வாழ்கின்ற வள்ளலார் - 3

1995 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் யாம் எமது குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் சேர்ந்த 20 பேர் கொண்ட குழுவாக வள்ளல் பெருமானின் அருட் கட்டளைப் படி வடலூர் மேட்டுக்குப்பம் சித்திவளாக திருமாளிகையில் பத்து நாட்கள் தங்கியிருந்தோம். அது சமயம் வள்ளல் பெருமான் நம்முடன் வாழ்கின்றார் என்பதை நிரூபிக்கும்வகையில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தினார். இரவு பகல் பாராமல் அகவல் படிப்பதும், மந்திர ஜபம் செய்வதுமாக அவரவர் பக்குவத்திற்கு ஏற்ப வழிபாடு செய்துக்கொண்டிருந்தோம். அதுசமயம் ஒருநாள் குளிப்பதற்காக அனைவரும் தீஞ்சுவை நீரோடை சென்றோம். யாம் குளித்துவிட்டு மேலே படிக்கட்டில் உடை மாற்றும் பொருட்டு நின்று கொண்டிருந்தோம்.

எமது மகன் கார்த்திகேயன் (அது சமயம் அவன் வயது 12) படிக்கட்டில் குளித்துக்கொண்டிருந்தவன் தவறி நீரில் விழுந்து விட்டான். அவன் அருகில் குளித்துக் கொண்டிருந்த எமது மைத்துனர் குமார் அவர்கள் சிறுவனை காப்பாற்ற முயற்சித்து அவரும் நீரில் விழுந்து விட்டார். அவர்கள் இருவரையும் காப்பாற்ற முயற்சித்து மைத்துனரின் துணைவியார் அவர்களும் நீரில் விழுந்து விட்டார். அதுசமயம் நீரோடையிலும் தண்ணீர் நிரம்பியிருந்தது. யாம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மூவரும் நீரில் ஒரு நொடிப்பொழுதில் மூழ்கிப்போனார்கள். மூவருக்கும் நீச்சல் தெரியாது. அங்கிருந்தவர்களில் எமக்கு மட்டுமே நீச்சல் தெரியும். உடனே யாமும் நீரில் இறங்கினோம். நீச்சல் தெரிந்தவர்களுக்கே உள்ள பாதுகாப்பு உணர்வுடன் அவர்கள் மூழ்கிய இடத்தில் தேட முயற்சித்தோம். மூவரையும் எப்படி காப்பாற்றுவது என்று ஒரு நொடிப்பொழுது திகைத்து விட்டோம் நீரில் மூழ்கி விட்ட நிலையில் அவர்கள் அருகில் சென்றால் அனிச்சையாக எம்மையும் சேர்த்து நீரில் மூழ்கடித்து விடுவார்கள். யாரும் இருக்குமிடமும் தெரியவில்லை. வள்ளல் பெருமானே என்னை கைவிட்டு விடாதீர்கள் என மனதில் நினைத்தோம்

அது சமயம் என் மகன் திடீரென்று நீரிலிருந்து தலைமட்டும் மேலே வந்து “அருட்பெருஞ்ஜோதி” என்று அபயக்குரல் எழுப்பிவிட்டு மூழ்கிப்போனான். உடனே யாம் அவன் இருக்குமிடம் தெரியவே பாய்ந்து சென்று கரையை நோக்கி அவனை தள்ளிவிட்டோம். அவன் உடல் மற்ற இருவர் மீதும்பட அவர்களும் படிக்கட்டில் வந்து சேர்ந்தார்கள் ஒரு நொடிப்பொழுதில் அனைத்தும் நடந்து முடிந்தது.

ஒரு நொடிப்பொழுதில் எங்கள் வாழ்வில் நடக்க இருந்த மிகப்பெரிய ஆபத்தை எண்ணி அனைவரும் கதி கலங்கிவிட்டோம். அனைவரும் சித்திவளாக திருமாளிகை சென்ரு திருக்கதவம் முன்பாக அமர்ந்து, “வள்ளல் பெருமானை எங்களுக்கு ஏன் எங்களுக்கு சோதனையும் வேதனையும் ஏற்பட்டது என்று வேண்டினோம். வள்ளல்பெருமான் அவர்கள் ” தாங்கள் தங்கள் குழுவினருடன் மிகுந்த ஈடுபாடுடன் இங்கு பிரார்த்தனை செய்து வருகிறீர்கள். தங்களுடன் நீண்ட நாட்களாக இருந்து பாதித்து வந்த தீயசக்தி ஒன்று இதற்குமேல் தங்களுடன் இருக்க முடியாமல் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டதால் கோபம் கொண்டு தங்கள் குழுவினரை பாதிக்க நினைத்தது. யாம் உடனிருந்து தங்களனைவரையும் காப்பாற்றினோம். தங்களனைவரின் அருட்பெருஞ்ஜோதியரின் மீதுள்ள பக்தியும் என் மீதுள்ள நம்பிக்கையும் தான் தங்களை காப்பாற்ற வழிவகை செய்தது. இதற்கான சாட்சியம் சிறிது நேரத்தில் கிடைக்க பெறுவீர்கள்” என்றார்.

அதற்கேற்றார் போல் எங்களுக்கு அடுத்ததாக உள்ளுர் பெண்மணி ஒருவர் நீச்சல் தெரிந்தவர் நீரோடையில் இறங்கி குளித்திருக்கிறார். அவரை யாரோ பிடித்து தள்ளியது போல் உணர்ந்து நீரோடையில் விழுந்து, முகம், கைகள், கால்கள் எல்லாம் அடிப்பட்டு சிராய்ப்பு இரத்த காயங்களுடன் சித்திவளாக மளிகை வந்து தமது அனுபவத்தை எல்லாரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்.

எங்கள் குழுவினர் அனைவரும் இன்னும் அதிக நம்பிக்கையுடனும் ஈடுபாட்டுடனும் பிரார்த்தனை செய்து வள்ளல் பெருமானின் அருள் சக்தியை எண்ணி மகிழ்ந்தோம்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க சுபம்.

(இந்த அனுபவ வெளிப்பாட்டு கட்டுரை சென்னையிலிருந்து வெளியாகும் “தீபச்சுடர்” மாத இதழில் (அக்டோபர் 2009) வெளியிடப்பட்டது)
-வெளிப்பாடு தொடரும்

என்றென்றும் சன்மார்க்க பணியில்
ஜோதிமைந்தன் சோ. பழநி