வாழ்கின்ற வள்ளலார் - 7
அருட்பேறதுவே அரும்பெறற் பெரும்பே
றிருட்பேறறுக்குமென்றியம்பிய சிவமே
அகவல்-989-990
யாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் கட்டளையாலும் ஞான குரு வள்ளல் பெருமான் அவர்களின் வழிகாட்டுதலாலும் சமய தேவர்களை கடந்து அருட்பெருஞ்ஜோதியரை வணங்க ஆரம்பித்தபோது பெருமான் அவர்களிடம் எமக்கு இட்டபணி யாது என சத்விசாரம் செய்கையில் வள்ளல் பெருமான் அவர்கள்
உலகினில் உயிர்களுக்கு உறுமிடையூறெலாம்
விலக நீயடைந்து விலக்குக மகிழ்க
சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக
உத்தமனாகுக ஒங்குக
என்று ஆண்டவர் எமக்கு கூறியதையே உமக்கும் கூறுகிறோம் அதையே வாழ்க்கையின் இலக்காக கொண்டு செயல்படுக என்றார். யாம் எப்படி உயிர்களின் இடையூறுகளை களைவது என வினவுகையில், “நீங்கள் எங்கும் தேடிச் செல்ல வேண்டாம், உங்களை நாடி வரும் அன்பர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை களைந்தால் போதுமானது, அதுவே எதிர்காலத்தில் சன்மார்க்க சக்தியின் சாட்சியமாக அமையும் அவ்வபோது அதற்கு தேவையான அருள் சக்தி ஆண்டவரிடம் விண்ணப்பித்து எமது மூலமாக பெற்றுக் கொள்ளலாம், மேலும் தங்களுக்கு ஏற்படும் அருளியல் சந்தேகங்களுக்கு எம்மிடமே நேரிடையாக சத்விசாரம் செய்து விடை பெற்றுக் கொள்ளுங்கள். அதற்காக எங்கும் தேடி அலைந்து கால விரயம் செய்ய வேண்டாம்” என அருளினார்.
வள்ளல் பெருமான் அருட்கட்டளைகளை மனதில் கொண்டு செயல்பட்டு அகவல் பாராயணத்தாலும், மகாமந்திர வழிப்பாட்டாலும், அருட்பெர்ஞ்ஜோதி ஆண்டவரை வணங்கி வருகையில், சில நாட்களில் வள்ளல் பெருமான் அவர்கள், “தங்களுக்கு இருட்பேறு விளக்கும் சக்தியை வழங்கினோம் ஆனால் அதற்கு மகாமந்திரத்தில் இரண்டாவது இடத்தில் தனிப்பெருங்கருணை என்ற வார்த்தையை பயன்படுத்தி உபயோகியுங்கள், பெயர் குழப்பம் வரக்கூடாது என்பதால் அந்த மந்திர அமைப்புக்கு தாரக மந்திரம் என்று பெயர் வழங்கி பயன்படுத்துங்கள்” என்று கூறினார்.
அதன்பிறகு இருட்பேறு பாதிப்பு ஏற்பட்ட சில மனிதர்களும் வள்ளல் பெருமான் வழி காட்டுதலில் எம்மை வந்து சந்திக்க ஆரம்பித்தார்கள். வருகின்ற அன்பர்களுக்கு எம்மால் தாரக மந்திரம் பயன்படுத்தப்பட்டு பாதிப்பு நீங்க பெற்றார்கள்.
எம்மால் இதை அப்படியே பின்பற்ற மனம் இடம் கொடுக்கவில்லை எனவே வள்ளல்பெருமானிடம் சத்விசாரம் செய்ய ஆரம்பித்தோம்
“ஐயா மனிதனின் மனத்தெளிவு குறைந்து குழப்பமான தன்னை மீறிய செயல்களுக்கு ஆன்மிக கடவுள் நம்பிக்கை உடைய மனிதர்கள் அத்துமீறிய ஆன்மாக்களின் செயல்பாடுகள், பேய் பிசாசுக்களின் ஆக்கிரமிப்புகள் என்றும் கடவுள் மறுப்பார்கள் என்பவர்களும் மனோத்தத்துவ நிபுணர்களும் இது மூளையின் பாதிப்பு என்றும் மருத்துவ பாதிப்பு என்றும் கூறி உலகம் முழுவதும் கடுமையான கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தி பொது மக்களை குழப்பி வருகிறார்கள். மேலும் சில உபாயக்காரர்கள் மாய மந்திரம் எனக் கூறி மக்களை பயமுறுத்தி பணம் பறித்து வருகிறார்கள், இந்த சூழலில் எம்மையும் இருட்பேறு விலக்கும் சக்தியை வழங்கி பாதிப்புகளை நீக்கும் தன்மையை வழங்கி உள்ளீர்கள்.
மனிதர்களூக்கு யாம் கூறினால் பாதிப்புகளும் நீங்குகிறது. யாம் தொடர்ந்து இந்த பணியை செய்கையில் எம்மிடமும் விஞ்ஞான உலகத்தால் கேள்விகள் கேட்கப்படும் அது சமயம் யாம் அவர்களால் விடைகளை காண இயலாத வகையில் எமது அனுபவத்தை எடுத்து வைக்கும்பொருட்டு சரியான சாட்சியத்தை உண்மையாக பேய் பிசாசு பிரம்மராட்ச்சத தன்மையுடைய ஆன்மாக்கள் இருந்தால் தாங்கள் வழங்க வேண்டும்” என்று கூறினோம்.
வள்ளல் பெருமான், “உரிய நேரத்தில் வழங்குவோம்” என்றார்.
இந்த சூழலில் ஒருநாள் விடியற்காலை ஐந்து மணியளவில் தொலைபேசி அழைத்தது. தொலைபேசியில், “ஐயா எங்களின் மூத்த மகனுக்கு பிரம்ம ராட்சசன் பிடித்து விட்டது எங்களை இன்று இரவு முழுக்க தூங்க விடாமல் பாடாய் படுத்துகிறான் தாங்கள்தான் சரி செய்ய வேண்டும். எந்த மந்திரவாதிக்கும் கட்டுப்படமாட்டேன் என்று மிரட்டுகிறான், தங்களைப் பற்றி கூறியதும் உடனே அவரை பார்க்க வேண்டும் அழைத்துப் போங்கள் என்று அதற்கும் தகராறு செய்கிறான்” என்று அந்த இளைஞனின் தாயார் கூறினார்கள். பின்னணியில் அந்த இளைஞன் கர்ண கடூரமாக ஆரவாரத்துடன் சத்தமிடுவது கேட்டது.
யாம் அந்த அம்மையாரிடம் ஜோதிமைந்தன் டெலிபோனில் பேசுகிறார், நீ அவரிடம் பேசு என்று தொலைபேசியை தங்கள் மகனிடம் கொடுங்கள். அதற்கு முன் வள்ளலாரைப் பற்றியும் யாம் அவருடைய பக்தன் என்பதைப் பற்றியும் கூறுங்கள் என்றோம். அவரும் அவ்வாறே செய்தார்கள்.
யாம் எம்மை அந்த ஆன்மாவிடம் முறையாக அறிமுகப்படுத்திக்கொண்டு, “நீவிர் யாராக இருப்பினும் எம்மை சந்திக்கும் வரை இதுப்போல் மிரட்டவோ தகராறு செய்யவோகூடாது இது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மீது ஆணை” என்றோம். அந்த ஆன்மாவும் உடனே பணிவுடன், “ஐயா நான் எதுவும் தப்பாக சொல்லவில்லையே தங்களை பார்க்க வேண்டும் அழைத்துப் போங்கள் என்றுதானே கூறினோம்” என்று கூறி அடங்கியது.
யாமும் அந்த இளைஞரின் தாயாரிடம், “தைரியமாக அழைத்து வாருங்கள் இன்று மாலை ஐந்து மணிக்கு சந்திபோம்” என்று கூறினோம். அன்று மாலை பாதிக்கப்பட்ட இளைஞரை அவர் குடும்பத்தினர் அழைத்து வந்தார்கள். யாம் தொலைபேசியில் பேசிய பிறகு எந்த பிரச்சனையும் உருவாகவில்லை என்று கூறினார்கள் அந்த இளைஞரும் அமைதியாக இருந்தார். தமக்கு நிகழ்ந்தது எதுவும் தெரியாது என்றார்.
யாம் அந்த இளைஞரை மகாமந்திரபீட வாயிலின் முன் அமர்த்தி தாரகமந்திரம் கூற அந்த ஆன்மாவானது வெளிப்பட்டு இளைஞைர் மூலம் பேச ஆரம்பித்தது . யாம் அந்த ஆன்மாவுடன் ஆன்ம நிலை பற்றி சத்விசாரம் செய்தோம் இறுதி நிலையில் அந்த ஆன்மாவானது தமக்கு மனிதப்பிறவி வள்ளல்பெருமானிடம் கேட்டு பெற்று தாருங்கள் யாம் இவரை விட்டு போய் விடுகிறேன் என்றது. யாம் வள்ளல் பெருமான் அனுமதியுடன், “நீ வடலூர் சென்று எந்த மனிதர்களிடமும் அத்துமீறி பிரவேசிக்காமல் அருவ நிலையிலேயே ஆண்டவரை நோக்கி பிரார்த்தனை செய் உரிய காலத்தில் வள்ளல் பெருமான் உமக்கு பிறவியளிப்பார்” என்று கட்டளையிட்டோம். அந்த ஆன்மாவும் அவரை விட்டு நீங்கியது. அவரும் பூரண குணம் அடைந்தார்.
யாம் வந்த அன்பர்களிடம் என்ன நடந்தது என வினவினோம். அவர்கள், “ஐயா இரவு தகராறு செய்து எங்களை தம்மைச்சுற்றி அமருமாறு கட்டளையிட்டான். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தவிர மற்றவர்கள் தூங்கக்கூடாது, என் கட்டளையை மீறி யாராவது தூங்கினால் அவர்களை பிடித்துக்கொள்வேன் என்று மிரட்டினான். இரவு முழுக்க தூங்காமலேயே விழித்திருந்தோம், யாராவது அங்கிருந்து எழுந்தால் அவர்களைப் பார்த்து எழுந்தால் அழித்து விடுவென் என்று மிரட்டினான். அனைவரும் பயந்துபோய் அவனைச்சுற்றி அமர்ந்திருந்தோம். நாங்கள் பேச்சு கொடுத்தால் பேசுகிறான் இல்லையென்றால் கத்துகிறான். இந்த நிலையில் நாங்கள் அவனையே கவனித்தவண்ணம் அமர்ந்திருந்தோம்.
அப்போது திடீரென்று இவன் சாய்ந்துவிட்டான். நாங்கள் அனைவரும் ஹாலில் அமர்ந்திருந்தோம். உள் அறையிலிருந்து திடீரென்று கர்ண கடூரமாக கத்துகின்ற ஓசை கேட்டது. இவனை அப்படியே விட்டுவிட்டு உள் அறைக்கு ஓடினோம். அங்கே இவன் தம்பி (அவரும் ஒரு இளைஞர்) பாயில் அமர்ந்து கொண்டு எங்களைப் பார்த்து கத்தினான், “நான் அவ்வளவு தூரம் சொல்லியும் இவன் எனக்கு தெரியாது என நினைத்து இங்குவந்து தூங்க முயற்சித்தான்,எனவே அவனை விட்டுவிட்டு இவனைப் பிடித்துக் கொண்டேன். இவனை விட்டு போகமாட்டேன், என்கட்டளையை மிறுகிறீர்கள்” என மிரட்டினான். நாங்கள் பயந்துபோய் வேண்டாம் அப்படி செய்யாதே நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறு செய்கிறோம் என்றோம். அதற்கு அவன் நீங்களனைவரும் என்னை ஏமாற்றாமல் விழித்திருந்து பேசுவதாக இருந்தால் இவனை விட்டு விலகுகிறேன். இல்லையென்றால் நீங்கள் எங்கு சென்றாலும் இவனை விடமாட்டேன் என்று கூறினான். நாங்கள் அப்படியே விழித்திருக்கிறோம் என்று கூறியவுடன் சிறியவன் மயங்கிவிழ மீண்டும் பெரியவனிடம் பிரம்மராட்சசன் செயல்பட்டான். பிறகுதான் உங்களை தொடர்பு கொண்டோம்” என்றார்கள்.
வள்ளல் பெருமான் அவர்களும் ஆன்மாக்களின் அத்துமீறிய செயல்பாட்டுக்கு இதுவே சாட்சியம். இதற்கு விஞ்ஞான ரீதியாக ஆன்மா இல்லையென்ற அடிப்படையில் யாரும் விளக்கமளிக்க முடியாது எனக்கூறியருளினார். யாமும் இந்த செயல்பாட்டின் நிகழ்வின் மூலம் இருட்பேறு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு ஏற்பட்ட உண்மை சாட்சியமாக மனநிறைவு பெற்றோம்.
இந்த நிகழ்வுக்கு சாட்சியமாக வள்ளல் பெருமானால் ஆட்கொள்ளப்பட்ட அண்ணன் சசிகுமார் அவர்களும் தம்பி சத்தியமூர்த்தி அவர்களும் தம் குடும்பத்தினர், சுற்றத்தார்களுடன் தற்போது வள்ளல் பெருமான் வழிகாட்டுதலின்படி சுத்த சன்மார்க்க வாழ்க்கை இயல்பை முழுமையாக செயல்படுத்தி வருகிறார்கள் என்பதை சன்மார்க்க சக்திக்கும் வெளிப்பாட்டுக்கும் ஒருசாட்சியம் என்பதை அகமகிழ்வுடன் சன்மார்க்க உலகிற்கு சமர்ப்பிக்கிறோம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க சுபம்.
-வெளிப்பாடு தொடரும்
என்றென்றும் சன்மார்க்க பணியில்,
ஜோதிமைந்தன் சோ. பழநி
