திருமணம்-2)
சன்மார்க்க வழிபாட்டு முறைகள் ஞானத்தில் கிரியை
(தொடர்ச்சி)
சன்மார்க்க திருமணம்
தொடர்ச்சி)
திருமண நாள் காலையில் மணமக்கள் தயாராகி வருவதற்குள்ளாக ஐந்து சன்மார்க்க சங்கத்தார் சேர்ந்து அகவல் பாராயணம் செய்து முடிக்கவும். மணமக்கள் சேர்ந்தும் அகவல் பாராயணம் செய்யலாம். அகவல் முடித்தபின் மணமக்கள் மணமேடையில் அமர்ந்து அவரவர் குடும்பத்தாரிடம் திருமணம் செய்வதற்கான ஆசி பெறவும். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் வள்ளல் பெருமானுக்கும் நேரெதிரில் ஏழு திரைகளுக்கான படிநிலை கோலமிட்டு அகண்ட தீபமேற்றி மணமக்களுடன் சேர்ந்து மணமக்களின் பெற்றோர்களும் சேர்ந்து ஆருபேரும் அமர்ந்து திருமணம் நடத்திவைக்கும் சங்கத்தாரும் அமர்ந்து மேற்குதிக்கில் வள்ளல்பெருமான் அமர்ந்திருப்பதாக கருதி எட்டு திக்கிலும் இருந்து தாரக மந்திரம் மஹாமந்திரங்களால் திரை விலக்கி அருட்பெருவெளி பிரவேசத்தை ஞானத்தில் கிரியை மூலம் நடத்த வேண்டியது.
( இதன் விவரம் தனியே வழங்கப்பட்டுள்ளது.)
இதன் மூலமாக அருட்பெருவெளி பிரவேசம் முடிந்தபின் மஹாமந்திரம் அனைவரும் கூற மணமகன் மணமகள் கழுத்தில் மங்கல நாண் அணிவிக்கவும். பின்னர் மனமக்கள் இருவரும் கீழ்கண்ட உறுதிமொழி சபையோருக்கு அளிக்கவும்.
எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளின் தனிபெருங்கருணை சாட்சியாகவும் எங்கள் ஞானகுரு கருணைமிகு இராமலிங்கம் சாட்சியாகவும் சுத்த சன்மார்க்கிகளான – —– —– ஆகிய நாங்கள் —- வருடம், —– மாதம்,—-நட்சத்திரம், ——-பட்சம்,—— திதி,——-கிழமை,——லக்கினம் கொண்ட சுபவேளையில் திருமணம் செய்து கொண்டதின் அடிப்படையில் இது தொடங்கி எக்காலத்தும் ஞானவாழ்க்கை நடத்தி எங்களின் வாழ்க்கை கடமைகளை உறுதியுடன் தரும நெறிமுறைப்படியும் சுத்த சன்மார்க்கத்தின் அடிப்படையிலும் செய்து வாழ்வோம் என உறுதியளிக்கிறோம். இது சத்தியம்! சத்தியம் !! சத்தியம் !!!.
மனமகளின் பெற்றோர் மணமகனின் பெற்றோருடன் சேர்ந்த கைத்தலத்தில் பெண்ணின் கையை ஒப்புக்கொடுக்க வேண்டியது. பிறகு மணமக்கள் எழுந்து ஞானப்பிரவேசம் செய்ய கீழ்கண்ட உறுதி மொழிகளையும் விண்ணப்பத்தையும் ஆண்டவரிடம் அளித்து ஏழுமாயாதிரைகளை விலக்கி ஞானபடிநிலையில் செல்லவும்.
கருப்புத்திரை: எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே இது தொடங்கி எக்காலத்தும் —- —- ஆகிய நாங்கள் இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்தி அகங்காரத்தை கைவிட்டு எல்லாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் செயல் என்பதை மனதில் கொண்டு எங்களது ஜீவசுதந்திரத்தை தங்கள் வசம் ஒப்பு கொடுப்பதின் மூலம் எங்கள் முன் உள்ள கருப்புத்திரையை விலக்கி முதல் அடி எடுத்து வைக்க அனுமதிப்பதின் மூலம் முதலாம் மாயா தெய்வ படிநிலையை கடக்க அருளும்படி வேண்டுகிறோம்.
நீலத்திரை: இந்த இப்பிறவியில் எங்களை தம்பதியராக இணைத்து வாழ்க்கையை துவக்க வைத்ததின் மூலம் இப்பிறவியில் உள்ளவரை தங்கள் தனிபெருங்கருணைப்படி பரஸ்பரம் எங்கள் கடமைகளை செய்து தங்களின் திருவிளையாடலை சிறப்பாக நடத்தி முடிக்க எங்கள் தேக சுதந்திரத்தை தங்களிடம் ஒப்புக்கொடுப்பதின் மூலம் எங்கள் முன் உள்ள நீலத்திரையை விலக்கி இரண்டாவது அடி எடுத்து வைக்க அனுமதிப்பதின் மூலம் இரண்டாவது மாயா தெய்வ படி நிலையை கடக்க அருளும்படி வேண்டுகிறோம்.
பச்சைத்திரை: எங்கள் ஞானகுரு கருணைமிகு இராமலிங்கம் சாட்சியாக நாங்கள் இருவரும் இப்பிறவி முழுவதும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டு, இருவரும் கற்பு நெறி மாறாது வாழ்ந்து மற்றைய மனிதர்களை சகோதர,சகோதரி பாவத்தின் மூலம் பழகி எங்கள் போக சுதந்திரத்தை தங்களிடம் ஒப்புக் கொடுத்து எங்கள் முன் உள்ள பச்சைத்திரையை விலக்கி மூன்றாவது அடியை எடுத்து வைக்க அனுமதிப்பதின் மூலம், மூன்றாவது மாயாதெய்வ படிநிலையை கடக்க அருளும்படி வேண்டுகிறோம்.
சிவப்புத் திரை: எங்கள் அறிவை சுத்த நிலையில் வைத்து தத்துவங்களை கடந்து சத்துவத்தில் வாழ்க்கை அமைய வேண்டி தங்களின் தனிப்பெருங்கருணையில் எங்கள் அறிவு சுதந்திரத்தை ஒப்புக் கொடுப்பதின் மூலம் எங்கள் முன் உள்ள சிவப்புத் திரையை விலக்கி நான்காவது அடியை எடுத்துவைக்க அனுமதிப்பதின் மூலம் நான்காவது மாயா தெய்வ படிநிலையை கடக்க அருளும்படி வேண்டுகிறோம்.
பொன்மஞ்சள் திரை: தங்களின் தனிப்பெருங்கருணையால் எங்களுக்கு ஏற்படும் யோக சக்தியை தங்களிடமே ஒப்புக் கொடுத்து யோக சுதந்திரத்தை அர்ப்பணிப்பதின் மூலம் பொன் மஞ்சள் திரையை விலக்கி ஐந்தாவது அடியை எடுத்து வைக்க அனுமதிப்பதின் மூலம் ஐந்தாவது மாயா தெய்வ படிநிலையை கடக்க அருளும்படி வேண்டுகிறோம்.
வெண்மைத் திரை: எல்லா சித்திகளும் கைவரப்பெற்று தங்களின் நேரடி தரிசனத்தை தரவல்ல எங்கள் சித்சத்தி அனைத்தையும் தங்களிடம் ஒப்புக்கொடுப்பதின் மூலம் வெண்மைத் திரையை விலக்கி ஆறாவது அடியை எடுத்து வைக்க அனுமதிப்பதின் மூலம் ஆறாவது மாயா தெய்வ படிநிலையை கடக்க அருளும்படி வேண்டுகிறோம்.
கலப்புத் திரை: ஏழு படிநிலைகளில் உள்ள எல்லா தெய்வங்களையும் எல்லா சித்திகளையும் எல்லா மாயா நிலைகளையும் கடந்து வந்ததின் விளைவாக ஏற்பட்ட அருளகங்காரத்தையும் தங்களிடம் ஒப்புக் கொடுத்து இருவரும் பரஸ்பரம் ஒன்று சேர்ந்து கலப்புத் திரையை விலக்கி ஏழாவது அடியையும் எடுத்து வைக்க அனுமதிப்பதின் மூலம் ஏழு அடிகளால் ஏழு மாயா தெய்வ படி நிலைகளை கடந்து ஞானபடிநிலையில் பிரவேசிக்க அருளும்படி வேண்டுகிறோம்.
ஒவ்வொரு திரைக்கான உறுதிமொழிக்கும் மணமக்கள் முன்னிலையில் உறுதிமொழிக்கான திரையை பிடித்து உறுதிமொழியை சங்கத்தார் கூற, மணமக்களை கூறும்படி செய்து, மணமக்களால் திரைக்கு கற்பூர ஆராதனை செய்து, திரையை விலக்கி ஒருஅடி நடந்து ஒருதிசையை கடக்கவும். இப்படியாக ஏழுமாயாநிலை திரைகளையும் விலக்கி வடமேற்கிலிருந்து புறப்பட்டு பிரதட்சிணமாக ஏழு திக்கை கடந்து எட்டாவது ஞானநிலைக்கு மேற்கு திக்கில் உள்ள ஆண்டவர் முன்னிலையில் வந்து அவரெதிரே மணமகன், மணமகளுக்கு மெட்டி அணிவிக்கவும். கீழ் கண்ட உறுதி மொழி எடுக்கவும்.
எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக்கடவுளே தங்களின் தனிப்பெருங்கருணை சாட்சியாகவும் எங்கள் ஞானகுரு கருணைமிகு இராமலிங்கம் சாட்சியாகவும் இந்த ஞானநிலையில் நாங்கள் இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்றூம் திருவள்ளுவரும் வாசுகியும் போன்றும் எங்கள் ஞானகுரு கருணைமிகு இராமலிங்கம் அவர்களின் பெற்றோர்களான இராமைய்யா சின்னம்மை போன்றும் ஞான வாழ்க்கை வாழ்ந்து, நூற்றியெட்டு படிநிலைகளிலுள்ள எல்லா ஆன்மாக்களும் நன்மையடைய பிரார்த்திக்கும் நன்மக்களை மனித சமுதாயத்திற்கு அளித்து நல்வாழ்க்கை நடத்தி வருவோம். என்று எங்கள் பெற்றோர், உற்றார், உறவினர், பெரியோர், சங்கத்தார் முன்னிலையில் உறுதியளிக்கிறோம். இது சத்தியம் ! சத்தியம் !! சத்தியம் !!!. அதன் பொருட்டு எல்லாமாகிய தனிபெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்,வந்தனம், வந்தனம். பிறகு மணமேடையில் அமர்ந்து வாழ்த்தும், ஆசியும் பெற மணமக்களுக்கும், அகண்டத்திற்கும் முன்பாக ஒருதட்டில் கற்பூரமும், ஒரு தட்டில் அட்சதையும், ஒரு தட்டில் கற்கண்டும் வைக்க வேண்டும். ஆசியளிக்கும் சபையோர் அருகாமையில் வந்து கற்பூரத்தை அகண்டத்தில் இட்டு, மணமக்களுக்காக ஆண்டவரிடம் பிரார்த்தித்து, அட்சதை கொண்டு மணமக்களை வாழ்த்தி, மனமகிழ்வுக்காக கற்கண்டு எடுத்துக் கொள்ள வேண்டியது.
திருமணத்தின்போது மாங்கல்யம் அணியும்போது சபையோர்கள் அட்சதை போட்டு ஆசியளிக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. அத்துடன் சபையோர்கள் அவர்கள் அமர்ந்த இடத்திலிருந்தே அட்சதையை வீசி எறிந்து ஆசி வழங்கப்படுகிறது. இது முற்றிலும் தவறானது. திருமணம் தாலி அணிவதுடன் பூர்த்தியாவதில்லை. தாலியணிந்து மணமக்கள் இருவரும் குறைந்த பட்சம் ஏழு அடியாவது இணைந்து வாழ்க்கையில் நடந்தால்தான் திருமணம் பூர்த்தி ஆனதாக முன்னோர்கள் கூறுகிறார்கள். அதை நாம் அப்படியே ஏற்றுக் கொள்வோம். அதனடிப்படையில் ஞானப்பிரவேசம் முடிந்தால் இந்த திருமணம் முறைப்படி முழுமையாக முடிந்து வாழ்க்கை ஆரம்பித்து விட்டதாக கருதி சபையோர்கள் அருகில் வந்து ஒவ்வொருவராக ஆசி கூறி செல்லலாம்.
தற்கால வழக்கப்படி மணமக்களுக்கு அன்பளிப்பு வழங்க அருகாமையில் ஒவ்வொருவராக சென்றே ஆகவேண்டும். அச்சமயம் இந்த ஆசிவழங்கும் முறையை செயல் படுத்தி கொள்க. இதனால் சம்பிரதாயமும் முழுமையான ஆசியும் நிறைவடையும் என அறிக. பெற்றோர்,உற்றார், உறவினர், பெரியோர் அனைவரிடமும் அட்சதை மூலம் ஆசி பெறவும். சன்மார்க்கிகள் பெரியோர்களிடம் மண்டியிட்டு ஆசி பெறுதல் போதுமானது. சுத்த சன்மார்க்கத்தில் சாஷ்ட்டாங்க வணக்கம் அவசியமில்லை. ஒவ்வொரு சன்மார்க்கியின் சிரசிலும் இறைவன் திரை விலகிய நிலையில் இறைவன் இருப்பதால், இறைவன் 21 அங்குலத்திற்கு கீழாக பூமியை நோக்கி இறங்கக் கூடாது என்பதாலும், சாஷ்ட்டாங்க வணக்கத்தில் தலை தரையில் படுவதாலும் மண்டியிட்டு ஆசிபெறுதலே போதுமானது.
குடும்பத் தாலி தனியாக அணியும் பழக்கமுள்ளவர்கள் மீண்டும் மாற்றுடை அணிந்து உணவு முடித்து வந்து ஆண்டவர் மற்றும் வள்ளல் பெருமான் முன்னிலையில் தாலியணிந்து ஆராதனை முடிக்கவும். அந்தப் பழக்கம் இல்லாதவர்கள் ஆசி பெறவும். அது சமயம் தாய் வீட்டு சீதனப் பொருட்களூடன் உறவினர்கள் கீழ்க்கண்ட வகையில் ஆசி வழங்க வேண்டியது.
எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளின் தனிப்பெருங்கருணை சாட்சியாகவும் ஞானகுரு கருணைமிகு இராமலிங்கம் சாட்சியாகவும் பரஸ்பரம் இரு வீட்டாரும் இந்த மணமக்களை இரண்டு குடும்பத்தாரின் அன்புக்குரியவர்களாகவும், இரண்டு குடும்பத்தாரின் கௌரவம், சந்ததி விருத்தி, அருள்சக்தி, பொருள் சக்தி ஆகியவைகளுக்கு உரிமையுடையவர்களாகவும் கருதி அவர்களிடம் குடும்ப பொறுப்பை ஒப்படைக்கிறோம் என்பதுடன் அவர்கள் எல்லா வளமும் பெற்று வாழ அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருட்பெருங்கருணையை பிரார்த்திக்கிறோம். என்று கூறி ஆசியளித்தபின் அட்டகம், ஜோதிப்பாடல் பாடி திருமண விழாவை முடித்து வைக்கவும்.
(தொடரும்)
ஜோதிமைந்தன் சோ. பழநி
